முதல் சோப்பு

Block 5 தகவல்கள்

அரபுகளும், அறிவியலும் :

முதல் சோப்பு :

உலகில் சோப்பு என்ற ஒரு பொருள் தயாரிக்கப்படுவதற்கு முன் பண்டைய காலத்தில் எகிப்திலும், இந்தியாவிலும் சோப்பு போல நுரை தரக்கூடிய ஒரு காய் (பூந்திக்கொட்டை அல்லது மணிப்புங்குக்காய்) ஒன்றை இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதனை குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இயற்கையிலேயே ஒருவித நறுமணத்தை தரக்கூடிய இந்தக் காயின் தன்மை என்பது நிறைய நேரம் தண்ணீரில் அலசினால் தான் அதன் வழுவழுப்புத்தன்மை தீரும்.

பொதுவாக ஐரோப்பியர்கள் குளித்தாலே தண்ணீர் உடலுக்குள் சென்று தீமை விளைவித்து மரணத்தை கொண்டுவரும் என்ற மூடநம்பிக்கையில் இருந்த ஏழாம் நூற்றாண்டு காலகட்டங்கள் வரையில் அவர்களில் யாரும் குளிக்க மாட்டார்கள். பண்டைய இந்தியர்கள் பொது குளியல் குளம் கட்டி குளித்துக்கொண்டிருந்த காலங்களில் ஐரோப்பியர்கள் வாரம் ஒருமுறை நீராவியில் நின்றும், உடலை தண்ணீரால் துடைத்து சுத்தம் செய்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். அவர்களில் மரணித்தவரை கூட குளிப்பாட்டி அடக்கம் செய்யமாட்டார்கள், கிரேக்க மற்றும் ரோம பேரரசர்கள் ஏதாவது விசேச நாட்கள் என்றால் மட்டுமே அவர்களுக்கேயுறிய ஒரு பெரிய வட்டையளவிலுள்ள கல்பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி குளிப்பார்கள் என்றும், பண்டைய காலத்தில் பொதுக்குளியல் குளிங்களில் குளித்து பலரும் பிளேக் நோய் வந்து அழிந்ததாக அவர்களது புராண ஆவணங்கள் கூற அவர்கள் குளிப்பதையே கைவிட்டுவிட்டார்கள் என்றே ஐரோப்பியர்களின் குளியல் கலைகளைப் பற்றி தெரிவிக்கும் “The Homeric Ἀsaminthos : Stirring the Waters of the Mycenaean Bath,” Mnemosyne: A Journal of Classical Studies மற்றும் “Roman Baths: Ancient Hygiene, Healing, and Socialization | History Cooperative” போன்ற ஆவணப்புத்தகங்கள் நமக்கு கூறுகின்றன.

பின்னர் ஒரு காலகட்டம் அமைந்தது. இஸ்லாமிய பொற்காலத்தில் முஹம்மது இப்னு ஸக்கரியா அல் ராஸி (காலம்: 865-925) என்றொரு மருத்துவர் தோன்றினார். ஐரோப்பிய இருண்ட காலத்தை ஒளி மிகுந்ததாய் மாற்ற உதவிய நூற்றுக்கணக்கான அரபு இஸ்லாமிய விஞ்ஞானிகளின் உழைப்புடன் அல்’ராஸியுடைய கண்டுபிடிப்புகளும் மருத்துமுறைகளும் அவர்களது தலையெழுத்தையே மாற்றியமைத்தது. பிற்போக்குத்தனங்களிலும் மூடநம்பிக்கைகளிலும் உழன்று தானும் கெட்டு தங்களுடன் இருப்பவரையும் கெடுத்துக்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் ஞானம் பெற்றனர்.

இஸ்லாமிய மரபில் சுத்தம் என்பது உடல்,உடை,உணவு,இருப்பிடம்,வருமானம் என சகலவிதமாகவும் பேணப்பட வேண்டிய கட்டாய கடமைகளில் ஒன்றாக்கப்பட்டிருந்ததன் விளைவாக அவர்கள் நாள் ஒன்றுக்கு ஐந்து வேளை கை,கால் சுத்தமும் அங்க சுத்தமும் செய்ய வேண்டிய நிலையில் அல்’ராஸி ஆலிவ் எண்ணெயில் இருந்து கிளிசரீன் என்ற பொருளை பிரித்தெடுத்து பற்றி கண்டறிந்தார் . கிளிசரீனுடன் மூலிகைகளையும் வாசனை பூக்களையும் வைத்து அதன் சாறுகளை பிரித்தெடுத்து முதல் சோப்பினை தயாரித்தார்.

பின்னர் அவர் “அல்-கலி” (Al-qaly / Alkaline) என்ற வேதி உப்பினை கண்டுபிடித்து அதையும் சோப்பு தயாரிப்பில் கலக்க, அதுவே உலகத்தில் ரசாயனங்களுடன் இயற்கை பொருட்களை கலப்பு செய்து தயாரிக்கப்பட்ட முதல் சோப்பு ஆனது. “சோப்” என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படையே நுரை தரக்கூடிய “சாபூன்” என்ற அரபுச்சொல்லில் இருந்து உருவான ஒன்று தான்.

அல்கலி என்பது பூமியில் இருந்து கிடைக்கும் இயற்கை உலோகத்தின் சாம்பல் (Ashes) தான் ஆனாலும் நவீன உலக ரசாயனக்கலைக்கு மிகுந்த அடிப்படை உப்பாக இன்றியமையாத அல்கலைன் என்ற பொருளாக மாறிப் போனது. தண்ணீரில் கரையக்கூடிய இந்த அல்கலைன் உப்பினை பயன்படுத்தாத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு அந்த உப்பு உலகத்தை ஆட்சி செய்கிறது.

அரபுகள் தயாரித்த மத்திய தரைக்கடல் வழியாக சோப்புகளை ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்த அன்றைய காலத்தில் அது தங்கத்திற்கு நிகரான மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட செல்வாக்கு மிகுந்தவர்கள் மட்டுமே குளிக்க முடியும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. ஏழைகள், விவசாயிகள் இதர சாதாரணப்பட்டவர்கள் யாரும் சோப்பினை உபயோகிக்க முடியாது, உபயோகிக்கவும் கூடாது என்ற நிலையில் தான் சிரியாவின் அலெப்போவில் உருவான ஒரு சோப்புத் தொழிற்சாலை ஏழைகளும் பயன்படுத்தும் சோப்புகளை அறிமுகப்படுத்தி தன் வியாபாரத்தை பெரிதுபடுத்தியது.

21ஆம் நூற்றாண்டில் செஃபுரா என்ற சோப்பு பிராண்டினை உருவாக்கி பிரான்ஸ் தற்போது பிடித்து வைத்திருக்கும் உலகளாவிய இடத்தினை அப்போதே 13ஆம் நூற்றாண்டில் சிரியா தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தது. உலகின் பழமையான சோப்பு தொழிற்சாலை இஸ்ரேலின் நெகவ் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. 1,200 வருடங்களுக்கு முந்தைய அந்த தொழிற்சாலையில் சோப்பு தயாரித்தவர்கள் அரபுகள். சிரியா மற்றும் லெபனான் நாடுகளில் இன்னும் அதே 1,200 ஆண்டுகால முறைப்படியே சோப்பு தயாரிக்கும் கூடங்களும் இன்று இயங்குகின்றன.

குளிப்பதற்காகவும் உடலில் பிசுபிசுப்புத் தீரவும் எகிப்தியர்கள் மிருக கொழுப்புகளில் தயாரித்து ஒரு கலவையை தேய்த்துக்கொள்வதும் அவர்களை எறும்பு கடிப்பதும் வாடிக்கையாக இருந்த கஷ்டப்பாடுகளை அரபுகளின் மனமிக்க சோப்புகள் மாற்றியமைத்தன என்றால் மிகையில்லை. அரபு மருத்துவர் ஒருவர் நோயாளிகளை தொட்டுப்பார்த்து சிகிச்சை செய்த பிறகு தன் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கண்டுபிடித்த சோப்பு தான் இன்று உலகில் எல்லோராலும் தங்களது உடல் சுத்தத்திற்கு அடிப்படையாக அமைத்துள்ளது எனில் அவரது கண்டுபிடிப்பினை மெச்சித்தானே ஆகவேண்டும்.

இன்று சோப்புகள் கட்டிகளாக மாத்திரமல்லாது, சாம்புகளாக, க்ரெம்களாக, ஜெல்லாக இன்னும் சீரம் வடிவத்திலும் கூட தயாரிக்கப்படுகிறது ஆனால் அதன் தயாரிப்பு முறையும் சேர்ரக்கப்படும் ரசாயன முறையும் தான் வேறு வேறாக இருக்கிறதே தவிர அடிப்படை என்னவோ இஸ்லாமிய விஞ்ஞானி அல்’ராஸி உருவாக்கியது தான்.

தகவல் :

ஜனாபா.நஷ்ரத் எஸ். ரோஸி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *