வெள்ளைப் பூக்களின் … பயணம் !

இலக்கியம் கவிதைகள் (All) பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

 

‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி

அலைபேசி : 99763 72229

ஹஜ்ஜுக்குச் செல்வோரும்

உம்ராவுக்குச் செல்வோரும்

அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று

அபூஹுரைரா (ரலி) அவர்கள்

அறிவித்துள்ளார்கள் !

 

 

அதன்படி,

புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும்

வெள்ளைப் பூக்களே !

எதுவும் எனதில்லை

எல்லாமே உனது என்றே

எல்லாம் துறந்து

ஏகனே கதியென்று செல்லும்

இறைக் காதலர்களே …!

 

 

உங்கள் தாகம் புரிகிறது

பாலைவனமே ……..

தாகமாய் படுத்திருக்க அந்தப்

பாலைவனச் சீமைக்கா……

உங்கள் பயணம் என்று……

கேட்கலாம் போல் தோன்றுகிறது !

 

 

அது

பாலைவனமல்ல

தீன்பூத்த சோலைவனம் !

 

 

 

ஓரிறைத் தத்துவத்தை – அந்த

வானத்திற்கும்

வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும்

சங்கையான கஅபா

மக்க நகரத்தின் மணிமகுடம் !

 

 

இந்தச் சீமையில் தான்

வல்ல அல்லாஹ் – தன் இறுதித்

தூதுவரை ….

நபியாகத் தேர்ந்தெடுத்தான் !

உம்மி நபியானவரை…

உலகமே … படிக்க வைத்தான்

 

 

கலிமாவைத் தினமும்

நாம் ஓத……

அவர்கள் நாமத்தை

இனிப்பாய் அதில்

இணைத்து வைத்தான் !

 

 

அன்று……

அன்னை ஹாஜரா …

பாறைகளுக்கிடையில்

நீரைத்தேடி…

தாகத்தோடு… அலைய…….

குழந்தை இஸ்மாயிலின்

குதிகால் உதைப்பினிலே

தெறித்ததே… ஒரு நீரூற்று !

அது சாதாரண ஊற்றல்ல,

ஜம் ஜம் நீரூற்று !

அன்று முதல் … இன்று வரை

அதன் ஊற்றுக் கண்…

திறந்தபடியே ….

தாகம் தீர்த்து வருகிறது !

இப்போது தான் புரிகிறது !

உலகத்தின் தாகம் தீர்ப்பதே

அந்தப்

பாலைவனச் சீமையென்று !

இதையெல்லாம் ….

கண்ணாரக்கண்டுவரப்

போகின்றீர்கள் !

 

 

சென்று வாருங்கள் !

உங்களின் ஹஜ்

வல்ல அல்லாஹ்வால்

ஒப்புக் கொள்ளப்பட்ட

ஹஜ்ஜாக அமைய…..

துஆச் செய்கிறோம் !

தோழமையோடு !

அல்லாஹு அக்பர் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *