சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்! – நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

Block 1 Featured News தமிழ் நாடு

சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்
சிகரத்தை அடைவார்கள்!
————————————-
கூடலூர் புனித அந்தோணியார் பள்ளி வெள்ளி விழாவில்
நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புனித அந்தோணியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 25வது ஆண்டு வெள்ளி விழாவும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் திருமதி மெடில்டா தலைமை தாங்கினார். திரு. கோம்ஸ் முன்னிலை வகித்தார். மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தில் முழுநேர உறுப்பினருமான நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கூடலூர் உதவி வன பாதுகாவலர் அருண்மொழிவர்மன், கோயம்புத்தூர் சி.எம்.எஸ் கல்வி நிறுவனங்களின் உதவி தலைவர் அசோக், டென்மார்க் நாட்டின் சீமென்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த ஸ்டீபன், மற்றும் ஸ்வீடன் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த திருமதி. மேப்பில் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசும் போது நீதிபதி முகமது ஜியாவுதீன் சிறப்புரை ஆற்றும் போது, தயக்கம் ஒவ்வொருவர் வாழ்விலும் தடையாக வரும் அந்த தயக்கத்தை உடைத்தவர்கள் மட்டும்தான் உலகம் உள்ளளவும் நிலைத்த புகழைப் பெறுவார்கள் என்றும் சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான் சிகரத்தை அடைவார்கள் என்றும் கூறினார்.மேலும் அவர் பேசியதாவது:-

வெற்றி தோல்வி என்பதைப் பற்றி கவலைப்படாமல் யார் தொடர்ந்து முயற்சி செய்கிறார்களோ அவர்களைத் தேடித்தான் வெற்றி வரும்.

அடைய வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர வேகமாக அடைய வேண்டும் என்பது அல்ல.
எவ்வளவு மெதுவாக போனாலும் தொடர்ச்சியான பயணம், போக வேண்டிய இடத்திற்கு நிச்சயமாக கொண்டு போய் சேர்க்கும்.
ஒரு சிலருக்கு ஒரு முறை படித்தாலே புரியும், ஒரு சிலர் பலமுறை படிக்க வேண்டியதாக இருக்கும். அது அவர் அவர்களின் இயல்பைப் பொருத்தது. ஐந்து முறை படித்தால் தான் ஒரு மாணவனுக்கு புரிகிறது என்றால் அது தவறல்ல, புரிந்து கொண்டால் போதும் அதுவரை தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையை மாணவனுக்கு கற்றுக் கொடுப்பதுதான் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் கடமையாகும்.

கீழே விழாமல் பயணம் போவது தான் வெற்றி என்பதல்ல. விழுந்தபோதெல்லாம் எழ முடிகிறது என்பதுதான் ஒரு மனிதனின் வெற்றியை தீர்மானிக்கிறது.
எந்த ஒன்றும் சுலபமாக கிடைத்துவிடாது.
யார் சிரமத்தை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

பசுவில் இருந்து கறந்த பாலை ஒரு நாளில் கெட்டுப்போகும். அதையே கொதிக்க வைத்தால் ஒரு நாள் கூட பயன்படுத்தலாம். உறை ஊற்றி தயிராக மாற்றினால் மேலும் ஒரு நாள் பயன்படுத்த முடியும். தயிரை கடைந்து மோராக மாற்றினால் மேலும் ஒரு நாள் பயன்படும். மோரில் இருந்து எடுக்கற வெண்ணை ஒரு சில நாட்கள் கெடாமல் இருக்கும். வெண்ணையை நெருப்பில் காய்ச்சி எடுக்கிற நெய் சில மாதங்கள் கெடாமல் இருக்கும் என்பது மட்டுமல்ல மதிப்புமிக்க நறுமணத்தையும் பெறுகிறது.

பள்ளியில் மாணவனாக இருக்கிறபோதே உயர்ந்த லட்சியத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு வழி காட்ட வேண்டும்.

பூமியில் வெட்டி எடுக்கப்படுகிற தங்கமோ, வைரமோ அப்படியே பயன்படுத்தப்படுவதில்லை. நெருப்பில் இடப்பட்ட தங்கம் தான் அழகான நகை ஆகிறது. பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரத்துக்கு மதிப்பும் மரியாதையும் கூடுகிறது.

வலிகள் நிறைந்த வாழ்க்கை தான் வழிகள் நிறைந்த வாழ்க்கையாகவும் இருக்கும் என்பதை மாணவர்கள் கற்றுக் கொண்டால் அவர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள்.

நான் கூடலூரில் இரண்டு ஆண்டுகள் நீதித்துறை நடுவராக பணியாற்றி இருக்கிறேன். தலைநகருக்கு மிக தூரத்தில் உதகை மலைக்குப் பின்னால் பின்தங்கிய பகுதியான கூடலூரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கல்வி நிறுவனத்தை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிற திருமதி மெடில்டா அவர்களையும், திரு. கோம்ஸ் அவர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். முதல் தலைமுறையாக கல்வி கற்கும் குழந்தைகள் இந்த பள்ளிகள் படிக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

எனக்கு அப்துல் கலாம் அவர்கள் நினைவு வந்தது. மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் தீவில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியர்கள் அனைவராலும் போற்றி புகழப்படுகிற உன்னதமான நிலைக்கு உயர்ந்ததற்கு அவரது தந்தை ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கற்றுக் கொடுத்த அடிப்படை ஒழுக்க நெறியும்; ஆரம்பப் பள்ளியில் கல்வியோடு நல்லெண்ணெத்தை விதைத்த ஆரம்ப பள்ளி ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் அவர்களும்,
இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு நம்பிக்கையையும், உலக அறிவையும் ஊட்டி வளர்த்த அப்பாதுரை சாலமன் என்ற ஆசிரியரும் தான் காரணம் என்பதை அப்துல் கலாம் அவர்கள் தனது “அக்னி சிறகுகள்” என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மத வேறுபாடுகளைக் கடந்து ஆசிரியர்கள் தான் மாணவர்களை நல்ல தலைசிறந்த மனிதர்களாக உருவாக்குகிறார்கள். எல்லோரிடமும் கற்றுக் கொள்கிற அறிவு தான் வாழ்வில் வெற்றி பெற காரணமாகிறது.

எந்த ஒரு நல்ல வாய்ப்பும், மீண்டும் மீண்டும் வராது.
வாய்ப்புகள் வருகிற போது யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் தயங்கி நிற்பவர்கள் வாழ்க்கையில் தடுமாறிப் போய்விடுகிறார்கள்.

நிலவில் முதலில் கால் பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
அதைப்பற்றி படிக்கிற போது ஒரு ஒரு அதிசயமான உண்மை தெரியவரும். எட்வின் ஆல்ட்ரின் என்பவர் தான் முதலில் கால் வைக்க வேண்டியவர். 1969ல் ஜூலை 20ஆம் தேதி அப்பல்லோ-2 விண்கலம் நிலவில் இறங்கியதும் நாசாவிலிருந்து முதல் விமானி ஆல்ட்ரின் இறங்குவதற்கு தான் உத்தரவு வருகிறது. அதன் பின்னர் ஒரு சில மழைத்துளிகளுக்கு பிறகு இரண்டாவது விமானி நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கலாம் என்று உத்தரவு வருகிறது. அந்த ஒரு சில மணித்துளிகள் தான் உலக வரலாற்றில் நீல் ஆம்ஸ்ட்ராங்கை புகழடையச் செய்கிறது.

முதல் விமானிக்கு உத்தரவு வந்ததும் நிலவின் தரை எப்படி இருக்கும் சுடுமணலா? புதைகுழியா? என்கிற தயக்கம் எட்வின் ஆல்ட்ரினுக்கு ஏற்பட்டது.
சில நொடி தயங்கினார். அவர் இறங்கினாரா இல்லையா என்று தெரியாமல் அடுத்த உத்தரவு நாசாவிலிருந்து வந்தது.
இரண்டாவது விமானி நீல் ஆம்ஸ்ட்ராங் கீழே இறங்கியதோடு இறங்கி விட்டதாக தகவல் தெரிவித்தார். அப்போதுதான் நாசாவிற்கு முதல் விமானி இறங்கவில்லை என்ற தகவல் தெரிந்தது.

அதன் பிறகு பல வருடம் கடந்து 7. 8. 2012 அன்று நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இறந்தபோது “நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர். அவரது காலத்தில் மட்டுமல்ல, இனி வரும் எல்லா காலங்களிலும்” என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

தயக்கம் பலருக்கு தடைக் கல்லாக இருக்கிறது என்பதையும். தடைகளை தகர்ப்பவர்கள் மட்டும் தான் வெற்றி பெறுவதோடு, உலகம் உள்ளளவும் நிலைத்த புகழை அடைகிறார்கள் என்பதையும் இந்த சம்பவத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முகமது ஜியாவுதீன் உள்ளிட்ட விருந்தினர்களை மாணவர்கள் மலர்தூவி, பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்று அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *