வீடென்று எதனை சொல்வீர்...? – இப்னு ஹம்துன் ஃபக்ருதீன்
வீடென்று எதனை சொல்வீர்…?
என்னடா மாலன் கவிதை தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்க்கிறீர்களா? ஒரு பிரபல
இணைய மடலாற்குழுமத்தில் வீடு என்ற தலைப்புக்கேற்ப நண்பர் இப்னு ஹம்துன் எழுதிய
கவிதை இது.. இங்கே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..
*
வீடென்ப வீடில்லை; வீடென்று சொன்னாலே
ஓரமைதி மனதுள்ளே குடைவிரிக்கும் இவ்வுலகில்
கூடொன்றில் பறவையினம் கொள்கின்ற மனமகிழ்ச்சி;
குளக்கரையின் தென்றல்போல் குளிர்ச்சியினை மனங்காணும்
தேடல்கள் வீட்டுக்கே! தெள்ளியநல் வழிமுறையை
தேர்ந்தெடுத்து நடப்பவர்க்கு தித்திக்கும் வீடுபேறு!
மாடங்கள்; மாளிகைகள்; மண்குடிசை மதிப்பீட்டில்
மனம்ஏற்றால் அதுவீடு! மற்றபணம் வெறுந்தாளே!
கருவாகத் தாய்வயிற்றில் குடியிருந்தோம்; காலத்தே
கண்விழித்தோம் மண்ணிதிலே! கவினுலகம் மறுவீடு
திருவாக ஆனபின்னர் தேடுகின்றோம் தனிவீடு.
திக்கெல்லாம் அலைந்தாலும் தலைசாய்க்க இடம்வேண்டும்
விருப்பந்தான் வீடாகும்; வெறுப்புகளைப் புறந்தள்ளி
விழைகின்ற நலம்யாவும் வீட்டுக்குச் சேர்க்குமுன்னே
வருகைக்குச் சான்றளிக்க வீடொன்று எழுப்பிடுவோம்
வீடென்றால் வீடில்லை; வியப்பளிக்கும் வரலாறே!
எண்ணமதன் வீடாகும் இதயந்தான்; ஏற்றமிகு
எந்தமிழே வீடென்பேன் கவிதைக்கு. – பெண்ணவளின்
கண்ணதனை வீடென்பார் காதலிப்பார். – கடவுளவன்
கருணையிலே உறைபவர்தாம் வேறெதனை வீடென்பார்?
வண்ணமதன் வீடென்றால் ஓவியந்தான் – வாழ்விதிலே
வகைவகையாய் வீடுண்டு; வசிப்பனவும் நினைவுகளே!
சின்னமகள் சிரிப்பழகில் சிலநேரம் வாழ்ந்துவிட்டால்
சிந்தனையில் வீடென்று சிறப்பதுவும் வேறிலையே!
கலைநட்பும் வீடாகும்; கடுமனதும் கனமிழக்க
கண்ணீரே மனங்கழுவும் கடவுளவன் வீட்டினிலே!
இலக்கிங்கே வீடென்றால் எல்லாமும் வீடுகளே
இலைப்புழுவா? விண்மீனா? எண்ணம்போல் வாழ்வாகும்
நிலைகொள்ளும் ஓரிடமே நிம்மதியின் வீடென்போம்
நிலையாமை இவ்வாழ்க்கை நிதர்சனமாய் அறிந்தபின்னே
விலையில்லா வீடென்றால் விண்ணகம்தான் உள்ளபடி
உயர்வான வீட்டுக்கே விழைந்திடுவோம் பண்புடனே!
–
பஃக்ருத்தீன் |