இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்!!
நாட்டின் முன்னாள் பிரதமரும், உலகின் தலைசிறந்த பொருளியல் நிபுணர்களின் ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு மன்மோகன் சிங் அவர்களின் மறைவு பெரும் வருத்தமளிக்கிறது.
இரண்டு முறை நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்பணிப்போடு பணியாற்றியவர்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.
உலகமே பொருளாதார நெருக்கடியில் தவித்திருந்த போதும் இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ந்திடாமல் உயர்த்திய மாபெரும் பொருளாதார அறிஞர்.
எளிய பின்னணியில் இருந்து வந்து பொருளாதார பேராசிரியராக, நிதி அமைச்சக செயலாளராக, தலைமை பொருளாதார ஆலோசகராக, நிதியமைச்சராக, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, நாட்டின் பிரதமராக பன்முகத்தன்மையோடு உயர்ந்தவர்.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம், பொருளியல் பட்டங்களை பெற்றவர்.
தலைசிறந்த பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்திய ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்தவர்.
100 நாள் வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் போன்ற தலைசிறந்த சட்டங்களை கொண்டு வந்தவர்.
சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.
இவரது ஆட்சிக்காலத்தில் தான் இந்திய முஸ்லிம்களின் நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய நீதியரசர் ராஜேந்திர சச்சார் அவர்களின் தலைமையிலான கமிட்டி தன்னுடைய அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதற்கு தீர்வாக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் தலைமையிலான ஆணையம் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அரசின் பணிகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்ற பரிந்துரையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததும் இவருடைய ஆட்சிக்காலத்தில் தான்.
தூய்மையான பொதுவாழ்விற்கு சொந்தக்காரர்.
அன்னாரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரிழப்பாகும் என்றும் மன்மோகன் சிங் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டார்.