தாய்மை

இலக்கியம் இஸ்லாமியக் கவிதைகள் கவிதைகள் (All)

 
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு
ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விட பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?
இது பெண்மையின் மறுபிறவி…!
பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் – ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!
குழந்தையாய்…
சிறுமியாய்…
குமரியாய்…
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்!
நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!
வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் – ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் – ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே…!
தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் – எல்லாவற்றையும் விட
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *