கட்டுரைகள்

விழிப்புணர்வு வரிகள்

விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன். “நீ எந்த நிலையில் எப்படி இருந்தாலும், உன்னால் முடிஞ்ச ஒரு குண்டூசி நல்லதையாவது, இந்த சமூகத்துக்கு செய்தால் தான், வாழ்க்கை முழுமையடையும்’ என, என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.

இது என் சிந்தனையில், என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஒரு நாள் சினிமா தியேட்டர் வாசலில், என் மனதில் பட்ட நாலு நல்ல வரிகளை சுவரில் எழுதி போட்டேன். படம் முடிந்து வெளியே வந்தவர்கள் அதைப் படித்த பின், சந்தோஷமாக சென்றனர். அவர்களின் சிரிப்பு, எனக்கு ஊக்கத்தை தந்தது. இந்நிகழ்வை தொடர்ந்து பேருந்து நிலையம், சாலை சந்திப்புகள், கடை வீதி என, 30க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சுவர்களில், என் சொந்த செலவிலேயே எழுதுகிறேன்.

கடந்த, 20 ஆண்டுகளாக, இதை ஒரு சேவையாக செய்கிறேன். ஒவ்வொரு வாரமும், சுவர் வாசகங்களை மாற்றியபடி இருப்பேன். ஒவ்வொரு புதன் கிழமை இரவும், சுவற்றுக்கு வெள்ளையடித்து, புதிது புதிதாக எழுதுவேன். இரவு நேரங்களில் எழுதுவதால், இச்சுவர் வாசகங்களை யார் எழுதுவது என, தெரியாது. ஆனால், நான் எழுதுவதைப் பார்த்த சில இளைஞர்கள், என்னைப் போல் விழிப்புணர்வு சுவர் வாசகங்களை எழுத ஆரம்பித்துள்ளனர்.

நான் எழுதிய வாசகத்திற்கான பலனை, என்னால் நேரடியாக காண முடிந்தது. ஒரு முறை குழந்தை இல்லாமல் அவமானத்திற்குள்ளான ஒரு தம்பதி, தற்கொலை செய்ய சென்ற போது, தற்செயலாக நான் எழுதிய, “ஒரு நொடி துணிந்து விட்டால் இறந்து விடலாம்; ஒவ்வொரு நொடியும் துணிந்து விட்டால் வாழ்வில் ஜெயித்து விடலாம்’ என்ற விழிப்புணர்வு சுவர் வாசகத்தை படித்ததும் மனம் மாறி, மருத்துவ பரிசோதனை செய்து குழந்தை பெற்றபின், என்னை சந்தித்தனர். நான் எழுதிய விழிப்புணர்வு சுவர் வாசகத்தை பாராட்டி, பல அமைப்பினர் விருது வழங்கியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button