துபையில் பணி வாய்ப்பு – ஒரு பார்வை

இலக்கியம் கட்டுரைகள் முதுவை ஹிதாயத்

 

–    முதுவை ஹிதாயத் –

  துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று.

வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் எண்ணெய் வளம் மற்றும் அவை சார்ந்த தொழில்துறை நம்பியிருந்தாலும் துபை எண்ணெய் வளம் சார்ந்த தொழில்துறை மட்டுமல்லாது பல்வேறு பிற தொழில்துறைகளில் உயர்ந்து நிற்கிறது. பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முகமாக Free Zone எனும் திட்டத்தை ஏற்படுத்தி அதில் ஊடகம் (Media) மருத்துவம், கணினி, ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகள் வளர்வதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாய வேலை வாய்ப்புகளும் பெருகி வருவதால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த இளைஞர்களும் துபையை நோக்கி படையெடுத்து வருவது அதிகரித்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் விதி விலக்கல்ல.

துபையில் நாளுக்கு நாள் பெருகி வரும் கட்டிடங்களின் காரணமாய் கட்டுமானத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏராளமாய் இருந்து வருகின்றன. இதில் பொறியாளர், சர்வேயர், கொத்தனார் (Mason), மேற்பார்வையாளர், உதவியாளர், கார்பெண்டர், ஓட்டுநர், காவலாளி, கணக்காளர், உள்ளிட்ட பணிகள் முக்கியமானவை.

இது மட்டுமல்லாது வங்கிப்பணிகள், விற்பனைப் பிரதிநிதி, மருத்துவம் மற்றும் அவை சார்ந்த துறைகள் ஆபரண வடிவமைப்பு, டெய்லரிங், கேட்டரிங், ஊடகத்துறை என பணி வாய்ப்புகள் பரந்து விரிந்து செல்கின்றன.

துபையில் இத்தகைய பணி வாய்ப்புகள் எல்லாம் இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலோர் சாதிக்க முடியாததற்கு காரணம் தன்னம்பிக்கையின்மையே.

தமிழகத்தின் தரம் வாய்ந்த கல்வியின் காரணமாகவும், தமிழர்கள் மீதுள்ள நன்மதிப்பு மற்றும் நம்பிக்கையின் காரணமாகவும் பல்வேறு நிறுவனங்கள் தமிழர்களை வேலைக்கு அமர்த்திட முன்னுரிமை அளித்து வருகின்றன என்றால் அது மிகையல்ல.

துபைக்கு வருகை தரும் இளைஞர்களுக்கு இதோ சில ஆலோசனைகள்

  1. நிறுவனங்களின் நேரடி நேர்முகத் தேர்வுகள் மட்டுமன்றி பலர் துபை சென்று வேலை தேடிக் கொள்ளலாம் என்று உறவினர்கள் மூலமாகவோ அல்லது பிறரிடம் அதிக அளவு பணம் கொடுத்தோ விசிட் விசா (Visit Visa) மூலம் என்று வருகின்றனர்.

எனினும் சிலர் Employment விசா என்று கூறி Visit விசாவில் ஏமாறி வரும் பரிதாபக் கதைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. படிக்காதவர்கள் தான் ஏமாற்றப்படுகின்றனர் என்றால் படித்த சிலரும் விசாவை தெரிந்த நபர்களிடம் விசாரிக்காமல் வந்து விடும் அவலமும் தொடரத்தான் செய்கின்றன.

2. தமிழகத்தின் நகரங்களில் படித்து வரும் சிலர் ஆங்கிலப்புலமை பெற்றிருந்தாலும் பெரும்பாலோர் ஆங்கில புலமையில் போதிய தகுதியின்றிக் காணப்படுவது ஒரு குறையே. இதன் காரணமாய் Marketing உள்ளிட்ட துறைகளில் உள்ள நம்மவர்கள் அதிகம் பிரகாசிக்க இயலாதது வருத்தத்திற்குரியது.

3. இந்தியாவின் தேசிய மொழி இந்தி தெரிந்திருந்தால் அது ஒரு சிறப்புத்தகுதி. தெரியாவிட்டால் அதனை வளர்த்துக்கொள்ள முயல வேண்டும். இதன் காரணமாய் நமக்கு வேலையே கிடைக்காது என முடிவுக்கு வந்து விடக்கூடாது.

4. அரபி மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ளுதல் நலம். இதற்காக எகிப்து வானொலி இலவச அரபி மொழி சேவையினை சிற்றலை சேவையில் வழங்கி வருகிறது. நேயர்களுக்கு இலவச நூல்களையும் வழங்கி அரபி மொழியில் அதிக ஞானம் பெற உதவு வருகிறது.

மேலதிக விபரங்களுக்கு

Arabic by Radio

Radio Cairo

p.o.box. 325

cairo  – A.R. Egypt எனும் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

5. துபையில் உறவினர்கள் இல்லாத பட்சத்தில் ஏதேனும் அவசியத்  தேவை ஏற்படின் Consul General அலுவலகத்தை அணுகலாம்.

அதன் தொடர்பு முகவரி

Consulate General of India
Al Hamriya, Diplomatic Enclave
P.O. BOX 737, DUBAI
UNITED ARAB EMIRATES
Tel: +3971222/3971333
Fax: +3970453
Tlx.: 46061 CGIND EM
Email: cgidubai@emirates.net.ae

இறுதியாக எத்தகைய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை இழந்து விடாது செயல்பட்டால் வெற்றி நமதே.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *