பூமியின் எடை

இலக்கியம் கவிதைகள் (All)

பூமியின் எடை

பூமியின் மொத்த எடையில்மனிதர்கள்
எவ்வளவு?..,


மரம் செடி கொடிகள் எவ்வளவு?..,


விலங்குகள் எவ்வளவு?..,

பறக்காமல் அமர்ந்துள்ள பறவைகள் எவ்வளவு…??

கணக்கெடுப்பு
தொடங்கியது..

மலர்கள்
காற்றில்
சிணுங்கின
‘தன்னுள்
பூத்திருக்கும்
காய்களும்
இனிப்புயிர்க்கும்
கனிகளும்,
ஏன் சந்ததி விதைகளும்
கணக்குப் பட்டியலில்
ஒட்டப்பட வேண்டும்’

காற்றில் அவற்றின் கோரிக்கை
மணமுள்ளதுதான்..
சரி…

விலங்குகள்
அங்குமிங்கும்
உலவின..
மேயப்போந்தும்,
இரை தேடிப்போயும்
உலவும் குட்டிகளைத் தேடின..
குரலைக்
கைகளென உயர்த்தின…
எங்கேயோ
கேட்ட எதிர்க்குரல்களும்
கணக்கை
நிரப்ப வேண்டுமென
அரற்றின…

எதிலொலித்த
குரல் பூமியின்
நகர்தலுக்கு
ஒரு விசையெனக் கொள்ளலாம்தான்..
சரி…

பறவைகளோ
கூட்டிலுள்ள
சிறகு மிளிராக்
குறு குஞ்சுகளும்
கணக்கில் வந்தாலும்
இரைதேடிப்
பறப்பவை இறங்காமல் போமோ எனக்கிரீச்சிட்டன..

‘எப்படி ஏற்பது..?..
பூமி எடைக்கணக்கில்
பறந்துகொண்டிரும்
பறவைகள்
எப்படிச் விடையாகும்..?’

விடுவதாயில்லை
பறவைகள்…
‘பறக்கும் பறவைகளின் உயிர் விடுதலையாயின்
எங்கு ‘தொப்’பென விழும்…?

ஞாயம்தான்…
பறப்பவைகளும்
பூமியின்
எடைக்கணக்கில்
அமருந்தான்…
சரி…

மனிதர்களின்
வீட்டில்
கணக்கெடுப்பாருடன்
உரையாடல்…
‘நான், மனைவி,
பிள்ளைதான்..’

‘உங்க அப்பா,
அம்மா, பாட்டி..?’

‘இல்ல..இல்ல..
இல்லக் கணக்கில் சேர்க்காதே…
அதுகள்
முதியோர் இல்லத்தில்..’

‘ரேஷன் அட்டையில்
பெயர்..’

‘ அது எங்க சர்க்கரைக்கு…’

கணக்கெடுப்பவருக்குக்
கசந்தது..!

எடை சரியில்லையென
சரிந்தது
வயநாடு…!

© கவிஞர்
விஜயகிருஷ்ணன்
9600644446

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *