இந்தியாவிலேயே
தமிழ்நாட்டில் மட்டும்தான்
எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
———————————
தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்கில்,
நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!
————————————
தமிழ்நாடு அரசின் சென்னை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்றது.
வாரம் முழுவதும் நடைபெறும் ஆட்சி மொழி சட்ட வார நிகழ்வின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் தலைமை தாங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் பவானி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “ஆட்சிமொழிச் சட்ட வரலாறு” என்ற தலைப்பில் மேனாள் மாவட்ட நீதிபதியும் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினருமான நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேசும்போது இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சுதந்திரமாக கருத்துக்களை சொல்ல முடியாத நிலையில் கருத்து வேறுபாடுகளை கடந்து தமிழ் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவது தமிழ்நாட்டில் மட்டும் தான் என்றும் அந்த மகத்தான பணியை தமிழ் வளர்ச்சித் துறை செய்து வருகிறது என்றும் பாராட்டினார். மேலும் அவர் பேசியதாவது:-
பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்த மொழியில் பேசுகிறார்களோ அந்த மொழி தான் அந்த நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும். அதுதான் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாகவும் இருக்க முடியும். சங்க காலத்திலும் அதற்கு பிந்திய காலகட்டத்திலும் தமிழ் மொழியே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக இருந்திருக்கிறது. அதற்கு பிறகு களப்பிரர்களும், பல்லவர்களும் தமிழகத்தை ஆட்சி புரிந்த போது பாலி, சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற மொழிகள் அரசின் ஆதரவை பெற்று வளர தொடங்கின.
வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை புதிதாக உருவாக்கப்பட்டது. ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் இருந்து தமிழ் சொற்கள் வடமொழிக்கு மாற்றப்பட்டன. சான்றாக அரசன் என்பது ராஜாவாகவும்; அவை என்பது சபையாகவும்; அறியணை என்பது சிம்மாசனம் ஆகவும்;
தேர் என்பது ரதமாகவும்; யானை என்பது கஜமாகவும் மாறியது.
ஆட்சி மொழிச் சொற்களில் ஏற்பட்ட இந்த மாற்றம் அரசவை முதல் கோயில்கள் வரை வளரத் தொடங்கின.
விஜயநகர மன்னர்கள் 15 ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் நுழைந்த போதும் கோயில்கள் மற்றும் கல்வெட்டுகளில் தமிழ் மொழி தவிர்த்து பிற மொழிகளில் பயன்பாட்டுக்கு வந்தன.
மராட்டியர்கள் படையெடுத்து வந்து தமிழ் நிலப்பரப்பில் ஆட்சி செய்த போதும், தெலுங்கு பாளையக்காரர்கள் ஆட்சியிலும் இந்த நிலை தொடர்ந்தது, ஆஸ்தி, சன்மானம், கிரையும், போன்ற அந்நிய சொற்கள் நடைமுறைக்கு வந்தன.
பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தின் மீது படையெடுத்த டெல்லி சுல்தான்கள் ஆட்சி, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் பல பகுதிகளில் நடந்த போது ஏராளமான அரபி, பாரசீக, ஹிந்துஸ்தானி சொற்கள் ஆட்சி சொற்களாக தமிழில் சேர்ந்தன.
அசல், கிஸ்தி, தாஷில், பட்டுவாடா, ஜப்தி, மாஜி, வாபஸ், மராமத்து, ஜாமீன், தஸ்தாவேஜ், முன்சீப், ராஜினாமா, ஜில்லா, அமீனா, பிர்க்கா, ரத்து, ரொக்கம், சிரஸ்தார், சிபாரிசு, சீல் போன்ற வார்த்தைகள் அரபு மற்றும் சுல்தானி ஆட்சியில் தமிழ் நாட்டில் ஆட்சி மொழிச் சொற்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.
அதன்பின்னர்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் வசதிக்காக ஆங்கில சொற்கள் தமிழில் எழுதப்பட்டன.
இந்தியா விடுதலை பெற்றதற்கு பிறகு அந்தந்த மாநில சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற அவாவும் அதற்கான போராட்டங்களும் எல்லா இடங்களிலும் தோன்றியது.
இந்தியா விடுதலை பெற்றதற்கு பிறகு பல்வேறு மொழிகள் பேசக்கூடிய இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்பது தொடர்பான அரசியல் நிர்ணய சபையில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றன. இந்தியாவுக்கு என்று எந்த மொழியும் ஆட்சி மொழியாக அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
அலுவல் மொழியாக இந்தி இருப்பது என்றும் ஆங்கிலம் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்படும் என்றும் மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களின் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில், ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் 27.12.1956 அன்று ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19.1.1957இல் ஆளுநரின் இசைவு பெற்று ஜனவரி 23 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆட்சி மொழிக் குழு ஏற்படுத்தப்பட்டு அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இன்றைக்கு தமிழ் வளர்ச்சித் துறை அனைத்து மட்டங்களிலும் தமிழை ஆட்சி மொழியாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிகளில் தமிழ் ஆட்சி மொழியாக அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆட்சி முடிச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே கையெழுத்து விட வேண்டும் என்று 26.1.1978 இல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலக பயன்பாட்டில் உள்ள அனைத்து பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்றும்,
பணிப்பதிவேடுகளில் உள்ள அனைத்து பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்று
28.6.1971 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அலுவலக நடைமுறையில் திருவள்ளுவர் ஆண்டினை குறிப்பிட வேண்டும் என்றும்,
அலுவலக வரைவுகள், கோப்புகள் மற்றும் செயல்முறை ஆணைகள் அனைத்திலும் பெரியார் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்றும்,
அதேபோல அலுவலக மற்றும் கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறையின் சார்பாக ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ் வளர்ச்சித் துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அதற்குரிய அக்கறை வளர வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் தமிழில் கையெழுத்து போட வேண்டும் இயன்ற அளவு எழுதும் போதும் பேசும்போதும் தமிழைப் பயன்படுத்த வேண்டும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் விண்ணப்பங்களில் தமிழைப் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் கடைகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள விளம்பரப் பலகைகள் அல்லது அறிவிப்பு பலகைகளில் தமிழில் இருக்க வேண்டும்.
ஒரு மொழியின் அது சார்ந்த பண்பாட்டின் வளர்ச்சி என்பது அதில் உள்ள எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில் மட்டும்தான் இருக்கும். எந்த சமுதாயத்தில் எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்களோ அந்த சமுதாயத்தில் தான் கலையும் இலக்கியமும் வளரும்.
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தாங்கள் வெளியிட்ட கருத்துக்களுக்காக எழுத்தாளர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் கருத்து வேறுபாடுகளை கடந்து எழுத்தாளர்களை தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் கௌரவப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு திருவள்ளுவர் பெயரில் விருதும், மகாகவி பாரதியார் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது.
மேலும் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திருவிக விருது, கிஆபெ விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, பேசுறீங்க அண்ணா விருது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது, தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ. வே சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுப்புலவர் விருது, ஜி யு போப் விருது, இளங்கோவடிகள் விருது, முதலமைச்சர்தமிழ் விருது, அம்மா இலக்கிய விருது, மொழிபெயர்ப்பாளர் விருது, சிங்காரவேலர் விருது, அயோத்திதாசர் பண்டிதர் விருது, மறைமலை அடிகளார் விருது, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது, அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சராக மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறை சார்ந்த எழுத்தாளர்களுக்கும் 5 லட்ச ரூபாய் பணப்பரிசுடன் முதலமைச்சர் விருதை அறிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டம் தோறும் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆர்வலர்களை கண்டெடுத்து தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
எந்த மாநிலத்திலும் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டைப்போல கவுரவம் வழங்கடுவதில்லை.
நாம் அனைவரும் பேசும் போதும் எழுதும் போதும் தமிழைப் பயன்படுத்த வேண்டும்.
தமிழ்தான் நமது அடையாளம் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அகர முதலி திட்டம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், சிறு தொழில் வளர்ச்சிக்கழகம், சென்னை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.