கர்பலா – இஸ்லாத்தின் வரலாற்று வடு!! – கவிஞர் அத்தாவுல்லாஹ்
கர்பலா-
உயிர்களை விதைத்த
நீரோட்டக் களம்
உயிர்த் தெழும் தியாக வாழ்க்கைக்கு
அண்ணல் பெருமானின்
தங்கள் இரத்தம்
பிழிந்து பூசிய
உயிரோட்டக் களம்!
அலங்காரத் தலைமுடிகளில்
ஆணவப் புழு புழுத்த மூளைகளில்
யஜீதின் முள் முளைத்த கர்வங்களுக்கு
கை கொடுக்க மறுத்த
கண்ணியங்களின் சுத்தம்!
பூவின் இதழ்களைப்
பொசுக்கிப்போட – அங்கே
காட்டுப் பன்றிகளே
கனலேந்தி வந்தன !
ஆனாலும்-
அடக்கு முறைகளால்
அடக்க இயலாத
ஆன்மீக தத்துவம் –
அங்கே பூத்தெழுந்தது !
வேடந்தாங்கிகளே
வேடர்கள் ஆனதால்-அங்கே
பச்சைப் புறாக்கள்
பலியாக்கப் பட்டனர் !
பொய் எழுத்துக்கள்
போட்டுக் கொடுத்த-கள்ளக்
கை எழுத்துக்களால்
சாய்க்கப் பெற்றனர்
இஸ்லாத்தின் உயிர் எழுத்துக்கள் !
ஆம்- நம்
நாயகப் பெருமானின் வழி வழி வந்த
பயிர் பயிர் வித்துக்கள் !
கர்பலா-
காலம் காலமாகக்
காயப் பட்டுக் கிடக்கும்
கறுப்புக் களம்
அண்ணல் நபிகள்
முத்தமிட்டு முத்தமிட்டுக்
கொஞ்சி மகிழ்ந்த
குலக் கொழுந்துகளின் உயிர் அறுத்து
ஒவ்வொன்றாய்
உறுப்புச் சிதைத்த களம்!
கர்பலா –
இஸ்லாத்தின் வரலாற்று வடு!
என்றென்றும் காய முடியாத
இரத்த வாசனையொடு !
மாறுமா ? –
அந்த ரணம்
இனி என்றேனும் ஆறுமா?