ஈமான்

இலக்கியம் இஸ்லாமியக் கவிதைகள் கவிதைகள் (All)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

 

சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு

செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம்

இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!

 

 

மண்புகழ் அனைத்தும் பொன்றிகழ் வளர்த்து,

கண்திரு ஒப்ப கனிவள ஆர்த்து,

 

 

மறைவழி தந்த நெறிமுறை அல்லாஹ்,

சிறுநிறை மன்றம் நின்புகழ் பாட,

 

 

பண்பொடு மாந்தர் வண்தகை ஈந்து,

வந்தது கண்டு மகிழ்தினம் இன்று.

 

 

பார்காணும் படைப்பினில் உயர்வாகும் மனிதஇனம்,

பரிசாக பெற்றிட்ட சிறப்பாகும் ‘இஸ்லாம்’ மதம்.

 

 

ஐங்கடமை சாற்றுகின்ற அல்குர்ஆன் இறைவேதம்,

தங்குதடை வேற்றின்றி பறைசாற்றும் ‘ஈமான்’ உள்ளம்.

 

 

ஐங்காலத் தொழுகைக்கு அரியாசனம் முதலிடம்,

திங்களொளிச் சுடரேபோல் ‘தானம்’ பெறும் சிறப்பிடம்.

 

 

ஆன்மீகம் பலப்பட அருமருந்து நோன்பாகும்,

கரும்பாகும் இறைவனுக்கு நாம் செய்யும் ‘ஹஜ்’ ஆகும்.

 

 

அரும்பான நாள்தொட்டு ஆட்பட்ட அக்கடமை,

திருவான இந்நாளில் பெருநாளாய் நிறைவேற்றி,

 

 

தெளிவான உள்ளங்கள் கருவாக பின்பற்ற,

வழிதந்த வள்ளலாம் இறைவனுக்கு நம் நன்றி.

 

 

சீராடும் சிறப்பாற்றி நற்பயணம் நிறைவேற்றி

நிறைவான மகிழ்வோடு வீற்றிருக்கும் பெரியோரை

 

 

தேரோடு தெளியாடி செந்தேனின் சுவைபாடி,

பாரோடு புகழ்பாடி வாழ்த்துகிறோம் இசைபாடி !

 

 

இறைவனின் மகிழ்விற்கு இரையான இம்மக்கள்

மென்மேலும் உயர்வாக கொள்கைகள் நெறிபற்றி

 

 

இருக்கின்ற “ஈமானை” மென்மேலும் பலப்படுத்தி,

சிறக்கின்ற வழிகளை மற்றவர்க்கும் சாற்றிடுக !

 

 

கொற்றவனின் நெறிபற்றி ஹஜ் கடமை செயலாற்றிய

ஏற்றமிகு புரவலர் வல்லதிரு கற்றோர்கள்

 

 

பொற்றிகழ் வரையாக பொற்பவள சிறப்பாக – இறை

பற்றாசு நிறையேற்று பல்லாண்டு நீடுவாழ்க !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *