General News

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் :துல்ஹஜ்

 

மாதத்தின் சிறப்பு:

      நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானதாகும். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதையும் விடவுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம்! என்றாலும் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிர், பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்ற பின்னர், அதில் எதனையும் திருப்பிக் கொண்டு வரவில்லையோ அவரின் நற்செயலைத்தவிர! என்று கூறினார்கள். (புகாரி)

       துல்ஹஜ் பிறை 9 ஆம் நாள் அரஃபா நாளாகும். அபூகதாதா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அரஃபா நாள் நோன்பு பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: அதற்கவர்கள் அன்று நோன்பு வைப்பது, முந்திய ஓராண்டு பாவங்களையும் அழித்து விடுகிறது என்று கூறினார்கள். (முஸ்லிம்)

        துல்ஹஜ் பிறை 10 ஆம் நாள் ஹஜ்ஜுப் பெருநாள். குர்பானி கடமையானவர்கள் அதை நிறைவேற்றுதல் அவசியம். பெருநாள் தொழுகையை நிறைவேற்றியதிலிருந்து துல்ஹஜ் பிறை 13 ஆம் நாள் வரை குர்பானி கொடுக்கலாம்.

முக்கிய நிகழ்வுகள்

நபி(ஸல்) அவர்களின் ஹஜ்:

        ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு நபி(ஸல்) அவர்கள் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றியவர்களாக, மக்களுக்கு ஹஜ்ஜின் வழி முறைகளையும் மார்க்க சட்ட திட்டங்களையும் கற்றுக்கொடுத்தார்கள். ஹஜ்ஜின் போது அவர்கள் மக்களுக்கு செய்த உபதேசங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும்.

இரண்டாவது அகபா ஒப்பந்தம்:

       நபித்துவத்தின் 13-வது ஆண்டு துல்ஹஜ் மாதத்தில் ஹஜ்ஜுக்காக மதீனாவிலிருந்து 73 நபர்கள் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் வந்தார்கள். அவர்களுடன் நுஸைபா பின்த் கஅப் உம்முஅம்மாரா, அஸ்மா பின்த் அம்ரு இப்னு அதீ ஆகிய இரு பெண்களும் வந்திருந்தார்கள்.

       முன்பு, சென்ற ஆண்டு (நபித்துவத்தின் 12-வது ஆண்டு) ஒப்பந்தம் நடந்த ”அகபா” என்ற அதே இடத்தில் மதீனாவாசிகள் கூடியிருந்தனர். நபியவர்களின் உபதேசத்திற்குப்பின், மதீனாவாசிகள் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதாகவும், எத்தகைய சூழ்நிலையிலும் இஸ்லாத்திற்காக தங்களின் உயிர், பொருள், உடமைகளை தியாகம் செய்யத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்களை மதீனா வர அழைப்பு விடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளில் 12-நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மற்றவர்களுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். இவர்களில் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 9-பேரும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 3-பேரும் இருந்தார்கள்.

சவீக் யுத்தம்:

       பத்ரு யுத்தத்தில் மக்கத்து குரைஷிகள் தோல்வியடைந்து, அவர்களில் பெரும் தலைவர்களில் சிலர் கொல்லப்பட்டு விட்டனர். அடுத்த தலைவராக பொறுப்பேற்ற அபூசுஃப்யான், இதற்கு முஸ்லிம்களை பழிவாங்காமல் நான் குளிப்பதில்லை தலைக்கு எண்ணெய் இட்டுக் கொள்வதில்லை என சத்தியம் செய்து கொண்டார். தனது சத்தியத்தை நிறைவேற்ற 200 ஒட்டகைப் படையோடு மதீனா வந்து, நள்ளிரவில் முஸ்லிகளின் இல்லங்களைத் தாக்கி சேதப்படுத்தியதோடு அன்சாரிகளில் ஒருவரை கொலை செய்தும் விட்டனர்.

        இதன் விபரம் முஸ்லிம்களுக்குத் தெரிந்ததும் அவர்களைத் தாக்கப் புறப்பட்டார்கள். முஸ்லிம்களின் படை வருவதையறிந்த அபூசுஃப்யான் தனது படைகளோடு திரும்பி ஒட ஆரம்பித்தார். அப்படி ஓடும்போது அவர்கள் உணவுப் பொருளாக எடுத்து வந்த ’சவீக்’ என்னும் சத்துமாவு மூட்டைகளை பதற்றத்தில் விட்டு விட்டு ஓடினர். எதிரிகள் தப்பிச் சென்று விட்டதால் அவர்கள்i விட்டுச் சென்ற மாவு மூட்டைகளை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டனர். இதனால் இதற்கு “சவீக் யுத்தம்” என்று பெயர் வந்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரி 2, துல்ஹஜ் மாதத்தில் நிகழ்ந்தது.

அபூபக்கர்(ரழி) அவர்களின் ஹஜ்:

        நபி(ஸல்) அவர்களுக்கு பின் முதல் கலீஃபாவாக பெறுப்பேற்றுக் கொண்ட அபூபக்கர்(ரழி) அவர்கள் ஹிஜ்ரி 12-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவு செய்தார்கள்.

உமர்(ரழி) அவர்களின் வீர்மரணம்:

         ஹிஜ்ரி 23, துல்ஹஜ் 25-ஆம் நாள் புதன் கிழமை காலை இரண்டாம் கலீஃபா அமீருல் முஃமினீன்  உமர்(ரழி) அவர்களை, அபூலுஃலூ அல்ஹபஷி என்பவன் கத்தியால் குத்தினான். இதனால் ஷஹீத் (வீரமரணம்) அடைந்தார்கள். அப்போது அன்னாரின் வயது 60 ஆகும். அவர்களின் சிறப்பான ஆட்சிக்காலம் 10 ஆண்டுகள், 6 மாதங்கள், 5 நாட்கள் ஆகும்.

உஸ்மான்(ரழி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்படுதல்:

       உமர்(ரழி) அவர்கள் தங்களின் மரண நேரத்தில், பெரும் சஹாபாக்களில் சிலரைக் கொண்டு ஆலோசனக் குழு அமைத்து அடுத்த கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கக் கூறினார்கள். அக்குழுவில் அலி இப்னு அபூதாலிப்(ரழி), உஸ்மான் இப்னு அஃப்பான்(ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரழி), ஜுபைர் இப்னு அல்அவாம்(ரழி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரழி) ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். இக்குழுவினர் துல்ஹஜ் மாத இறுதியில் உஸ்மான் (ரழி) அவர்களை 3-வது கலீஃபாவாக தேர்ந்தெடுத்தார்கள்.

உஸ்மான்(ரழி) அவர்களின் வீரமரணம்:

         ஹிஜ்ரி 35, துல்ஹஜ் 18-ஆம் நாள் வெள்ளிக்கிழமை உஸ்மான்(ரழி) அவர்களை சதிகாரர்கள் கொலை செய்ததின் காரணமாக வீரமரணம் அடைந்தார்கள். அப்போது அவர்களின் வயது 82 ஆகும். அவர்களின் சிறப்பான ஆட்சிக்காலம் 11 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்களாகும்.

 

 

 

 

தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி ..

 


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button