15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித மகான் சையது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்களின் நினைவு சின்னமாக இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1827 – 1830 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் நாகூர் தர்காவைக் கட்டினர். சிங்கப்பூரர் நாகூர் தர்கா 1974-ஆம் ஆண்டு நவம்பர் 29- ஆம் தேதி தேசி நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தர்காவை மறுசீரமைக்கும் திட்டம் 1994 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது. ஹாஜி ஷரஃப்தீன் தலைமையில் அமைந்த 18 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக்குழு அந்தத் திட்டத்தை முன்வைத்தது. தர்காவைப் புதுப்பிக்கும் திட்டம் 25.11.1998-ல் நாடாளுமன்றத்தில் முறையாக அறிவிக்கப்பட்டது. 2008-ல் தொடங்கிய முக்கிய மறுமேம்பாட்டுக்குப் பிறகு, நாகூர் தர்கா புதுத்தோற்றத்தைப் பெற்று, மரபுடைமை நிலையமாகத் திறப்பு விழா கண்டுள்ளது. மரபுடைமை நிலையத்தின் காட்சிக் கூடங்களில் படங்களும், நினைவுப் பொருட்களும் திரட்டி வைக்கப்பட்டுள்ளன. பொது மக்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்பட்ட நினைவுப்பொருட்கள் அவை. பழைய புகைப்படங்கள், பழைய நூல் பதிப்புகள், அச்சிடப்பட்ட இலக்கியங்கள், புத்தகங்கள், பட்டியல்கள், நாட்குறிப்புகள், கடிதங்கள் முதலானவை அவற்றுள் அடங்கும்.
நான்கு காட்சிக் கூடங்களில் அரிய நினைவுப் பொருட்களை பார்வையாளர்கள் காணலாம். வரலாறு, கலாச்சாரம் தொடர்பான பரவலான தகவல்களைப் பெறலாம். மரபுடைமை நிலைய உணவகத்தில் இந்திய முஸ்லிம் உணவு வகைகளை பார்வையாளர்கள் சுவைத்து மகிழ்வதற்கு வசதியாக விற்பனை செய்யப்படுகின்றன. நமது உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் மசாலா, தாளிப்பு வகைகள் பற்றியும் இங்கு விளக்கம் பெறலாம். எடுத்துக்காட்டாக சில காட்சிகள்: வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. புதை பொருள் ஆய்வாளர்கள் வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள சிந்துவெளி நாகரீகத் தளங்களில் அதற்கான நினைவுப் பொருட்களைக் கண்டெடுத்தனர். மலேசியா, சிங்கப்பூரில் இந்த வழக்கம்.
மாக்கான் சீரே எனக் கூறப்படுகிறது. பாக்கு முறையாகப் பதப்படுத்தப்பட்டு துண்டுகளாக்கப்பட்டு வெற்றிலையுடன் சுண்ணாம்பும், ஏலம், கிராம்பு முதலான வாசனைப் பொருட்களும் சேர்த்து சுவைக்கப்படும் பழக்கமே இது. புகையிலையும் இந்தக் கலவையில் சில சமயம் சேர்க்கப்படும் வெற்றிலை போடுபவரின் வாயும், பல்லும், உதடும் சிவந்து காணப்படுவதைப் பார்க்கலாம். வெற்றிலைப் பாக்கு போடுவோர் வாயில் சுரக்கும் அதிக திரவக் கலவையைத் துப்பி விடுவார்கள். வெற்றிலைப் பழக்கம் வாய்ச் சுத்தம், செரிமானத்துக்கு நல்லது எனக் கூறப்படுகிறது. முறையான வீட்டு உணவுக்குப் பிறகு வெள்ளித்தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து உபசரிக்கப்படுவதுண்டு. சிங்கப்பூரில் வெற்றிலைப் பழக்கம் கலாசார மரபுகளில் ஒன்றாக இருந்தாலும் இன்று அது மறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த தொழிலாளர்கள் அந்தப் பழக்கத்தைப் பேணி வருகின்றனர்
இந்திய ஜவுளித் தொழில் கடந்த 2000 ஆண்டுகளாக நிலைபெற்றுள்ளது. அதன் கலை வண்ணமும், உற்பத்தி நுட்பங்களும் எண்ணற்றவை. உற்பத்தி வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு முன்பாகவே, இந்தியா உலகின் மிகப்பெரிய ஜவுளி, துணி மணி ஏற்றுமதி நாடாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக, இந்திய முஸ்லிம் சமூகங்கள், தென் இந்தியாவின் கடையநல்லூர் போன்றவை, நெசவு மற்றும் துணி உற்பத்தியில் ஈடுபட்டுவந்தன. மற்றவர்கள் துணி வர்த்தகத்திலும் ஏற்றுமதியிலும் முனைப்பாக ஈடுபட்டனர். மலாயா, சிங்கப்பூருக்கு வந்த தொடக்க காலக் குடியேறிகளில் பலர் நெசவுத் துணிமணிகளின் தேவை உணர்ந்து சிறிய கடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் நடத்தினர். நெசவு ஆடை வடிவமைப்பு முறைகளுடன் புதிய அணுகுமுறைகளையும் காலத்தின் தேவைக்கேற்ப அவ்வப்போது பின்பற்றினர். பாரம்பரிய முறையுடன் காலத்திற்கேற்ப உலகத் துணிமணித் தேவைகளை உணர்ந்து அவர்கள் செயல்பட்டதை அறியலாம்.
வாசனைப் பொருட்கள் கஸ்தூரி, சந்தனக்கட்டை, சாம்பிராணி, மருதாணி, குங்குமப்பூ முதலான வாசனைப் பொருட்கள் செல்வச் சிறப்புமிக்கவையாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. துணிமணித்தொழிலைப் போன்றே பலவகை வாசனைப் பொருள்கள், வாசனைக் குச்சிகள் சுத்திகரிப்புப் பொருள்கள் உற்பத்தியிலும் இந்தியா மிகப்பெரிய இடத்தைப் பிடித்தது. இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் இயல்பாகவே அத்தர் மற்றும் சாராயக் கலப்பில்லாத வாசனைப் பொருள் வணிகத்தை இந்தியத் துணைக் கண்டத்திற்கு அப்பால் கடல் கடந்து விற்பனை செய்தனர். சிங்கப்பூரில் இந்த வாசனைப் பொருட்களின் வணிகம் இன்றும் மிகத் துடிப்பாக நடைபெற்று வருகிறது. மிகப்பழமையான வாசனைப் பொருட்களையும் சாதனங்களையும் இன்றைய 21 ஆம் நூற்றாண்டுக் கண்ணோட்டத்திற்கு ஏற்ப இங்கு காணலாம்.
நன்றி :
முஸ்லிம் முரசு
ஜனவரி 2012