ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்.
பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார்
⛳: `எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!’ – ரூமி (Rumi)
என்பதன் மூலம் என் மதம் பெரிது,உன் மதம் பெரிது என சண்டையிடுபவர்களுக்காக யாதும் ஒன்றே என்று கூறுகிறார்.இந்த பன்முகத்தன்மையே இன்று ரூமியை உலகம் முழுவதும் பேச வைக்கிறது.
எல்லோருடைய வாழ்விலும் துவளவைக்கும் தருணங்கள் வரும். அந்தப் பொழுதைக் கடக்க, பலரும் பலவாறு முயல்வர். அது விலகி அவர்கள் பழைய நிலையை அடைய ஒரு பாடலோ, உரையாடலோ, கவிதையோ, இசைத்துணுக்கோ தேவைப்படுவதுண்டு. சிலருக்கு ரூமியின் கவிதைகள் தேவைப்படும். தனிமை அழுத்தும் கொடும் இரவுகளில், ஆற்ற முடியாத ரணங்களில் மனம் பதறும்போது பலருக்கும் ரூமிதான் மீட்பர். குழப்பமான மனதை, நதியில் மிதக்கும் ஒற்றை இலை எனப் பயணத்தை இலகுவாக்கும். இன்று பலராலும் பரவலாகப் பேசப்படும் ரூமி, 1207-ல் பிறந்தார்.
#68_வயது_வரை_வாழ்ந்த_ரூமியின்_நினைவு_தினம்_இன்று.
அவரைப் பற்றிய அறிமுகம் இதோ…
`என்னால், உறவுகள், அந்நியர்கள் என எவரையும் பிரித்துப் பார்க்க முடியாது’ என்பதன் மூலம் அவரிடமிருந்து வெளிப்படும் மனிதநேயத்தை உணரலாம். பலதரப்பட்ட இனம், மதம், கலாசாரம் என வேறுபாடுகள் இயங்கும் சூழலில், அவரின் கவிதைகளும் தத்துவங்களும் மக்களின் பன்முகங்களை ஒருங்கிணைப்பதாகவே இருந்தன.
கடந்த 2007-ம் ஆண்டு `ரூமி நாள்’ கொண்டாடும்போது, யுனெஸ்கோ கூறியது… `இத்துடன் அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் அவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டு அவரின் 800-வது பிறந்த நாள் ஐ.நா-வால் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும்’ என்று. காரணம், அமெரிக்காவில் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் ரூமி. ஆனால் அவர் பிறந்ததோ, இந்த நவீன அமெரிக்கா உருவாவதற்குப் பல வருடங்களுக்கு முன்பு.
கி.பி 1207-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி `பால்க்’ என்ற மத்திய ஆசியப் பகுதியில் (தற்போது ஆப்கானிஸ்தான்) ரூமி பிறந்தார். பால்க் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பெர்சிய கலாசாரமாக விளங்கியதால் என்னவோ, அரேபிய வம்சத்தில் பிறந்தாலும் பெர்சிய மொழியில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார். இவரின் இயற்பெயர் `முகம்மத்’. ஆனால், அனைவரும் `ஜலாலுதீன்’ என்றே அழைத்தனர். அப்போது மங்கோலியர்களின் ஆக்கிரமிப்பு, கொள்ளை போன்ற தொல்லைகள் அதிகம் இருந்ததால், பால்க் நகர மக்கள் துருக்கியில் உள்ள `ரூம்’ என்ற இடத்துக்குக் குடிப்பெயர்கிறார்கள். தனது 12-வது வயதில் இங்கு வருகிறார் ஜலாலுதீன். பிறகு, இந்த நகரின் பெயரே இவரின் பெயரோடு `ரூமி’ என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிறகு, இந்தப் பெயரே வரலாற்றிலும் நிலைத்து நிற்கிறது.
ரூமியின் தந்தை பகாவுதீன் முகமது வலத். இவர் பால்க்கில் சிறந்த ஞானியாகவும் ஆசிரியராகவும் திகழ்ந்தார். ஆதலால், ஆரம்ப காலங்களில் தன் தந்தையிடமே கல்வி கற்றார் ரூமி. பிறகு, தந்தையின் சீடர்களில் ஒருவரான சையத் புர்கானுதீன் என்பவர் ரூமியின் ஆசிரியர் ஆனார். கல்வியையும் கலையையும் இவரிடம் கற்றார். பிற்காலத்தில் தன் நூல்களில் தன் ஆசிரியரைப் பற்றி பலமுறை குறிப்பிட்டுள்ளார். தந்தையின் அரவணைப்பிலேயே இருந்த ரூமி, தந்தையின் இறப்புக்குப் பிறகு சாான் தேசம் நோக்கிச் சென்றார். அங்கு கெலப் நகர பள்ளிக்கூடத்தில் கமாலுதீன் என்ற ஆசிரியரிடம் கல்வி கற்றார். கல்வியில் தேர்ந்த மாணவரான ரூமி, தன் 33-ம் வயதிலிருந்து மாணவர்களுக்கு கல்வியைப் போதிக்க ஆரம்பித்தார்.
