அ(ம்)ன்புகள்
பூ,பழங்கள், தேங்காய்,ஸ்வீட் பாக்ஸ்…எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டு, பையில் வைத்துக் கொண்டாள் கலா. மகன் குமாரும், மகள் ரமாவும் காரில் அமர்ந்து கொண்டு அம்மாவுக்காகக் காத்திருந்தார்கள்.
பையைக் கவனமாக எடுத்துக் கொண்டு முன்வாசலைப் பூட்ட சாவியை எடுத்த கலாவிற்கு, எதிர்வீட்டு வாசலில் காயத்ரி நின்றிருப்பதைப் பார்த்தவள், உடனே செல்போனை எடுத்து”அருணா, எம்பையனுக்கு ஒரு நல்ல வரண் வந்திருக்கு, இதையே பேசி முடிச்சிருலாம்னு கிளம்பிட்ருக்கோம். இந்த நேரம் பார்த்து உம்பொண்ணு வாசல்ல வந்து நிக்கிறா, கொஞ்சம் உள்ளே கூப்பிடு, கல்யாணமான ரெண்டு மாசத்திலேயே புருசன ஆக்சிடென்ட்ல பறிகொடுத்துட்டு வந்தவ மொகத்துல முழுச்சிட்டுப் போனா, போற வேலை நல்லாவா இருக்கும்? நீங்களாத்தான் புரிஞ்சிக்கணும்” கலா பேசி முடித்ததும்,
“இல்ல கலா, அவ ஃப்ரன்டு வர்றாளாம், லொகேசன் அனுப்பியும் கண்டுபிடிக்க முடியல, கொஞ்சம் வெளில வா, பக்கத்தில வந்துட்டேன்னு சொன்னாளாம், அதான் நிக்கிறா… நீங்க கிளம்புங்க நான் காயத்ரியை உள்ளே கூப்பிட்டுக்கறேன்” கனத்த மனதுடன் கலங்கிய கண்களுடன் பேசி முடித்தாள் அருணா.
காயத்ரி உள்ளே போனதும் காரில் ஏறிக்கொண்டு பெண்வீட்டிற்குச் சென்றார்கள். வெளிவாசல்வரை வந்து வரவேற்றார்கள் பெண்ணின் தாத்தா, அப்பா, தம்பிகள் இன்னும் இரண்டு உறவினர்கள். உள்ளே நுழைந்ததும் முகம்மலர முதலில் வரவேற்றது பெண்ணின் பாட்டி. பிறகு அம்மா சில உறவினப் பெண்கள்.
பெண்ணை அழைத்துவந்தார்கள். மிகவும் பிடித்துப்போனது. “எங்களுக்குப் பொண்ணை ரொம்பப்பிடிச்சிருக்கு. உங்களுக்கு எம்பையன பிடிச்சிருந்தா பேசிமுடிச்சி நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிச்சிடாலம்” என்றாள் கலா.
“உங்களுக்கு ரெண்டு பிள்ளைகாளாம்மா?”என்று பெண்ணின் பாட்டி பேச ஆரம்பித்ததும், ஆமாங்கம்மா என்றாள் கலா. உங்க வீட்டுக்காரர் எங்கே? என்று பாட்டி கேட்டதும்,”ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்மா” என்ற கலாவிடம்”ஓ, அப்படியா? உங்க பொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சா? என்ற பாட்டியின் கேள்வி தொடர்ந்தது. “ஆய்ருச்சுமா, மாப்பிள்ளையோட சென்னைலதான் சந்தோசமா இருந்தா. பாழாப்போன கொரோனாவுல போன வருசம் மாப்பிள்ளை இறந்துட்டார். அப்புறம் நான் என்கூட இவள கூட்டிட்டு வந்துட்டேன்.
“அப்போ உங்க ரெண்டு பேருக்கும் வீட்டுக்காரங்க இல்லை…? அப்படியிருக்கற
இடத்துல எம்பேத்தி அவ வீட்டுக்காரரோட எப்படி சந்தோசமா இருப்பா?நான் என்ன சொல்லவர்றேன்னா… என்று தொடர்ந்த பாட்டியை “இல்லம்மா, நீங்க ஒன்னும் சொல்ல வேணாம், பொண்ணைக் கொடுக்கிற உங்களுக்கு நாலையும் யோசிக்கிறதுக்கு உரிமை இருக்கு, நாங்க கிளம்பறோம்” என்ற கலா கொண்டுபோன பையை மீண்டும் கையில் எடுத்துக் கொண்டு பிள்ளைகளோடு காரில் ஏறினாள்.
காலையில் எதிர்வீட்டு அருணாவிற்கு தான் எறிந்த அம்புகள், தன்னை நோக்கி பெண்வீட்டார்மூலம் திரும்பியுள்ளதே!
அதன் வலி மிகவும் கொடூரமாக உள்ளதே, திரும்பத் திரும்ப ஒலித்து என்னைக் கொல்கிறதே! கலாவால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நம்வீட்டில் இவ்வளவு குறைகளை வைத்துக் கொண்டு அருணாவை நோகடித்தது எந்தவிதத்தில் நியாயம்? இன்னும்பல கேள்விகளுடன், ஒரு தீர்க்கமான முடிவுடன் கார் ஓட்டிக் கொண்டிருந்த மகனிடம் திரும்பினாள் கலா.
“குமாரு, நான் என்ன சொன்னாலும் கேட்பியா?” என்றாள், “நீங்க சொல்றதத்தானேம்மா இவ்வளவு நாளும் கேட்டுட்ருக்கேன். என்ன செய்யணும் சொல்லுங்க” என்ற மகனிடம் நேரே “காரை நம்ம எதிர்த்த விட்டுல நிப்பாட்டிட்டு நீயும் ரமாவும் என்கூட அருணா வீட்டுக்குள்ல வாங்க” என்றாள். “சரிம்மா” என்ற குமார் சொன்னபடியே செய்தான்.
திடீரென வந்த கலாவையும், பிள்ளைகளையும் பார்த்த அருணா பயம்கலந்த உணர்வுடன் வரவேற்றாள். போன காரியம் நடக்கலையோ, காயத்ரி வாசலில் நின்றதுதான் காரணமென்று சண்டைபோட வந்திருக்காங்களோ என்ற பல குழப்பங்களுடன் நின்றிருந்த அருணாவிடம், “அருணா, ஒரு தாம்பளம் குடு” என்று கேட்டாள் கலா. ஒன்றும் புரியாமல் எடுத்துக் கொடுத்தாள் அருணா. தாம்பளத்தில், தாம்பூலங்களான பூ, பழங்கள் இத்யாதிகளை எடுத்து வைத்து, “இந்தா அருணா, காயத்ரியை எனக்கு மருமகளாக்கணும், புடிச்சிருந்தா தாம்பளத்தை வாங்கிக்க” என்று கொடுத்தாள்.
“உங்களுக்கெல்லாம் சம்மதம்தானே?” என்ற கலாவிடம், “நீங்க சொன்னா சரிதான்ம்மா என்றார்கள் மகனும், மகளும். காயத்ரியின் மௌனமே சம்மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நன்றி நிறைந்த மனதுடன் தட்டை வாங்கினாள் அருணா. “முகூர்த்த தேதியைக் குறிச்சிட்டு சொல்றேன்” என்ற கலாவிடம், “என்னாச்சு கலா? திடீர்னு இப்படியொரு மாற்றம்? என்ற அருணாவிடம். “ நம்ம ரெண்டு பேருமே கணவர் இல்லாத விதவைகள். நிறைய அவமானங்களைத் தாங்கி வாழ்ந்துட்டோம். அதைப் புரிஞ்சுக்காம உன் மகளை நான் வேதனப்படுத்திட்டேன். எனக்கும் ஒரு விதவை மகள் இருக்கறத மறந்துட்டேன். அதுதான் காயத்ரிக்கு நல்ல வாழ்க்கயை அமைச்சுக் கொடுக்லாம்னு முடிவெடுத்துட்டேன்” என்றாள்.
கிளம்ப இருந்த கலாவிடம்,”நானும் ஒரு விசயம் சொல்லணும் கலா. குமார்க்கு நீ வெளில பொண்ணு பார்த்துகிட்டு இருந்தே, கல்யாணம் முடிஞ்சபிறகு சொல்லுவோம்னு இருந்தேன். போனமாசம் என் அக்கா இங்கே வந்திருந்தா, நம்ம ரமாவப் பார்த்துட்டு விவரம் கேட்டா, நான் நடந்தத சொன்னேன். அக்கா மகன் திருச்சியில ஆடிட்டரா இருக்கான். ஒரே பையன். அக்கா தங்கச்சிகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிட்டுத்தான் நான் பண்ணிக்குவேன்னு இருந்தான். இப்போ முப்பத்தஞ்சு வயசாகுது. அதனால வர்ற வரனெல்லாம் தள்ளிப்போகுது. நம்ம ரமா விவரம் தெரிஞ்சும் அக்காவீட்ல எல்லாரும் ரமாவைப் பெண் கேட்டு உன்னிடம் பேச சொன்னாங்க. உனக்கு சம்மதமா? அந்தக் காலத்துல கணவன் இல்லாம நாம இருந்திட்டோம். அப்படி ரமா இருக்க வேணாம். ரமாவிடம் எடுத்துச் சொல்லு. சின்னப்பிள்ளைகள் சிறப்பா வாழட்டும்” என்று எல்லாவற்றையும் ஒரேயடியாக பேசி முடித்தாள் அருணா.
தான் எறிந்த அம்புகள் மட்டுமல்ல, நாம் கொடுத்த அன்புகளும் திரும்பக் கிடைக்கின்றனவே. இன்ப அதிர்ச்சியில் ஒன்றும் பேசாமல் நின்றிருந்த கலா”நீ சொன்னா சரிதான் அருணா, அவங்களுக்கே விருப்பம்னா நான் என்ன சொல்ல முடியும்?எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்” என்ற கலா, பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததில் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள். காயத்ரியை வாசல்வரை அழைத்துவந்து கன்னத்தில் முத்தமிட்டு, “சீக்கிரமா கல்யாணங்களை முடிச்சிருவோம்”என்றுகூறி மகிழ்ச்சியாக வீடு திரும்பினாள் கலா.
ஃபாத்திமா,
ஷார்ஜா.