தமிழ்ச் சாவதோ
தமிழ்ச் சாவதோ
இந்தியை மட்டும் எதிர்த்து விட்டு
இந்து இந்தியம் ஏற்கும் அறிவிலா
துந்தன் செயல்தான் உருப்படி ஆகுமோ
வந்த ஆங்கிலம் வாயில் தோறும்
குந்தி யிட்டு குரல்வளை நெரித்தால்
செந்தமிழ் மொழிதான் சாகா திருக்குமோ
அரபு உருதென அயலவர் மொழியில்
உறவுகள் பெயர்தான் உயிர்த்து இருந்தால்
நற்றமிழ் மொழிதான் நலிந்து விழாதோ
கற்பது எல்லாம் கலப்புச் சொல்லுடன்
சுற்றிச் சுழன்றால் செம்மொழி எழுத்தினைப்
பற்றிடா திருந்தால் பழந்தமிழ் வாழுமோ
அன்னையும் தந்தையும் அறத்தமிழ்க் கெதிராய்
பின்னே வந்ததும் பேசிடா மடந்தையாய்
இன்றும் தொடர்வதோ எதற்குத் தமிழென
தின்னும் விலங்கெனத் திரிவதோ வான்புகழ்
முன்னைத் தமிழ்தான் மூச்சுப் பேச்சிலா
இனத்தார் மகிழ இறந்து புதைவதோ
மொழியும் இனமும் மீட்சிக் கொள்ள
இழிவாய் இருப்பதை எழுத்தால் கொல்ல
வழியை சமைப்போம் வாராய்த் தமிழனே
பழிச்சொல் அற்றப் பிறவியை வென்றிட
தொழுதிடும் மொழியாய்த் தமிழை ஆக்கிட
எழுவோம் தனித்தமிழ் இயக்கமாய் மாறியே
பரணிப்பாவலன்
தமிழினப் பேரியக்கம் 787118730