அட்டார் மற்றும் சானை என்கிற பெர்சிய கவிஞர்களின் தாக்கம் ரூமியிடம் அதிகம் இருந்தது. தன் கவிதையிலேயே ஓர் இடத்தில்தான் அட்டாரை ஆன்மாவாகவும், சானை இரு கண்களாகவும்கொண்டு அவர்கள் வழிவந்தவன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சூஃபி கொள்கையில் ஆர்வம்கொண்டார். அதற்கான காரணம், மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது. சம்சுதீன் தப்ரேசு என்கிற சூஃபி பெரியவரைச் சந்தித்த ரூமி, அவருடன் ஈடுபாடுகொண்டு இரண்டு வருடம் தன் வீட்டில் சூஃபி ஞானங்களைப் பயின்றார். இந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் ஆசிரியர் தம்மைவிட்டுப் பிரிய இந்த சம்சுதீன்தான் காரணம் என்று ரூமியின் மாணவர்கள் அவரிடம் வெறுப்பைக் காட்டியதால், அவர் ரூமியைவிட்டுச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. பின்னாளில் 2,500 பாடல்கள்கொண்ட `திவானே சம்சே தப்ரேஜ்’ என்ற நூலை சம்சுதீனுக்காக இயற்றினார் ரூமி.
மஸ்ணவியிலும் பிற நூல்களிலும் தனது தத்துவங்களையும் இறையியலையும் மிகவும் யதார்த்தமாக எழுதினார். பெரும்பாலும் விலங்குகளை உதாரணம்காட்டி எழுதினார். `முகத்துக்கும் உண்மைக்கும் எத்தகைய தொடர்பு உள்ளது என்றால், சிங்கத்துக்கும் அதன் குகைக்கும் உள்ள தொடர்பைப்போல அல்லது பேச்சுக்கும் குரலுக்கும் அதன் எண்ணத்துக்கும் உள்ள தொடர்பைப்போல’ என்றார். நிலையான குகையில் பல்வேறுபட்ட சிங்கங்கள் வந்து போவது போன்று, நிலையான எண்ணங்களில் வெவ்வேறு கற்பனைகள் உருவாகின்றன என்கிறார். மனிதனின் யதார்த்தவியலை இப்படி சிறுவர் இலக்கியத்துக்கு ஏற்றதுபோல் அமைப்பதில் வல்லவரான ரூமியின் பிரபலமான க(வி)தை,
`தன் கால அறிஞர் கூட்டம்
இறைவனைப் பற்றிய மதிப்பிலே
பற்பலவிதம் பேசுவதையும்
அவனுக்கு முரணான தன்மைகளைக் கற்பிப்பதையும்
கண்ட கீழை நாட்டு மன்னரொருவன்,
பரம ரகசியமாக தனது தலைநகருக்கு
யானையொன்றைக் கொண்டுவரச் செய்தான்.
அதை இருட்டான இடமொன்றில் நிறுத்தினான்.
அந்த அறிஞர்களை அழைத்தான்.
அவர்கள் யாருமே கண்டிராத
அபூர்வ மிருகமொன்றைத்
தான் கொண்டுவந்திருப்பதாக
அவர்களிடம் கூறினான்.
அவர்களை இருட்டான இடத்திற்கு
தன்னோடு வருமாறு அழைத்தான்.
அங்கு சென்றதும்,
அம்மிருகம் அவர்கள் முன் நிற்கிறதென்றான்
அவர்களால் அதைக் காண முடிகிறதா
என்றும் வினவினான்.
அவர்கள் இல்லை என்றதும்,
அதனருகில் நெருங்கி,
அதைத் தொட்டுணருமாறு வேண்டினான்.
அவர்கள் தடவிப் பார்த்தனர்;
ஒவ்வொருவரும் ஒரு பகுதியைப் பார்த்தனர்.
பின்னர் யாவரும் வெளிச்சத்திற்கு மீண்டனர்.
அப்பிராணி தூண் போன்றிருக்கிறது
என்றார் ஒருவர்.
அதன் தோல் சொரசொரப்பானதென்றார் இன்னொருவர்.
வழவழப்பான கொம்புடையதென்றார் மூன்றாமவர்.
ஏதோ ஒரு முரட்டு துணியிலான
மடிப்புகள் காணுகிறதென்றார் இன்னொருவர்.
ஆனால், யாரும் முழு உண்மையைச் சொல்லவில்லை.
எனவே, அவர்களை
அரசன் மீண்டும் இருண்ட இடத்திற்கு
இட்டேகினான்; அங்கெ வெளிச்சம் வந்தது
அவர்கள் யானையைக் கண்டனர்.
ஒவ்வொருவர் சொன்னதும் உண்மையே எனினும்
அனைவர் கூற்றுகளும் சத்தியத்திலிருந்து
பெரிதும் வேறுபட்டவை என்பதை உணர்ந்தனர்’
என்பதன் மூலம் என் மதம் பெரிது, உன் மதம் பெரிது எனச் சண்டையிடுபவர்களுக்காக யாதும் ஒன்றே என்று கூறுகிறார். இந்தப் பன்முகத்தன்மையே இன்று ரூமியை உலகம் முழுவதும் பேசவைக்கிறது. மழையைக் கொடுத்து நீர்நிலைகளை உருவாக்கும் வானம், மீண்டும் அந்த நீரை ஆவியாகப் பெருவதுப்போல், இங்கு பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மீண்டும் பெற்றுக்கொள்ளப்படுபவனே என்று இறப்பைப் பதிவுசெய்துள்ளார்.
மனிதனின் செயலும் புகழும் இங்கேயே தங்கிவிடும் என்பதுதான் நாம் அறியும் யதார்த்தம். அந்த வகையில் தன் கவிதைகளில் நூற்றாண்டுகளைக் கடந்து வாழ்கிறார் சலாலுதீன் ரூமி.