யாரையும் குறைவாக எடை போட வேண்டாம்.. !

Block 6 பயனுள்ள தகவல்கள்

யாரையும் குறைவாக எடை போட வேண்டாம்.. !

விஞ்ஞானி ஒருவர், தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.

அருகில் கடை ஏதும் இல்லை. குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும்போது. கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டன.

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கர் அந்த வழியாக வந்தார்.

இவரைப் பார்த்து “ஐயா என்ன ஆச்சு” என்று கேட்டார்,.

 இவரோ, இவரிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம் என்றார்.

அந்த வழிப்போக்கர் கிளம்பினார். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு யோசனை தோன்றியது.

“இந்த சாக்கடை குட்டையில் இவரை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவரையே இறங்கச் சொல்லலாம்” என்று எண்ணி அவரிடம்,” நான் பணம் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள்”- என்றார்..

“ஒ! இதுதான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபணை ஏதும் இல்லை. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்டைக் கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள், பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர்.  

‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டேனே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி.

நீதி : யாரையும் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது. அந்தத் தவறைச் செய்துவிடாதீர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *