( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )
ரமளான் பிறை
வானில் தெரிந்தது
பேஷ் இமாம் தொழுகையை முடித்து
ஸலாம் கொடுக்கத் திரும்பினார்
முன் வரிசையில்
எல்லாமே
புதுமுகங்கள் !
தெருத்தெருவாக
தப்ஸ் அடித்து
மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட
பக்கீர்ஷா
வீட்டிற்குள் போய் உறங்கினார்
நோன்பு பிடிக்காமல் !
வாழ்நாளில்
ஒரு நோன்பு கூட பிடித்திராத
மர்ஹூம் ஊனா மூனாவின்
நினைவாக அவர் மகன்
நோன்பு திறக்க
நோன்புக் கஞ்சி ஊற்றினார் !
தராவீஹ் முடித்தவுடன் அவசரமாக
ஊருக்குப் புறப்பட்டார் ஹாபிஸ்
ஊதியத்துடன் –
நிச்சயிக்கப்பட்ட
அவரது தங்கையின் வரனுக்குத்
தட்சணை கொடுக்க வேண்டும் !
நன்றி : இனிய திசைகள், அக்டோபர் 2005