பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்

இலக்கியம் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் (All)

எத்தனை பதவிவெறி

இந்த மனிதருக்கு ?

செத்தால் அதையும்

சிவலோக பதவியென்பார் !

பத்தெடுத்த மாதங்கள்

பாரம் சுமக்காமல்

தத்தெடுத்துப் பிள்ளைக்குத்

தாயானால் பெருமையுண்டா ?

வித்தெடுத்துத் தூவி

வியர்க்காமல், உமிச்சிப்பி

முத்தெடுக்க முந்தும்

மூடர்க்கு உரிமையுண்டா ?

தகுதி இலாதார்க்குத்

தரலாமா உயர் பதவி?

சகதிக்கு எதற்காகத்

தங்க மணிக்கிண்ணம் ?

தேனூறும் மலர் அமர்ந்தால்

சிறப்படையும் கார்கூந்தல்

பேனேறி ஆட்சி செய்தால்

பெருமையுண்டா ?

சேவலைப்போய்

முட்டை அடைகாக்க

முன்னமர்த்தி, முட்டையிடும்

பெட்டைக்குக் கூவுகின்ற

பெருவேலை தரலாமா ?

தரத்தை உடையவன்

தன்னைத்தேடி வரன்வருவான்;

பரத்தை எனச் சொல்வேன்

பதவிதேடிச் செல்வோரை !

மாலையிடும் மணவாளன்

மணிக்கரத்தால் கட்டுகின்ற

தாலியன்றோ பதவி! அதைத்

தானேயா கட்டுவது ?

உமிப்பதவி எல்லாம்

உலக்கைவரும் வரைதானே !

இமைப்பதவி உலகத்தில்

எல்லார்க்கும் வாய்த்திடுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *