கவிதைகள் (All)

நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)

நெய்யாக உருகாதோ நெஞ்சம்…
 வாள்முனையில் கொன்றொழிக்க
வந்தவனே நடுநடுங்க
ஆள்வீரம் காட்டுபவர்
அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1.
 
கல்சுமப்பார், மண்சுமப்பார்,
கடுந்துயரம் பொறுத்திடுவார்
அல்லாஹ்வின் புகழிசைப்பார்
அனைவருக்கும் நலமுரைப்பார்………2
 
சிந்தனையை மதித்திடுவார்
செல்வத்தை மதித்தறியார்
எந்தநிலை என்றாலும்
இறைநினைவை இழந்தறியார்………….3
 
நல்லெண்ணம் கொள்வதற்கே
நாயன்அவன் முதற்தகுதி
உள்ளவனென்(று) உணர்த்துபவர்
உலகிரண்டின் நாயகமே!…………………..…4
 
புகழ்கொண்ட சிகரத்தில்
போயிருக்கும் வேளையிலும்
புகழெல்லாம் அல்லாஹ்வின்
புகழ்”என்பார் புனிதரிவர்………………..…….5
 
செங்குருதி சிந்திடினும்
சிரத்தில்அடி பட்டிடினும்
வெங்கொடுமை இணைவைப்பை
வீழ்த்திடுவார் நாயகமே!…………………..….6
 
அசத்தியத்தை அழித்தஅவர்
அல்லாஹ்வே உவந்தளித்த
நிசத்தைநிலை நாட்டுவதால்
நீணிலத்தை நிமிர்த்திடுவார்…………..……7
 
எழுத்தேனும் சொல்லேனும்
இறைத்தூதர் வாயுரைத்தால்
பழுத்ததொரு சத்தியமே!
பயன்கொள்ளும் பாருலகே!!…………………8
 
அச்சமென ஒன்றறியார்
அல்லாஹ்வுக் கெதிரென்றால்
துச்சமென ஊதிடுவார்
தூயதிரு துணிவுடையார்………………………9
 
அல்லாஹ்வின் பேரன்பை
அடைந்திடவே விரும்புமவர்
எல்லார்க்கும்-குழந்தைகட்கும்
இதயத்தால் அன்புசெய்வார்……………..…..10
 
நேரத்தை நிர்வகிப்பார்
நெருக்கடியில் தடுமாறார்;
பாரங்கள் சுமந்தாலும்
பக்தியுடன் தொழுதிடுவார்……………………..11
 
மன்னித்தே தண்டிப்பார்!
மனங்களையே வென்றெடுப்பார்
உன்னிப்பாய் உணர்பவர்கள்
உவந்துவந்து தோற்பாரே……….……………….12
 
தன்னடக்கச் சின்னமவர்
தாராள எண்ணமவர்
முன்னெடுக்கும் மாதிரிக்கே
முடிசூடா மன்னரிவர்……………………………….13
 
கடன்பட்டும் அறம்செய்வார்,
கருணையினால் உரம்பெய்வார்
உடன்பட்டார் மீதுயரும் 
உட்பாசம் காட்டிடுவார்!……………..…………….14
 
பகையறியார், வெறுப்பறியார்
பண்புகளைத் தாமறிவார்
மிகையுரையா மேலவரை
மேவிடுவோம் காலம்வரை………………….…..15
 
தவறான நம்பிக்கை
தந்தறியாத் தலைவரிவர்
கவர்வதுபோல் கவர்ந்திடவே
காசினியில் யாருமுண்டோ?……………….…..16
 
தாம்ஆற்றும் பணியெதிலும்
தடுமாற்றம் ஏதுமிலார்
ஏமாற்றும் வேலைஇலார்,
இவரன்றோ தனித்தலைவர்…!……………………17
 
இன்னாசெய் மக்கள்தமை
எதிர்த்தொழிக்க வாய்ப்பிருந்தும்
நன்னயத்தைச் செய்(து,)அவர்க்கும்
ஞானம்வரச்செய்வாரே!………………………………18
 
உறவினர்தம் நம்பிக்கை
ஒன்றுபடா திருந்தாலும்
பரிவோடே அவர்உறவைப்
பாராட்டும் நாகரிகர்………………….…………………..19
 
உடன்பிறந்தார் தமைவிடவும்
உவந்(து), உவந்து  நேசிக்கும்
படையொன்றை உருவாக்கிப்
பாரெங்கும் பரப்புபவர்!……………….…………………20
 
சிறுபறவை சிறகசைப்பில்
சிறப்பெதுவும் இருந்தாலும்
உறும்கல்வி உரைத்திடுவார்
உற்றுணரும் நாயகமே………………………………….21
 
சொற்சுத்தம், செயல்சுத்தம்,
சொந்தஉடல் அதுசுத்தம்
பற்சுத்தம் என்றுரைத்த
பலசுத்தம்,பரிசுத்தம்!……………………………………..22
 
வெற்றிவரும் வேளையிலும்
விருப்பமுடன் கஃபாவை
சுற்றிவரும் அவர்திருவாய்
சொல்வது ’குர் ஆன்’வசனம்…………………………..23
 
வாள்பலத்தால் தோள்பலத்தால் 
வரக்கூடும் சிலவெற்றி
போல்அல்ல இறையருளால்
புனிதர்இவர் பெறும்வெற்றி……………………………..24
 
தீமைக்குத் தீமையினால்
தீர்வில்லை;நன்மையையே
சேமிப்பார்;அருள்செய்வார்
சிறந்தென்றும் விளங்குகிறார்……………..……………25
 
முந்திஸலாம் உரைத்திடுவார்
முதியவரோ, குழந்தைகளோ
சந்திப்போர் மகிழ்வதிலே
சாதிப்பார் சாந்த நபி!……………………..…………………….26
 
உண்டிடவும் பருகிடவும்
உடல்-உளத்தைப் பேணிடவும்
அன்போடும் பரிவோடும்
அறிவுரைகள் கூறிடுவார்………………..………………….27
 
மெய்யான அருட் கொடையாய்
மேதினிக்கு வந்தீரே!
நெய்யாக உருகாதோ
நெஞ்சம்உமை நினைக்கையிலே…. ………….……………28 
 
                                                      —ஏம்பல் தஜம்முல் முகம்மது.
**********************************************************************************************************************************************************************************************************
1.பாருலகம்,காசினி-உலகம், (2) நம்பிக்கை-ஈமான்

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button