கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள்சங்கம் நடத்தும் மக்கள் நல்லிணக்க புத்தக திருவிழா !
சென்னை, டிச.19: கர்நாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம், 4 ஆவது ஆண்டாக பெங்களூரில் தமிழ்ப்புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. தி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இஞ்சினியர்ஸ் அமைப்பின் அரங்கத்தில் (இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில்) டிச.20-29 தேதிகளில் இந்நிகழ்வு நடக்க இருக்கிறது. சுமார் 40 அரங்குகளில் தமிழ், கன்னட, ஆங்கில நூல்கள் இங்கு குவிக்கப்பட இருக்கின்றன. நுழைவுக்கட்டணம் கிடையாது. வாங்கும் நூல்களுக்கு 10% விலை தள்ளுபடியும் உண்டு. பார்வையாளர்களின் வாகனங்களுக்குக் கட்டணம் ஏதுமில்லை. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகங்களை வாங்க முடியும்.
நாளை காலை (டிச.20, 2024) 11 மணிக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மேனாள் தலைவர் முனைவர் சிவன், கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் டாக்டர்.வி.ராம்பிரசாத் மனோகர் இ.ஆ.ப தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் வாரியத்தின் தலைவர் திரு.கார்த்திகேய சிவசேனாபதி, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலர் திரு.வீராணம் சு.முருகன் முதலிய பலரும் வாழ்த்துரை வழங்குவர். மாலை 5 மணிக்கு கன்னடக் கருத்தரங்கு நடைபெறுகிறது. தினந்தோறும் கலை, பொழுதுபோக்கு, இலக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நூலரங்க நிகழ்வினை கர்நாடகப் பொன்விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கன்னட வளர்ச்சி ஆணையத்தின் மேனாள் தலைவர் திரு.பேரா.எஸ்.ஜி.சித்தராமய்யா அவர்களின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
முத்துமணி நன்னன்