உலகம்

கத்தாரில் நடந்த சிலம்ப போட்டி : அமீரக மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்து சாதனை

கத்தாரில் நடந்த சிலம்ப போட்டி : அமீரக மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்து சாதனை

தோஹா :

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் ஆசிய ஓபன் சிலம்ப போட்டி கடந்த 27 ஆம் தேதி சிறப்பாக நடந்தது.

இந்த போட்டியில் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இந்தியா, மலேசியா, இலங்கை, குவைத் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சி மைய அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன.

இதில் பங்கேற்ற அமீரக அணி ஒட்டு மொத்தமாக மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தனர். குறிப்பாக அமீரக மாணவிகள் நைனிகா சுதன், கனிஷ்கா சுதன் மற்றும் ஆதன்யா லக்‌ஷ்மணராஜன் தீபிகா ஆகியோர் தலா இரண்டு பதக்கங்களையும், ஆஷா சிதம்பரம் இரண்டு வெண்கல பதக்கத்தையும் பெற்றார்.

அமீரக மாணவர்களில் ஸ்ரீராம் கோமதிநாயகம் தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தையும், பேரினியன் பிரபு அழகபிள்ளை இரண்டு வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.

இவர்கள் அனைவரும் அபுதாபியில் உள்ள பிட்பிரேவ் தற்காப்புக்கலை பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் பரத் பலராமன் வழிகாட்டுதலில் பயிற்சியை பெற்றவர்கள் குறிப்பிடத்தக்கது. இது குறித்து பரத் பலராமன் கூறியதாவது : கத்தார் நாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற ஆசிய ஓபன் சிலம்ப போட்டியில் எங்களது மைய மாணவர்கள் பதக்கங்கள் பெற்று சிறப்பிடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வரும் ஆண்டுகளில் முதல் இடத்தை பெற்று பெருமை சேர்ப்போம். சிலம்ப கலையை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த மையம் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button