வெயிலெரிக்கும் வெக்கை

இலக்கியம் கவிதைகள் (All)

பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்து
வெயிலெரிக்கும் வெக்கையில்
அலறியெழுந்த ஆறுமாத பேரனை
நெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா

கண்ணுரித்த கையோடு
கால்காணி கடல செத்தைகளையும்
ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள்
தாத்தா தவறிய நாளிலிருந்து

அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்கு
வத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்து
துவரஞ்செடியோராம்
தூங்க வைத்துவிட்டாள் ஒருவழியாய்

மரியம்மாவை நம்பிக்கொண்டிருந்தவள்
மண்ணெண்ணெயிலெரிந்த மகளை
கண்ணீராலணைத்து தோற்றாள்

கடவுளெல்லாம் கைவிரித்த பின்
அவள் நம்பியிருப்பதெல்லாம்
கன்றிழந்த ஒரு பசுவையும்
காலுடைந்த வெள்ளாட்டையும் தான்

….நிகழ்பாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *