பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி
காப்பு
பாடிடும் கவிதையும்
பற்றிடும் கொள்கையும்
படர்ந்து நிற்க
நாடினேன் நின்னருள்
நாயனே உதவுவாய்
நலம்தா இறையோனே !
திறப்பு
எல்லா உலகும் ஏகமாய் காக்கும்
அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் !
வல்லோன் நீயே அருளுடையாளன் !
நல்லோர்க் கென்றும் அன்புடையோனே !
மக்கள் செய்யும் செயலுக் கேற்ப
மறுமைநாளில் தீர்ப்பளிப் போனே
உன்னையே நாங்கள் வணங்கு கின்றோம் !
உன்னிடத்தன்றோ உதவியும் கேட்போம் !
நேரிய வழியில் எம்மை நடத்திக்
காரிய மாற்றக் கருணை செய்வாய் !
அல்லது நீக்கி அன்பா யெம்மை
நல்லோர் பாதையில் நடத்திடு யினிதாய் !
நெறியினை விட்டு நின்சினப் பட்டோர்
அவர்வழி நீக்கி அருள்வாய் இறைவா !
ஏகத்துவம்
இல்லையொரு நாயன்
அல்லா(ஹ்) வே ஏகன் !
எந்தவொரு தேவையும்
இல்லாத் தூயோன் !
வல்லவனோ பெறவுமில்லை
பெறப்படவு மில்லை !
வையகத்தில் அவனுக்கு
இணையே இல்லை !
பல்வளங்கள் கொழிக்கின்ற
மக்கா தந்த
பண்புடைய மஹ்மூதர்
கதீஜா பாங்கர்
அல்லாஹ்வின் திருத்தூதர்
மக்கள் நெஞ்சில்
அருளாட்சி செய்ய வந்த
அன்பின் வேந்தர் !
இறை மகத்துவம்
நித்திய ஜீவன் என்றும் நீ !
நிலையானவன் உனை யென்றும்
நித்திரை யென்பது பிடிக்காது
நீயே சர்வ நாயகனாம் !
வானம் பூமி உனதாட்சி
வையம் உய்ய அருள் மாட்சி !
தானம் மிக்கோய் உனையன்றி
தரணியில் ஏதும் நடக்காது !
உனது மேன்மைத் துணையின்றி
உலகில் எதுவும் பெறமுடியுமா !
நினது ஆட்சி மிகப்பெரிது !
நீயே காக்கும் மாண்பாளன் !
விண்ணப்பம்
என்னுள்ளம் ஆளும்
வல்லோனே நீயே !
எங்கும் நிறைந்தாய்
துணை தருவாயே !
கலிமா மலரில்
கனிகின்ற தேனே !
கருவுக்குள் நின்றும்
காப்பாற்று வோனே !
நினையாத நேரம்
ஒருநாளும் ஏது?
நீயன்பு கொண்டால்
துன்பம் வராது !
கரைகின்ற வாழ்வில்
நிறையென்ன கண்டேன்
கதியேது மின்றி
தடுமாறு கின்றேன் !
சிறிதேனும் தேற்று
எனக்கின்பம் காட்டு !
சிந்தும் கண்ணீரை
சிறிதேனும் மாற்று !
மாண்பாளன்
துணைதந்து எனையாளும் தூயவனே !
துன்பங்கள் வாராமல் காப்பவனே !
அணைக்கின்ற தாயன்பே ! அற்புதமே ! நெஞ்சில்
அலைமோதும் எண்ணங்கள் உன்வசமே ! (துணை)
தினமுன்னை நினைக்காத நேரமில்லை – உன்
திருவருள் கூடாமல் ஏதுமில்லை !
கனிவாக உனைப்பாடிக் களித்திருப்பேன் ! – இனி
கவலைகள் எனக்கில்லை சுகம்பெறுவேன் ! (துணை)
மறையெனும் மாமருந்தின் மகத்துவமே ! – எங்கள்
மனதினில் உறவாடும் இலக்கியமே !
நிறையின்பம் தருபவனே நித்திலமே – எம்மை
நேர்வழி நடத்துகின்ற உத்தமனே ! (துணை)
மறுமையெனும் நாளில் அதிபதி நீ ! – அன்று
மலைத்தேனாய் அருள் சுரப்பவன் நீ !
கருணை நபித்தூதைத் தந்தவன் நீ – என்றன்
கவிதையில் கருவாகி இனிப்பவன் நீ ! (துணை)
அருட்கொடை
ஒன்றிறைக் கொள்கை தன்னை
உலகெலாம் பரப்ப வந்த
தென்றலே ! தீனின் சோலை
தேனொளி விரிப்பே ! கண்கள்
கண்டுதான் இன்பங் கொள்ள
கதிதரும் மரக்கலம் போல்
இந்தமா நிலத்தில் வந்த
இறையவன் கொடையே ! தாங்கள்
கல்லினால் எறிந்த பேர்க்கும்
கருணையே செய்தீர் ; உம்மைச்
சொல்லினால் சுட்ட பேர்க்கும்
சுகங்களே தந்தீ ரன்பாய் !
வல்லமையோடு புர்கான்
வான்மறை வேதம் கொண்டு
நல்லதோர் வழியிற் செல்ல
நடத்திய நாயன் தூதே !
சுவர்க்கம் இங்கே
இறையோனின் திருத்தூதே ! நபிநாதரே !
இதயத்தில் வாழ்கின்ற அன்பாளரே !
மறைசொல்லும் வழி சென்றீர் மஹ்மூதரே !
மணம்வீசும் கஸ்தூரி மாண்பாளரே ! (இறை)
அப்துல்லா ஆமினா தவசீலரே !
அகிலத்தின் குபிர்போக்கும் அருளாளரே !
இப்பாரில் இஸ்லாத்தை இறை நேசரே !
எழிலாக வளர்த்திட்டீர் மஹ்மூதரே !
மாசில்லா குணக்குன்றே நபிநாதரே !
மங்கையாம் கதீஜாவின் மணவாளரே ! (இறை)
மதுவுண்ணல் தீதென்றீர் நபிநாதரே !
மணஞ்செய்தால் ‘மஹர்’ தந்து முடியென்றீரே !
இதமாக எமக்கெல்லாம் நபிநாதரே !
ஈமான்கொள் என்றன்பாய் உரைசெய்தீரே !
நாமெலாம் குலம்ஒன்றே என்றார்த்தீரே !
நமையாளும் இறையொன்றெனச் சொன்னீரே ! (இறை)
தாயாரின் பாதத்தில் நபிநாதரே !
தாமுண்டு சொர்க்கம்தான் எனச் சொன்னீரே !
சீனம்தான் சென்றேனும் தீனோர்களே
சேருங்கள் நல்லறிவைத்தான் என்றீரே !
உயர்பண்பின் உருவான நபிநாதரே !
உமை என்று மறவோமே மஹ்மூதரே ! (இறை)
பயமேன் சுகமே
அல்லாஹ் மிகப்பெரியோன்
வல்லோன் அருட்கொடையை
அறிவாய் எந்தன் மனமே !
அள்ளிக் கொடுப்பவனை
அல்லற் தடுப்பவனை
அன்பாய்த் தொழு தினமே !
எல்லாம் அறிந்தவனை
எங்கும் நிறைந்தவனை
இன்றே தொழு நலமே !
எண்ணம் மீட்சி பெறும்
இன்பம் பூத்து வரும்
இல்லை யொரு பயமே !
சொல்லில் போற்றவொணா
சொந்தம் தருபவனை
தொழுவாய் இனிச் சுகமே !
தோன்றும் வாழ்வில் நிதம்
துயரம் ஏதுமில்லை
சுவையே கூடி வருமே !
கல்லில் தேரையதும்
கனிந்தே மிக வாழ
கருணை செய்யும் அவனே !
காலம் உள்ளளவும்
நாளும் காத்திருப்பான்
கனிவாய் தொழு சுகமே !
எண்ணம் பூக்கும்
கவிஞர் மு ஹிதாயத்துல்லா
சுவனம் சென்றிட
துயரம் வென்றிட
தொழுகை செய்யுங்கள் !
சுகமே கண்டிட
சுவையே வந்திட
தொழுகை செய்யுங்கள் !
கவனம் மனதினில்
கடவுள் ஆணையைக்
கருத்தில் வையுங்கள் !
கவலை ஏகிட
களிப்பாய் ஆகிட
தொழுகை செய்யுங்கள் !
புவனம் தழைத்திட
பூமான் நபிகளின்
சுவடைப் பாருங்கள் !
பொலிவாய் வாழ்ந்திட
புன்னகை சேர்ந்திட
தொழுகை செய்யுங்கள் !
எவரும் இன்னும்
தொழுகா திருந்தால்
எடுத்துக் கூறுங்கள் !
எண்ணம் பூத்திடும்
இன்பம் சேர்ந்திடும்
என்றே கூறுங்கள் !
பசி
– கவிஞர் மு ஹிதாயத்துல்லா –
நோன்பின் மாண்பை உணருங்கள் !
நோய் நொடியின்றி வாழுங்கள் !
மாண்புடைய பிறை ரமலானில்
மகிழ்வே பூக்க வரும் நோன்பே !
கல்பின் தூசி கழுவிடலாம்
கவலை வென்று வாழ்ந்திடலாம்
சொல்வார் பெரியோர், நோன்பாளர்
சுவனச்சாவி உடையோ ராம் !
முப்பது நாளும் நோன்பேற்று
முறையாய் அவனைத் தினம் போற்றி
இப்புவி மீதில் எழிலாக
இன்பம் கண்டே வாழ்ந்திடுவீர் !
தனித்தி ருப்பவனைத் தனித்தி ருந்து
தயவாய் அவனின் தயைகேட்டு
பசித்தி ருந்தே ஆன்ம சுகம்
பலவாய் நாமே பெற்றிடவும்
விதித்த இறைவன் கட்டளையை
விரும்பி நாமே நோன்பேற்போம் !
குதித்தே வளங்கள் வாழ்வில் வரும் !
கொஞ்சி இறையருள் கூடிவரும் !
ஈதலறம்
எல்லாச் செல்வமுமே
அல்லாஹ் தந்ததுதான்
ஏனோ எந்தன் மனமே
இல்லார்க் குதவிடவும்
இன்னல் தடுத்திடவும்
இல்லை நல்ல குணமே !
வல்லோன் வகுத்தவழி
நல்லோர் உரைத்தபடி
செல்வாய் இனித் தினமே !
வாடிக் களைத்த முகம்
தேடிக் களிப்பு பெற
வழங்கு ஈகை சுகமே !
நில்லா மனிதர்களின்
வாழ்க்கை நிலையாமை
நீயேன் அறிந்ததில்லை !
நெடுநாள் பயணமில்லை
ஒருநாள் சுகமுமில்லை
நீயேன் உணரவில்லை !
நல்லோர் போற்றிடவே
நன்மை ஈட்டிடவே
நலமாய் இனியேனும்
நலியும் ஏழை முகம்
கனியக் கொடுத்துதவு
நாயன் கட்டளை யிதுவே !
புனிதப் பயணம்
அல்லாஹ் ஒருவன்
அவன்தூதர் முஹம்மதெனும்
நல்லதிருக் கலிமா
நாவினிக்க ஓதுபவர்
வல்லோன் இறைகூறும்
வணக்கமுறைத் தொழுகையெலாம்
நல்லபடியாய் செய்து
நலிவுற்று வருவோர்க்கும்
இல்லையெனாது ஜக்காத்
ஈகையும் தான் வழங்கி
அல்லல்களை வென்று
அருட்தாக சாந்திபெற
செல்வார் செல்வரெலாம்
திருமக்கா ‘ஹஜ்’ என்றே !
தந்தை நபி ஆதம்
தான்வணங்கும் ஏகனுக்கு
சிந்தை களிக்கச்
சிருஷ்டித்த திருக்கூடம் !
மானிலத்தின் மார்பகமாய்
மாண்பாய் ஒளிவீசும்
தேனெழுத்தின் உச்சரிப்பாம்
திருமக்காப் பதிநகரம் !
மறுவிலா தெழுந்த
முழுமதியாம் நம்
அருமை நாயகம் ஸல்
அவதரித்த பொன்னகரம் !
இறைவன் திருமுன்னர்
எல்லோரும் சமமென்னும்
அரிய கருத்துக்கு
அங்கேதான் நல்விளக்கம்
தெரியக் காண்கின்றோம் !
தெளிவும் பெறுகின்றோம் !
மன்னர் வருவார்
மந்திரியும் தான்வருவார்
அண்ணா கமாலும்
அபுபக்கர் தான்வருவார்
எவர்தான் வந்தாலும்
இறைவன் திருமுன்னே
அவர்கள் சமமாக
அருகருகே தான்தொழுவார்
பலமொழிகள் பேசும்
பறவையாய் அங்கேதான்
உலகத் தீனோர்கள்
எல்லோரும் ஒற்றுமையாய்
ஒருமொழியால் ஓருணர்வாய்
ஒன்றாய் கலக்கின்றார் !
இனமத பேதமில்லை
ஏற்றத்தாழ் வங்கில்லை
சகோதரத்து வத்தின்
சத்திய விளக்கமே
மகோன்னத ஹஜ்ஜாம்
மறுக்க முடிந்திடுமா?
ஹஜ் செய்யப் பெரியோர்
துல்ஹஜ்ஜில் செல்வார் !
பொல்லாங் கின்றி
புனிதஹஜ் போய்வருவோர்
எல்லோரும் நல்லன்னை
இன்றீன்ற சேய்போல !
வள்ளல் திருநபியார்
வாஞ்சையாய் நமக்குரைத்தார்
உள்ளந்தனி லேற்றி
உண்மையிதை உணர்ந்திடுவீர் !
முள்ளில்லா ஜிஹாது
ஹஜ்ஜென்று மொழிந்திடுவார் !
வள்ளல்நபி ஸல்அம்
வாஞ்சையோடு மாந்தருக்கே !
ஹஜ்ஜின் திருவசனம்
காருண்ய நன்னபிக்கு
ஹிஜ்ரி ஆறாண்டே
கிட்டிய தென்பார்கள் !
செல்வம் படைத்த
தீன்குலச் சோதரரே !
எல்லோரும் ஹஜ்கடமை
இனிதா யேற்றிடுவீர் !
வரவேற்பு
தீன்குலம் தந்த சோதர மணிகாள் !
வான்முட்டட்டும் தக்பீர் முழக்கம் !
அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் !
லாயிலாஹ இல்லல்லாஹு
முஹம்மது ரசூலுல்லாஹ்
இறையவன் அருளை இனிதே பெற்று
இன்று பிறந்த குழந்தைகள் போல
ஹஜ்ஜை முடித்த ஹாஜிகள் வருகை !
கண்ணியம் மிக்க பெரியோர் வருகை !
வாவா தம்பி வாழ்த்துப் பாடு !
பூவாய் இதழில் புன்னகை சேரு !
நாவே மணக்க நலமாய் தமிழில்
கீதம் பாடு நல்லுரை கேளு !
இங்கே இன்று ஹாஜிகள் வருகை !
எண்ணம் பழுத்த நல்லோர் வருகை !
இவர்தம் கால்கள் புனிதக் கால்கள் !
இவர்தம் செவ்வாய் ஏகன் புகழை
லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்கென்று
லட்சியம் இசைக்கும் புல்லாங் குழல்கள் !
இங்கே இன்று ஹாஜிகள் வருகை !
எண்ணம் பழுத்த நல்லோர் வருகை !
இறைவன் கட்டளை இனிதா யேற்று
எழிலாய் சிரிக்கும் அன்பு முகங்கள்
இன்பத் தீனின் இதயங்க ளாக
எண்ணம் வாழும் ஜீவ நதிகள் !
இங்கே இன்று ஹாஜிகள் வருகை !
எண்ணம் பழுத்த நல்லோர் வருகை !
நம்பிக்கை
ஒருவனே இறைவ னல்லாஹ் !
உயர்வினை அளிக்கும் மேலோன் !
மறைதந்த இறை யோனுக்கு
இணை வைத்தல் பாவம் பாவம் !
இறையவன் அரச னென்றால்
ஏகனின் சட்டம் தன்னை
அறிவிப்போர் அமர ராவார் !
அரசனின் ஆணையெல்லாம்
அறிவீரா எதுவே யென்றால்
அழகெனச் சொல்வேன் நானும் !
நிறைவினை யூட்டி நெஞ்சை
நேர்வழி செல்லத் தூண்டும்
அருள்மறை வேதங்கள் தாம்
ஆண்டவன் சட்ட மாகும் !
மாட்சிமை மிக்க மன்னன்
மந்திரி பிரதானி யாக
ஆட்சியே செய்யும் நல்ல
அருள்நபி மார்க ளாவார் !
இவர்களைக் கொண்டே இங்கு
இறைவனின் சட்ட மெல்லாம்
அவனிவாழ் மக்களன்பாய்
அறிவீரே அழகாய் தானே !
இங்குள்ள மாந்தருக்கு
சரியான தீர்ப்பேயில்லை !
இதனால்தான் தீனோர்நாமே
ஏகனின் திருமுன் னாலே
இன்னொரு தீர்ப்பைக் காண
எல்லோரும் செல்கின்றோமே !
இம்மையில் நன்மை செய்தால்
இன்பமே உண்டு; அங்கே !
இம்மையில் தீமைசெய்தால்
ஏகனின் சினத்திற் காவோம் !
இனியேனும் தீமை செய்யும்
இயல்பினைத் திருத்திக் கொள்வீர் !
நன்மையே நாளும் செய்து
நாயனின் அன்பை ஏற்பீர் !
பேரொளி பிறந்தது
கண்களே காண்க ! இங்கே
கால்களே வருக ! இன்பப்
பண்களே இசைக்க ; நல்ல
பன்னீரே தெளிக்க ; உள்ளம்
அன்பிலே திளைக்க வல்லோன்
அருட்கொடை சிறப்பாய் மண்ணில்
வந்துமே பிறந்தே உள்ளார் !
வரிசைமா முகம்ம தென்பார்
மனையெலாம் மகிழ்ச்சி வெள்ளம்
மனதெலாம் இனிப்பு வெள்ளம் !
நினைவெலாம் பூத்த வண்ணம்
நிலவுதே தாய்மை எண்ணம்
கனவெலாம் கனிந்த வண்ணம்
கதிர்மணி ஒளியின் வண்ணம் !
இனியெலாம் இன்பம் ! இன்பம் !
எழில்நபி பிறந்த தாலே !
தென்றலோ தேனோ நூலோ?
திருமறை அமுதுப் பாலோ?
அந்தநாள் அப்துல் லாவும்
அன்னையார் ஆமீ னாவும்
சிந்தையே பூக்க அன்பாய்
தீனுக்கு அளித்த பாகோ?
வந்தபூ மழையோ வாழ்வோ?
வைகறை ஒளியே தானோ?
இறையவன் ஒருவ னென்னும்
இசைத்திடும் யாழே தானோ !
நெறிகளோ பாசம் பூக்கம்
நெஞ்சமோ? மண்ணில் மாந்தர்
மறையொளி வெளிச்சம் கொண்டு
மனதெலாம் சிறக்க வென்று
கரையினில் சேர்க்கும் அன்புக்
கப்பலோ? கற்கண் டாமோ?
அன்னையார் அலிமா கொஞ்சி
அமுதீந்த செல்லக் கிளியோ?
எண்ணமே செழிக்க யெங்கள்
இதயத்தில் பெய்யும் மழையோ?
திண்ணமாய் தீனோர்க் கெல்லாம்
திருக்குடை தானோ? என்ன
புண்ணியம் செய்தோம் ! நமக்கோர்
புதுநெறி காட்ட வந்தார் !
வசந்தம் வருகை
இத்தரை மாந்தர் வாழ்வில்
ஏதுமே அறியா வண்ணம்
நித்தமும் துயிலில் ஆழ்ந்த
நிலையினைப் போன்றி ருந்தார் !
உத்தமர் முகம்ம தென்பார்
உணர்ந்திதை உள்ளம் வாடி
இத்தகு தீமை மாய்க்க
ஏங்கினார்; எண்ணம் கொண்டார் !
நாற்பது வயதே ஆன
நங்கையாம் கதீஜா உள்ளம்
ஈர்த்தது நபிகள் மீது
இணைந்தனர் வாழ்வில் ஒன்றாய் !
கூர்த்தநல் மதி படைத்த
குலக்கொடி கதீஜா மேன்மை
வார்த்தையில் அடங்கா; அன்னோர்
வரலாற்றில் புதிய ஏடு !
மாநகர் மக்கா ஓரம்
மலையெழில் ஹீரா பொதும்பில்
நாயனின் அருளை வேண்டி
நங்கையாம் கதீஜா பாங்கர்
ஆழ்நிலைத் தியானம் செய்தார்
அங்கேயே பலநாள் தங்கி
ஏகனின் அருளுக் காக
என்பெலாம் உருக லானார் !
நான்குநாள் வரையில் கூட
குகையிலே தியானம் செய்வார் !
பாங்குடன் இல்லம் வந்தால்
பனிமலர் கதீஜா பூத்து
நேயமாய் கணவர்க் கென்றும்
நித்தம்நற் பணிகள் செய்வார் !
காவியம் போற்ற வாழ்ந்து !
கருத்தெலாம் சிறக்க லானார் !
நாட்களும் மெல்ல மெல்ல
நகர்ந்துதான் செல்லச் செல்ல
ஈக்கள்தாம் இனிப்பை யொட்டி
இருக்கின்ற நிலையைப் போல
தீர்க்கமாய் தியானம் தன்னில்
முகம்மது இருக்க ; கொஞ்ச
நாட்களில் அவருக்கேதான்
நற்குறி தெரியக் கண்டார் !
இருட்குகை இரவில் ஓர்நாள்
ஒளியெலாம் நிரம்பக் கண்டார் !
மருட்சியே கொண்டு அந்த
மகிழ்வொளி காட்சி கண்டார் !
அருட்குரல் அங்கே யொன்று
அமுதென இனிக்கு மாறு
விருட்டென ஒலிக்கக் கேட்டு
வியந்தாரே அந்த நேரம் !
வானவர் தலைவர் ஜீப்ரீல்
வாஞ்சையாய் அவரை நோக்கி
ஓதுவீர் ! ஓதுவீ ரென்றார்
உமதிறை திருப்பேர் கொண்டு
ஏதும்நான் அறியா உம்மி
என்றவர் எடுத்துக் கூற
ஓதுவீர் மீண்டும் மீண்டும்
இறையவன் பேரால் என்றார் !
தாதவிழ் மலரை நெஞ்சில்
தழுவினாற் போல வானோர்
நேயநல் கரம் இணைத்து
முகம்மதைத் தழுவ; மேலோன்
நாயனின் அருளால் அங்கு
நற்றிரு வசனம் கேட்க
ஏகனின் அன்பை பெற்றே
முகம்மது நபியே யானார் !
தீன்குலம் என்ன; இந்த
ஞாலமே தழைத்து வாழ
வான்மறை ‘புர்கான்’ வேதம்
வள்ளல்மா நபியின் மூலம்
மாண்புறு ரமலான் மாதம்
இருபத்தி யேழாம் நாளில்
ஆண்டவன் ரஹ்மான் மேலோன்
அழகென இறக்கி வைத்தான்
(வேறு)
உம்மி நபியாய்
குகையிருந்த முகம்ம தென்பார்
அம்மம்ம ! இறையருளால்
ஆன்மீகச் செல்வரானார் !
எம்மான் நபிமணியின்
எழிலுரை கேட்டபின்பே
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றதுவே !
வெற்றுத் தாளெல்லாம்
வீரமா காவியமாய்
முற்றவும் மாறி
முன்னேற்றம் கண்டதுவே !
சற்குண நபியிடம்
சர்வகலா சாலையே
கற்றது பாடமென்றால்
நபியவர் பெருமை என்னே !
(வேறு)
இலக்கணம் மறையே என்றால்
இலக்கியம் நபியெங் கோமான் !
மணத்திட வாழ்வும் நாமும்
மதித்திதை ஏற்றம் காண்போம் !
சுகத்தினில் மிதப்போம்; எந்தத்
துயரையும் வெல்வோம்; இந்த
இகத்தினில் காண்போம் நன்மை !
இதயங்கள் பூக்க வாழ்வோம் !
பொறுமை
சத்திய இஸ்லாம் தன்னை
தாரணிக் குணர்த்த வந்த
புத்தகம்; புதுச்சம் பாவாய்
புன்னகை; பொலிவின் தேக்கம் !
நித்தமும் தொழுகை மேலோன்
நினைவிலே கால மெல்லாம்
இத்தரை வாழ்ந்த வாழ்வின்
இலக்கணம் நபியெங் கோமான் !
நபித்துவம் பெற்ற பத்தாம்
ஆண்டினில் ஓர்நாள் அண்ணல்
சமத்துவ தீனின் கொள்கை
சாற்றிட ‘தாயிப்’ போனார்
பவித்திரம் இழந்து மக்கள்
பகுத்தறிவைத் தான் இழந்து
விசித்திரம் ‘அல்லாத்’ என்னும்
விக்ரஹ வணக்கம் செய்தார் !
உண்மையைச் சொல்லப் போனால்
ஒப்புவார் யார்தான் இங்கே?
நன்மையைச் செய்யப் போனால்
நாலுபேர் பழியைச் சொல்வார்
புன்மனச் செயலுக்(கு) அஞ்சி
புறமா நாம் காண்ப திங்கு …?
கண்களில் விழுந்த தூசி
கையெடுத் தெடுக்க வேண்டாம் …?
நாயனின் தூதர் நானே
நபியென்றன் சொல்லைக் கேளீர் !
ஏகனுக் கிணையே வைத்தல்
என்றுமே பாவம்; இந்த
வீணான சிலை வணக்கம்
வேதனை வேண்டா மென்றே
கூறவும், தாயிப் மக்கள்
கொதித்தனர் சினமே கொண்டார் !
“உன்னையா நபியென் றாக்கி
இறையவன் அனுப்பி வைத்தான்
என்னய்யா வெட்கம்” என்று
எல்லோரும் முகம் சுளித்து
புண்பட இழிவாய் பேசி
பொருந்திடாச் செயல்கள் செய்தே
அண்ணலார் பேச்சைக் கேட்க
அனைவரும் மறுத்தே விட்டார் !
அற்புத மறையின் மேன்மை
அன்புடன் உணர்த்த வந்த
பொற்புடை நபிகள் மீதே
போக்கிரி பலபேர் சூழ்ந்தே
கற்களை எறிந்தார் அந்தோ …
நிற்கவும் முடியா வண்ணம்
விரட்டினார் வெறியால் தானே !
தாகமோ நாவைத் தள்ள
தடுமாறி மெல்ல மெல்ல
ஏகனின் தூதர் அந்தோ
எப்படிச் சொல்வேன் நானும்
சீலமா நபிகள் தாயிப்
நகர்தனை விட்டுச் சென்றார்
காகிதப் பூக்கட் கெங்கே
கஸ்தூரி வாசம் எட்டும் …?
ஏவல்தான் நபியி டுங்கள்
இவர்களை அழியச் செய்வோம்
பாவிகள் செயலை எண்ணி
பதைக்கவே கேட்டார் வானோர்
ஈதெலாம் பாவம்; வேண்டாம் !
இதற்கு நான் வரவே இல்லை
ஆதர வாக யிவர்க்கே
அனுப்பினான் அல்லாஹ் என்றார் !
இத்தரை மாந்தர் வாழ
எத்தனை துன்பம் கண்டார் !
சத்திய இஸ்லாம் மார்க்கம்
தழைத்திட தன்னைத் தந்தார் !
உத்தமர் நபிகள் கோமான்
உயர்வழி காட்ட வந்தார் !
எத்துணை அன்பு பாசம்
ஏந்தல்மா நன் நபிக்கே !
பொறுமையும் அன்பும் கொண்டார் !
புவியினில் தீனுக் கெதிராய்
சிறுமதி யாளர் செய்த
தீங்கெலாம் மறந்து நின்றார் !
அறியலாம் இதனால் நாமே
அனைவரும் வாழ்வி லெல்லாம்
பொறுமையும் அன்பும் கொள்வோம் !
பொலிவுடன் காப்பான் அல்லாஹ் !
புதிய திருப்பம்
அண்ணல் நபி
வெகுநாளாய் நெஞ்சம்
வேண்டி நோன்பிருந்து
ரகுமானின் நல்ல
ரகுமத்தால் நாம்கண்ட
ஞானச் சுடர்விளக்கு !
நாடறிந்த தீன்விளக்கு !
கானக் குரல்கொடுத்து
கட்டவிழ்த்த மணிவிளக்கு !
அலிமாத் தாயாரின்
மடிதவழ்ந்த அகல் விளக்கு
கலிமா மண்டபத்தின்
கண்கவரும் திருவிளக்கு !
அஞ்ஞான இருளில்நாம்
அகப்பட்டி டாமலே
மெஞ்ஞானக் கரைசேர்க்கும்
மிக நல்ல தீன்விளக்கு !
வாய்மலரில் கஸ்தூரி
வாசம் கொப்புளிக்கும்
தாயன்பின் பெட்டகமாய்
தவழ்ந்துவரும் குலவிளக்கு !
முன்மாதிரி யின்றி
முழுதுலகைப் படைத்திட்ட
நன்மாதிரி யாய்விளங்கும்
நாயனவன் ; வாழ்பவர்க்கே
முன்மாதிரி வேண்டி
முகம்மதெனும் நாமத்தில்
இம்மா னிலத்தில்
இறக்கிவிட்ட சரவிளக்கு !
பெருமானார் நபிகள்
பிறப்புக்கு முன்னாலே
திருமக்காப் பதியில்
தீமைகள்தாம் மல்கியது
உள்ளம் ஒருவழியும்
உதடோ மறுவழியும்
கொள்ளும் கைகால்கள்
பிறவழியில் சென்றியங்க
மனித மனமெல்லாம்
அறியாமை யிருள்மூழ்கி
புனித மறைவழியே
போய்ச்சேர்ந்து மீளாமல்
வாதம் புரிந்து
வன்கொடுமைதான் செய்து
நீதி தவறி
நெறிகெட்டு வாழ்ந்தார்கள்.
நேர்மை தவறி
நெறிபிறழ்ந்த மாந்தர்களை
சீரோங்கும் தீனெனும்
திருக்குடையுள் வந்தமர
பூமான் நபிநாதர்
பொன்னான போதனைகள்
சீராய் மாந்தருக்குச்
சிறப்பாய் எடுத்துரைத்தார் !
ஐவேளை வணங்கி
ஆண்டுதோறும் நோன்பிருந்து
மெய்யான முஸ்லீமென
மேதினியில் தலை நிமிர்ந்து
வாழ அழைத்திட்டார்;
வள்ளல்நபிக் கெதிராக
பாழும் குறைஷிக்
காபிரெலாம் ஆர்ப்பரித்தார்.
மேதினியில் தீன்விளக்கை
மேன்மையுடன் ஏற்றிவைக்க
தூதர் முகம்மதுவைத்
தொடர்ந்துவந்த சோதனைகள்
ஒன்றா யிரண்டா …
உரைப்பதற்கு அம்மம்மா …!
இன்று நினைத்தாலும்
இதயம் குலுங்குதம்மா !
கல்லால் அடித்தார்கள் ;
காயம்படச் செய்தார்கள்
சொல்லிக் சூடேற்றித்
துன்பங்கள் கொடுத்தார்கள் !
எல்லாம் பொறுத்திருந்து
ஏந்தல்நபி நாயகமோ
அல்லாஹ் விடத்து
அரியதுதுஆக் கேட்டு உவந்தார்
உருவில்லா யழிவில்லா
உலகெல்லாம் புரக்கின்ற
இறையொன்று குலமொன்று
எல்லோரும் ஒன்றென்னும்
நிறைவான நெறிசொல்லி
மறைஞான ஒளிதந்தார் !
குறைஞானக் காபிர்
கூட்டங்கள் இதையெல்லாம்
ஏற்க மாட்டாமல்
எல்லோரும் ஆர்ப்பரித்தே
ஆர்த் தெழுந்தார்கள்
அநியாயம் செய்தார்கள்
நல்லார் நபிமணியை
நாயனவன் அருட்கொடையை
பொல்லாதவ ரென்று
பொய்பட்டம் கொடுத்தார்கள்
(கி.பி) (வேறு)
அறுநூற்றி இருபத்தியி ரண்டாம் ஆண்டில்
அமைந்த ஜுனிருபத்தி யெட்டாம் நாளில்
வருந்துயர் கடக்கவோர் தோணி யாக
வந்துதித்த நபிநாதர் மதீனா நோக்கி
அரும்பயணம் துவங்கிட்டார்; அந்த ஆண்டே
அழகார்ந்த ‘ஹிஜ்ரி’ தொடக்கம்; அண்ணல்
பெருமானார் வாழ்க்கையிலே ஏற்றம் மிக்க
பெரியதோர் திருப்பமும் நிகழ்ந்த தன்றே !
(வேறு)
தீன்நெறிக் காவலரின்
திருமதீனப் பயணத்தை
வீணே காபிர்கள்
தடுக்க முயன்றார்கள்
‘தாருனத்வா’ யென்னும்
மக்கநகர்ச் சாவடியில்
காருண்ய நபிக்கெதிராய்
காபிரெலாங் கூடி
கூட்டம் போட்டுக்
குதித்துக் கொண் டங்கிருந்தார்
மாட்டுக் கொம்பா
மலைமுகட்டைச் சரித்துவிடும்…?
வையக் குழந்தையை
இருளில் சிக்கவைத்தே
பையக் கதிரோன்
மேற்றிசையில் பாய்ந்துவிட்டான் !
இதுதான் தருணமென
குரைஷிக் காபிர்கள்
மெதுவாய் நாயகத்தின்
வீட்டினைச் சூழ்ந்தார்கள்
அண்ணலுக்கு தீங்கிழைக்க
அபுஜகில் என்பான்தான்
எண்ணம் கொதித்தெழுந்து
இறுமாப்பால் துடித்திட்டான்
கல்லாதார் உள்ளம்போல்
பொல்லாத மையிருளில்
எல்லோரும் நபிமணியை
எதிர்க்க முனைந்தார்கள்
நல்லோர்கள் நாட்டத்தை
நலமுடனே அறிந்துவக்கும்
அல்லாஹ் கனிந்திட்டான் ;
இச்செய்தி நபியறிந்தார்
இறைவ னருளால்
காபிர்க ளெல்லோரும்
உறைக்குள் வாள்
உறங்கிக் கிடப்பதைப்போல்
கொலைசெய்ய வந்த
கூட்டங்கள் தனைமறந்து
தலைசாய்த்துத் துயிலை
தழுவிக் கிடந்தார்கள்
பாய்புலியாம் அலியைத்தம்
படுக்கையில் வைத்தேபின்
வாயிற் கடந்து
வள்ளல்நபி தப்பிவிட்டார்
ஏதோஓர் உணர்ச்சியிலே
காபிர்கள் பின்னெழுந்தே
தூதர் முகம்மது
இருப்பார் என்றெண்ணி
கதவைத் திறந்துகொண்டு
காற்றாய் புகுந்தார்கள்
அங்கே ..
மெதுவாய் புலியலியார்
புன்னகையாய் நின்றார்கள்
எண்ணம் கொதிப்பேற
எல்லோரும் அவரிடத்தில்
எங்கே முஹம்மதென்று
எக்காள மிட்டார்கள்.
நானறிந்த தென்ன …
நபிநாதர் மர்மத்தை
தானறிவான் இறையென்று
சாந்தமுடன் அலிசொன்னார்.
மலையைத் தகர்க்கவந்த
மாட்டுக் கொம்பெல்லாம்
நிலையற்று வீழ்ந்து
நெஞ்சொடிந்து போனதுவே.
நன்நெறியை இங்கு
நிலைநாட்ட வந்துதித்த
அண்ணல் நாயகத்தின்
அருந்தியாகம் என்னென்பேன் !
மக்காமாநகர் விட்டு
மதீனா செல்கையிலே
ஹக்கனவன் இறையில்லம்
கஃபாவைக் கண்டுநின்றார்
“என்னுள் நிறைந்த
எழிலோங்கும் கஃபாவே
உன்னை விரும்புகிறேன் ;
ஆனாலிவ் வூர்மக்கள்
பொன்தீனின் மேன்மை
புரியாமல் அறியாமை
இன்னலுக்(கு) ஆட்பட்டு
இடரே படுகின்றார் !”
என்று உளமேங்கி
ஏந்தல்நபி நாயகமே
அன்புநிறை தோழர்
அபுபக்கர் தம்மோடு
குன்றடர்ந்த ‘தெளர்”
குகைநோக்கிக் செல்கின்றார்
குன்றாக் குணநிதியாம்
கோமான் நபித்தூதர் !
தெளரென்ற குகைக்கு
தாஹா நபிமணியும்
தம்தோழர் அபுபக்கர்
தம்மோடு வந்தடைந்தார்
தோளில் கிடந்த
துண்டெடுத்து அபுபக்கர்
நாள்பலவாய் இருந்த
தூசகற்றி குகைப்பொந்தை
தம்மருத் துணியால்
தானடைத்து ஓர்பொந்தில்
செம்மையாய் அடைக்கத்
துணியின்றி அபுபக்கர்
தம்மருங் கால்வைத்து
தகவாய் அப்பொந்தைச்
செம்மையாய் அடைத்து
திருநபியின் அருகமர்ந்தார்.
அண்ணல் நாயகமோ
அபுபக்கர்தம் மடியில்
கண்ணயர லானார் :
நடந்த களைப்பாமோ …?
சின்னேரந் தன்னில்
சீறியொரு பாம்பொன்று
அன்புத் தோழர்
அபுபக்கர் பாதத்தில்
தீண்டிவிட விஷம்
தீயாய் தலைக்கேற
மாண்புடைய நாயகத்தின்
தூக்கம் கலைந்திடுமோ
என்றெண்ணி காலை
யெடுக்காமல் பொறுத்திருந்தார்.
என்றாலும் விஷம்
மென்மேலும் அதிகரிக்க
அன்பிற் சிறந்த
அபுபக்கர் கண்ணில்நீர்
ஒன்றிரண்டு துளிபட்டு
உத்தமர் நாயகத்தின்
கன்னத்தில் விழ
நபியேவிழித் தெழுந்தார்.
உள்ளம் பதறி
உடல்பதறி உயிர்த்தோழர்
சொல்லவொணா நிலையறிந்து
நபிகள் துடித்திட்டார்.
நடந்தவற்றை நற்றோழர்
அபுபக்கர் சொல்லக்கேட்டு
திடமாக நபிகள்தம்
திருவாயின் உமிழ்நீரை
கடிவாயில் வைத்து
ஹக்கனைத் தொழுதார்கள்
அடியோடு விஷம்
அப்படியே இறங்கியது.
மனிதப் புனிதர்
மாபெரியோ னருட்கொடையை
மக்கத்துக் குரைஷிகள்
தேடியலைந் தெப்படியோ
தெளர் குகையின்பக்கம்
நெருங்கி வந்தேதான்
தாஹா நபித்தூதை
தேடியலைந் திட்டார்கள்
ஹஸரத் அபுபக்கர்
காபிர் வருகையினை
மெதுவாய் நபியிடத்து
உரைத்துப் பின்சொல்வார்
“நபியே இப்போது
நாமிருவர் மட்டுந்தான்
என்றஞ்சிச் சொல்ல
ஏந்தல்நபி நாயகமோ
“நண்பரே நம்மோடு
இன்னொருவன் துணையாக
அல்லாஹ் இருக்கின்றான் !”
என்றே மொழிந்தார்கள்.
என்னே நபிவாக்கு !
இதயத்தில் தான்பதியும்
பொன்னார் மறையின்
புனிதமிகு வாசகங்கள் !
கண்ணில் சினப்பொறியும்
கையிலே கூர்வாளும்
எண்ணம் கொதிப்பேற
ஏந்தல்நபி நாயகத்தை
இன்னுங் காணோமே
என்றந்த ‘தெளர்’ குகையின்
முன்னம் நின்று
முனைப்பாகத் தேடிட்டார் !
கோதறப் பழுத்த
தீன்சோலை மாங்கனியாம்
தூதர் முஹம்மதுக்குத்
துன்பங்கள் வராமல்
எல்லாம் அறிந்த
ஏகன் அல்லாஹ்வே
நல்லார் நபிமணிக்கு
நன்மை யளித்திட்டான் !
சூழ்ச்சிக் காரர்களின்
சூழ்ச்சியை முறியடிக்க
சூட்சுமம் செய்திட்டான்
சுபுஹா னல்லாஹ்வே,
வள்ளல் நபியிருந்த
குகைவாயில் முன்பாக
புல்லும் பூண்டுகளும்
புறாமுட்டைக் கூடுகளும்
சிலந்தி வலைபின்னிச்
சிறையாய் அடைத்திருக்க
நுழைய மாட்டாமல்
காபிரெல்லாம் திரும்பி
இங்கெங்கே மானிடன்
இருக்கப் போகின்றான்
என்றெண்ணி ஏமாந்து
எல்லோரும் சென்றிட்டார்.
முள்ளை முள்ளாலே
கீறி எடுப்பதைப்போல்
அல்லாஹ் நபிமணிக்(கு)
அருந்துணை செய்திட்டான்
மூன்று நாளாக
தெளரெனும் மலைக்குகையில்
நல்லார் நபியோடு
அபுபக்கர் இருக்கையிலே
அபுபக்கர் வீட்டில்
ஆடு மேய்த்திட்ட
அமீர்இப்னு புஹீரென்னும்
அன்பான ஓரடிமை
ஊரில் எவருக்கும்
தெரியாமல் மறைவாக
சீரார் நபிமணிக்கும்
அபுபக்க ரென்பார்க்கும்
நல்லாட்டின் பாலை
நலமுடனே கொண்டுவந்து
மெல்லக் கொடுத்துதவி
மிகநல்ல பணிசெய்தார் !
மூன்றுநாள் சென்றபின்னர்
முகம்மதுதம் தோழருடன்
பாங்காக ஒட்டகத்தில்
பதிமதினா போய்ச்சேர்ந்தார் !
அண்ணலார் வருகையினைக்
கண்ட மதீனத்தார்
தெளஹீதின் தென்றலில்
தலையாட்டும் பூங்காவாய்
எண்ணம் மலர்ந்து
இதயங்கள் தான்துள்ள
இன்பம் கண்டார்கள் இனிது.
நன்மை
இணைவைக்கா(து) இறையவனை தொழுதால் நன்மை !
ஏகனவன் நல்லானை ஏற்றால் நன்மை !
மனையாளை நாவாலே காயம் செய்து
மனமொடியச் செய்யாதீர் நன்மை ; இன்னும்
பிணைவைத்த பொருட்களை உரியோர் கேட்கும்
பொழுதினிலே கொடுப்பதே நன்மை ; இங்கு
பணிவோடு வாக்குறுதி காத்தல் நன்மை
பழிக்கஞ்சி பொய்யுரை தவிர்த்தல் நன்மை !
அடுத்தவரை கெடுக்காமல் வாழ்ந்தால் நன்மை !
அயலான்மனை நோக்காமை நன்மை ; நன்மை
கெடுத்திங்கு வாழ்வதுவா நன்மை ; உன்னைக்
கெடாமல் நல்வழியில் செல்ல நாளும்
தடுப்பவரின் உரைகேளு நன்மை ; பொல்லாச்
சதைநட்பைத் தள்ளிவிடு நன்மை ; நன்மை
கொடுத்தகடன் கொடுத்துவிடு ; நன்றிமட்டும்
கொல்லாதே என்றென்றும் நன்மையாகும் !
பாவம்
இணைவைத்தல் பெரும்பாவம் ; ஏகன் அல்லாஹ்
இறையாணை மறுப்பதுவும் பாவம் ; வீட்டில்
மனையாளை நாவாலே காயம் செய்து
மனமொடியச் செய்யாதீர் பாவம் ! பாவம் !
பிணைவைத்த பொருட்களினை மோசம் செய்தல்
பெரும்பாவம் இது வேண்டாம் ; பொய்யும் பாவம் !
பணியாமை, வாக்குறுதி மீறல் பாவம் !
பழிபோடும் செயலெல்லாம் பாவம் ! பாவம் !
அடுத்தவரைக் கெடுப்பதுவும் பாவம் பாவம் !
அயலான்மனை நோக்குவதும் பாவம் ; மாந்தர்
கெடுத்திங்கு வாழ்வதுவும் பாவம் ; உன்னைக்
கெடாமல் நல்வழியிற் செல்ல நாளும்
தடுப்பவரைத் தடுப்பதுவும் பாவம் ; பொல்லாச்
சதைநட்பு வேண்டவே வேண்டாம் பாவம் !
கொடுத்தகடன் மறுப்பதுவும் பாவம் ; நன்றி
கொல்லுவதேபெரும்பாவம் ; வேண்டாம் ; பாவம்
துணைமான்
சித்தீக் அபுபக்கர்
செல்வத் திருமகளே !
எத்திக்கும் போற்றும்
ஏந்தல்நபி தம்வாழ்வை
தித்திக்கச் செய்த
தேனார் பூங்குயிலே !
சித்தம் வாழ்கின்ற
ஆயிசாப் பிராட்டியரே !
(வேறு)
பண்புடைச் செல்வ ரும்மை
பசித்தோர்கள் நாடிவந்தால்
இன்பமாய் அவருக் கென்றும்
இருப்பதை கொடுப்பீர் பூத்தே !
மண்ணகம் வாழும் தீனோர்
மக்களின் நெஞ்சில் வாழும்
சந்தனம் நீங்க ளென்பேன் !
தமிழ்மணப் பெருமை கொண்டீர் !
தனக்கென அரசளித்த
தனிக்கொடை நிதியை மீண்டும்
இணக்கமாய் அரசுக்கே தான்
எழிலுடன் திரும்பத் தந்தீர் ;
குணத்தினில் குன்றே ஆனீர் !
குறையற உழைத்தே வாழ்ந்தீர் !
மணத்திடும் உங்கள் வாழ்வின்
மாண்பெல்லாம் சொல்லப் போமோ
புல்லர்கள் செயலினாலே
புகழ்திரு நபிமணியார்
அல்லலே கண்டபோது
அம்மம்ம ! என்ன சொல்வேன் !
சொல்லொணாத் துயரம் கண்டு
துடியாகத் துடித்து விட்டீர்
நல்லதுக் கெல்லாம் காலம்
நாட்டினில் எங்கே உண்டு?
நோயுற்ற பெருமா னார்க்காய்
நொந்துமே வாட லானீர் !
தாயினும் மேலாம் அன்பைத்
தந்தீரே எம் நபிக்கே !
வாழ்வினில் வசந்தம் வந்தே
வளங்களைக் குவித்ததைப் போல்
தூயவர் நபியின் வாழ்வும்
துலங்கிடத் துணைமான் ஆனீர் !
(வேறு)
கணம்கூட தன்கணவர்
நலம்மறவா நங்கை !
காசினியில் பிறர்வாழ
வழிகாட்டும் மங்கை !
குணவதியாம் மனைநிதியாம்
கதிஜாவின் தங்கை !
கொடைகொடுத்த மகிழ்வினிலே
சிவந்ததும் செங்கை !
அணிமலரே ! ஆயிசாவே
அகம்துள்ள இங்கே
அவனிவாழ் பெண்களெல்லாம்
வாழ்ந்தாலே நன்றே !
பதுறுப்போர்
கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி
பொன்னகர் மதீனா வுக்கு
போய்ச் சேர்ந்த பிறகும் கூட
அண்ணலார் க்(கு) அங்கேஏனோ
அடிக்கடி குரைஷி குலத்தார்
எண்ணிலா இடர்கள் தந்து
இதயத்தை வதைக்கலானார்
நன்னகர் மதீனா வாழ்ந்த
நாயகம் தளர்ந்தா ரில்லை !
நபித்துவம் பெற்ற அண்ணல்
நாயகம் பதிமூன் றாண்டில்
குபிரிருள் நீங்க மக்காக்
குரைஷியர் திருந்தி வாழ
அபிமானம் கொண் டன்பாக
அரிய போதனையே செய்தார் !
எவருமே திருந்த வில்லை !
இன்னலே விளைவித் தார்கள் !
உத்தமர் நபியெங் கோவின்
உயிருக்கும் தீங்கு வைக்க
எத்தர்கள் முயன்றார் மக்கா
இளைஞர்கள் திரண் டெழுந்தார் !
புத்தியை அவர்கள் எங்கோ
புதைத்துதான் வைத்து விட்டு
கத்தியும் ஏந்தி அன்னார்
களம்புக மிக விரைந்தார் !
செல்வத்தின் செழிப்பில் அன்னார்
தினந்தோறும் கொடுத்து வந்த
தொல்லைக்கு முடிவு கட்ட
சுடர்நபி எண்ணங் கொண்டார் !
பல்லினைப் பிடுங்கி விட்டால்
படமெடுத் தென்ன பாம்பு
கொல்லவா செய்யும்; நம்மைக்
கொத்தியும் பயனே இல்லை !
சிரியாவிலிருந்து மிக்க
செல்வத்தை ஈட்டிக் கொண்டு
குரைஷிய ரெல்லாம் அன்று
கூட்டமாய் தான் திரண்டு
அபூசுப்யான் தலைமை யேற்க
மக்கம்வந்து கொண்டிருந்தார்
நபிகள் நாயகம் இந்த
நல்வாய்ப்பைத் தானறிந்தார்
பொருளாதார முற்றுகையை
முதலில் நாம் போட்டுவிட்டால்
எரிகின்ற பகைமை தீயின்
இடுப்பெல்லாம் ஒடிந்து போகும் !
அருமையாம் திட்டம் இஃதை
அண்ணலார் வகுத்து அன்று
திறம்படச் செயல் படுத்த
சிந்தனை செய்ய லானார் !
தன்னலம் கருதா நாட்டின்
தனிநலம் கருதும் ஒற்றர்
நன்மையே கிட்ட அங்கு
நானா திசைகளுக்கும்
எண்ணிய வண்ணம் அண்ணல்
எழிலுடன் அனுப்பி வைத்தே
பொன்னெழில் தீனைக் காக்கப்
புதுப்படை திரட்ட லானார் !
புலியலியின் பின்னால்
புகழ்வீரர் சிலரை
நபிமணிகள் உளவறிய
நாட்டமுடன் அனுப்பி வைத்தார் !
இதற்கிடையில் மக்கா
குரைஷிப் படைத்தலைவன்
அபூசுப்யான் என்பானும்
உளவறியத் தம்முடைய
ஒற்றர்களை அனுப்பிவைத்தான் !
‘பதுருவன்’ என்னுமிடத்தில்
அவர்கள் கண்டார் ஓர் காட்சி !
கிணற்றோரம் அருகே
ஒட்டகத்தின் சாணம்
கிடப்பதையவர்கள் மெல்லக்
கிளறிப் பார்க்கையிலே
மதினாவில் விளைந்த
சிறுபேரீச்ச விதைகள்
அதிலே யிருக்க
அறிந்து கொண்டார்கள் !
எதிரணியின் ஒற்றர்தாம்
இங்கே வந்திருப்பர் !
என்றே யூகித்து
இதனையறிந்த ஒற்றர்கள்
அபூசுப்யானிடம்
அவசரமாய் தெரிவித்தார் !
இதைக்கேட்ட அபூசுப்யான்
ஏதோ மலைத்தவனாய்
தலைதப்பினால் போதுமென்று
தலைவிரி கோலமாய்
வேறு வழியாக
மக்கநகர் போய்ச்சேர்ந்தான் !
ஒட்டகத்தில் முன்சென்ற
முஸ்லீம் ஒற்றர்கள்
வழியில் இரண்டு
சிறுவரைக் கண்டார்கள் !
குரைஷிப் படைகள்
அருகே முகாமிட்டுள்ள
சிறுவர் வாய்மூலம்
செய்தி அறிந்தார்கள் !
அந்த இருசிறுவரையும்
அவர்கள் அழைத்துக்கொண்டு
வந்தார் நபியிடத்தில்
தாமறிந்த சேதிசொன்னார் !
வள்ளல் நபிபெருமான்
வாஞ்சையாய் சிறுவரிடம்
ஒருசில கேள்விகள்
உவகையாய் கேட்டார்கள் !
குரைஷிப் படைகள்
நாளொன்றுக் கெத்தனை
ஒட்டகம் அறுத்துச்
சாப்பிட்டார் எனகேட்க
ஒன்பது ஒட்டகங்கள்
அறுத்திதினம் உண்டதாக
சிறுவர் மொழிந்தார்கள் !
செம்மல்நபி யிதன்மூலம்
குரைஷிப் படைகள்
தொள்ளாயிரமாவது
கூடியிருப்பா ரென்ற
குறிப்பால் உணர்ந்தார்கள் !
அய்யோ முறையென்று
அலறிப் பயந்துகொண்டு
தப்பித்து வந்த
அபூசுப்யான் நிலையெண்ணி
அபுஜகில் சினத்தால்
அனலாய் கொதித்தெழுந்தான் !
போர்வேண் டாமென்று
புத்தியே பலர்புகட்ட
தாம்விரிக்கும் வலையில்
தாம்வீழ இருப்பதை
அறிய மாட்டாமல்
அபுஜகில் துடித்தெழுந்தான்
பகைவெல்ல வந்தார்
படையோடு திரும்பிச் சென்றால்
நகைப்பாரே மக்கம் வாழ்
நங்கையர் எனச் சொல்லி
தொகை தொகையாய் படையோடு
தோள்தட்டி சினத்துடனே
புகைபோல் பகை கக்கி
புறப்பட்டான் களம் நோக்கி !
பதுரெனும் பள்ளத்தாக்கில்
பாங்கான இடத்தைத் தேர்ந்து
எதிரணி வரவைப் பார்த்து
எதிர்த்திட முனைப்பாய் நின்றார் !
கொதிகலன் போல மக்காக்
குரைஷியர் படையும் கொண்டு
அதிரடி கொடுப்போ மென்று
ஆயிரம் பேர் திரண்டார் !
கீர்த்திமிகு ரமலானில்
ஹிஜ்ரியி ரண்டில்
நேர்த்தியோடு மண்ணுலகில்
நீதி காக்க
போர்க் கொடிதான் எழுந்து
பதுரு யுத்தம்
பார்த்தவர்கள் குலைநடுங்க
நடந்த தன்று
(வேறு)
குரைஷியர் படையிருந்த பள்ளத்தாக்கில்
குளிர்மழையால் அந்த இடம் சகதியாக
இரவெல்லாம் தூங்காது குடித்தே ஆடி
எதிரணியின் வல்லமையை நகைத்த வண்ணம்
இறுமாப்பில் இருந்திட்டார் படைவீரர்கள் !
சரியான ஒருபாடம் புகட்ட வேண்டி
தருணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார் !
இறையவனின் அருட்கொடையாம் மக்காதந்த
ஏந்தல்நபி திறமையினை அறிந்தா ரில்லை !
தன்னுடன் தகுதி வாய்ந்தோர்
முஹாஜிரின் எண்பத்தாறு
பொன்னகர் மதீனா வீரர்
இருநூற்றி யிருபத் தேழு
இன்னும் நல் ஒட்டகங்கள்
எழுபதும் குதிரை மூன்றும்
எண்ணினாற் போல வாளும்
எட்டோடு கவசம் ஆறும்
வில்லோடு அம்பும் கொண்டு
விரைந்தனர் வேகத் தோடு !
இரவெலாம் தொழுகை செய்து
இறையவன் அருளை வேண்டி
கருணைமா நபிகள் வெற்றிக்
கனிந்திடும் போங்க ளென்று
அருமையாய்த் தோழருக்கு
அறிவுரை வழங்கிப் பின்னர்
இறையவன் ஏகன் அல்லாஹ்
உதவியே கிடைக்கு மென்றார் !
விடிந்தது காலை வெய்யோன்
விரல்களால் அங்கே மண்டிப்
படர்ந்த வல்லிருளை யெல்லாம்
பளிச்செனக் கழுவிப் பார்த்தான் !
மடலவிழ் தாமரைப் பூ
மங்கையாள் கண் விழித்துச்
சுடுகதிர் நீர் குளித்துச்
சொக்கிடப் புன்னகைத்தாள் !
படையெலாம் குவிந்த அந்தப்
பதுரெனும் பள்ளத் தாக்கில்
விடியலின் வருகையாலே
விருட்டென எழுந்து மக்கள்
மடமடவென்றே தத்தம்
காரிய மாற்றிப் பின்னர்
படைகளை ஒழுங்கு செய்து
பகைப்புலம் ஒடுக்க நின்றார் !
அன்று பிறை ரமலான் பதினேழில்
ஆரம்பமானது பத்ரு யுத்தம் !
பன்னூறுபேர் திரண்டார் திறமைமிக்கார் !
பகைவெல்ல எழுந்திட்டார் குறைஷி யாங்கே !
முன்னூற்றிப் பதிமூன்று பேர்திரண்டு
முஸ்லீம்கள் முழுமூச்சாய் சண்டையிட்டார் !
விண்ணெல்லாம் அதிர்ந்திடவே வேகமாக
விறுவிறுப்பாய் நடந்தது பத்ரு யுத்தம் !
(வேறு)
வேலோடு வாளும் மோத
வில்லோடு கவண்கல் மோத
காலோடு கையிழந்து
கதறினர் மக்கள் வீழ்ந்து
மண்ணெலாம் குருதியாகி
தண்ணீராய் நிறைந்து ஓட
என்னென்று சொல்வேன் அங்கே
எத்துணை கோரக் காட்சி !
தலையெலாம் எகிறிப் பாய்ந்து
தனியுடல் துடித்துச் சாக
மலையெலாம் சரிதல் போல்
மாந்தர்தம் குடல்கள் வீழ
அலை யலையாகப் பாய்ந்து
அதிரடி கொடுத்த தாலே
நிலைதடுமாறி வீழ்ந்தார்
நெடுமரம் போல சாய்ந்தார் !
முன்னிராப் பெய்த மாரி
குரைஷியர் பக்க மெல்லாம்
மண்ணெல்லாம் சகதியாக
இருந்ததால் படைக ளெல்லாம்
முன்னோக்கி அடியெடுக்க
முடியாமல் தவித்ததோடு
பின்னோக்கிச் செல்லலானார்
குரைஷியர் பாவம் அந்தோ ?
அல்லாஹு அக்பர் என்னும்
அருமையாய் ‘தக்பீர்’ சொல்லி
வல்லமையோடு தீனோர்
வாள்கொண்டு போரே செய்தார் !
அல்லாஹ்வின் அருளும் இவர்க்கு
அழகென வாய்த்த தாலே
தொல்லைகள் செய்த மக்கா
குரைஷியர் துடித்து வீழ்ந்தார் !
மஸ்ஊஸ்தொடு முஆத் தென்னும்
மதீனத்து அன்சாரிகள்
இருவரும் போர்க்களத்தில்
இஸ்லாத்தின் விரோதியான
அபுஜகில் எங்கே யென்று
ஆர்வமாய் தேடிச் சென்றார் !
வழியிலே அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்வை கண்டுபேசி
பழிதீர்க்க அபுஜகிலைப்
பரிவுடன் காட்டுமாறு
இருவரும் அவரிடத்து
இரக்கமாய் வேண்டி நிற்க
வாய்த்ததோர் நல்ல வாய்ப்பு
வாலிபர் இன்பங் கண்டார் !
ஒட்டகம் மீது ஏறி
அபுஜகில் வந்தான் அங்கு
சாடையாய் இதனை அவர்க்கு
சடுதியில் பெரியோர் காட்ட
ஓடினார் மு ஆத் என்பார்
உடைவாளை உருவிக் கொண்டு
பாவியாம் அபுஜகிலை
வாளினால் வெட்டிச் சாய்த்தார்
ஒட்டகை மீதிலிருந்து
அபுஜகில் நிலத்தில் வீழ்ந்தான் !
ஒழிந்தது பகைமை யெல்லாம்
ஒலித்தது வெற்றிக் கீதம் !
அழிந்தது நெஞ்சைக் கவ்வி
அடர்ந்தவல் லிருட் டெல்லாமே !
எழுந்தது இன்ப நாதம் !
எங்கனும் மகிழ்ச்சி வெள்ளம் !
விழுந்தது தடைக்கல் லெல்லாம்
விழித்தனர் மக்க ளன்பாய் !
சத்தியத் தீனின் மார்க்கம்
தழைத்தது ; இறையோன் அன்பால்
புத்தொளி கண்டதாலே
பூரிப்பு நெஞ்ச மெல்லாம் !
உத்தமர் நபியெங் கோவின்
உயர்ந்தநல் திறத்தா லிங்கு
சத்தியம் வென்ற தம்மா
தர்மந்தான் நிலைத்த தம்மா !
இறையாணை ஏற்பீர் !
வற்றாத பேரன்பின் ஊற்றால் இந்த
வையத்தை வாழ்வித்துக் கொண்டி ருக்கும்
பொற்புடைய காவலனாம் இறையோ னல்லாஹ்
பூவுலக மாந்தரெல்லாம் பொலிவாய் வாழ
அற்புதமாம் மாமறையைத் தந்தா னெங்கள்
அண்ணல்நபி நாதரையும் அருமைத் தூதாய்
சற்குணமா மணியெனவே தந்த அன்னோன்
தண்ணருளின் கொடையருமை சாற்றப் போமோ !
எத்தனையோ இன்பங்கள் தருகின் றானே !
இவ்வுலகில் அவையெல்லாம் நமக்காகத் தான் !
அத்தனையும் பெறுகின்றோம் ! மகிழ்கின்றோமே
அவனைநாம் சிறுபொழுது நினைக்கின் றோமோ ?
முத்தனைய திருமறையின் வெளிச்சத் தில்நாம்
முன்னேறிச் சென்றால்தான் மீட்பு உண்டு !
இத்தரையில் இவ்வுரையைக் கேட்ப தாரோ?
இறைவனுக்கு மாறிழைத்தால் துன்பந்தானே !
இப்படியாய் நம்முடைய தந்தை ஆதம்
இனியவராம் தம்மனைவி அவ்வா வோடு
ஒப்பில்லா இறையருளால் சுவனந் தன்னில்
உல்லாச மாக அவர் வாழும் வேளை
செப்படிகள் வித்தையெல்லாம் செய்யும் சைத்தான்
செயல்கெட்ட இபுலீஸின் பேச்சைக் கேட்டே
தப்படிகள் வைத்துவிட்டார் தரையில் வீழ்ந்தார் !
தாங்கொணாத் துயர்பலவும் பாவம் கண்டார் !
வல்லவனாம் இறையோனின் செல்வச் சீமை
வசந்தத்தின் தலைநகராம் சுவனந் தன்னில்
உள்ளதொரு கனிமரத்தை ஆதம் நீவிர்
ஒருபோதும் தொடவேண்டாம் என்றே ஆணை
துல்லிதமாய் இட்டிருந்தான்; மேலும் என்றன்
சொல்லுக்கு மாறிழைத்தால் துன்பம் என்றே
சொல்லாமல் சொல்லியே ஆதம் தன்னை
சுவனத்தில் அமர்த்திட்டான் சுபுஹா னல்லாஹ்
பேராசை நமக்குள்ளே விளையும் போது
பெரும்பாவச் சைத்தானும் நுழைவான் உள்ளே !
சீரான வாழ்வெல்லாம் சிதையச் செய்வான் !
சிந்தனையைப் பலவாறாய் ஆட்டி வைப்பான்
வாராத ஆபத்தும் வந்தே வாழ்வில்
வாட்டத்தைத் தந்திடும்; வையந் தன்னில்
தீராத கவலையை நெஞ்சில் தேக்கித்
திண்டாட வைக்கும்; செய்யும் மாயம் !
கவனத்தில் கனிமரத்தைத் தொடவே செய்து
துன்பத்தில் ஆதத்தைத் துடிக்க வைக்க
தவறாமல் வாய்ப்புக்குக் காத்திருந் தான் !
சைத்தானாம் இபுலீசு என்னும் தீயோன் !
கவர்கின்ற வகையினிலே ஆதத் தோடு
கனிவாகப் பேசி யொருநாள் அந்தோ
சுவனத்தில் கனிமரத்தைத் தொடச் செய்திட்டான்
துன்பங்கள் அக்கணமே உருவா யிற்று !
சுவனத்திலி ருந்தே ஆதம் அவ்வா
தூக்கியெறியப் பட்டார்கள் மண்ண கத்தில் !
புவனத்தில் ஸரந்தீவில் தந்தை ஆதம்
பொத்தென்று வந்துவிழ துயரே கண்டார் !
அவனியிலே இஸ்லாத்தின் தாயக மாம்
அரபுநாட்டில் அவ்வாவும் பிரிந்தே வாழ
தவறிழைத்ததாலே வாடிச் சோர்ந்து
தாங்கொணாத் துன்பங்கள் ஆதம் கண்டார் !
புயலுக்குப் பின்வரும் அமைதி போல
பூவுலகில் பலவாறாய் கஷ்டப் பட்டு
அயர்ந்தேதான் தவறுணர்ந்து தந்தை ஆதம்
அல்லாஹ்வின் திருவருளை வேண்டி நின்றார் !
துயர்யாவும் மறைந்ததுவே தூயோன் அல்லாஹ்
சொல்லிவிட்டான் எனக்கென்றும் மாறி ழைத்தால்
உயர்வேது வாழ்க்கையில் ஒளிதா னேது !
உணருங்கள் என்றேதான் மீட்பளித்தான் !
பாவமன்னிப்பு
அருளன்பு பண்பாலே நாளும் எம்மை
ஆள்கின்ற இறையவனே ! அடியேன் நெஞ்சம்
பெரும்புகழின் அதிபதியாம் உன்னை யெண்ணி
பேரின்பம் காணாமல் பிழைகள் செய்தே
சிறுமதியால் தறிகெட்டு வெறிநாய் போலச்
செல்கின்ற தெங்கேயோ? திருந்தக் கொஞ்சம்
கருணையெனும் ஒளிபாய்ச்சு ! கனிவாய் ; உள்ளம்
காசினியில் இனியேனும் பிழைத்துக்கொள்ளும் !
சுட்டபின்பு தீயென்று உணர்ந்து இங்கே
சொலமுடியா அளவுக்குத் துயர மெல்லாம்
பட்டபின்பே தெளிகிறது பாழும் உள்ளம்
பரிகாரம் தேடியுனை நினைப்ப தில்லை
கட்டவிழ்க்க முடியாமல் அந்தோ இன்று
கண்ணீரில் தவிக்கிறதே ; கருணைச் சீமான்
தொட்டுனது கரங்களிலே தூக்கித் தேற்றி
துணைசெய்வாய் ரஹ்மானே ! துன்பந் தீரும் !
நல்லவற்றை பார்ப்பதில்லை ; நண்பர் சொல்லும்
நல்லுரையைக் கேட்பதில்லை ! நாளும் கெட்ட
புல்லர்களின் சகவாசம் வைத்துக்கொண்டே
பூவையரின் புனிதத்தைப் பொசுக்கிப் பார்த்து
சொல்லரிக்கும் பொல்லாத ‘குடி’ யில் வீழ்ந்து
செய்திட்ட பாவங்கள் ஒன்றா …? கோடி
வல்லவனே நல்லருளாம் மீட்சி தந்தே
வாழ்விப்பாய் என்னுள்ளம் பிழைத்துக் கொள்ளும் !
தித்திக்கும் திருமறையைத் தேனைப் பாகை
சீரார்ந்த வாழ்வுக்கோர் நிகழ்நற் பாதை
இத்தரையில் பேரெழிலாய் இனிதாய் காட்டி
எண்ணத்தில் இன்பத்தை தேக்கும் அந்த
தத்துவமாம் ‘குர் ஆனின்’ சோலை சென்றே
தமையென்றும் ஈடேற்றத் தவற விட்டு
எத்தனையோ பாவத்திற் கெனையா ளாக்கி
இறுமாந்து நிற்கிறதே இரட்சிப் பாயே !
தூண்டில்கூட ரஹ்மானே ருகூஃ செய்து
தூயவனே உனையன்பாய் தொழுது நிற்கும் !
ஈண்டெந்தன் உள்ளமோ இறுமாப் பாலே
என்னிறையே ! உனைத்தொழும் எண்ணம் விட்டு
தாண்டியெங்கோ சுற்றித்தான் பறந்து துன்பச்
சகதியிலே சரியாக மாட்டிக் கொண்டு
ஆண்டவனே மீளவழி ஏதும் இன்றி
அழுகிறது இன்றேனோ? அணைத்துக் கொள்ளேன் !
பெண்மணந்தான் செய்வதற்குப் பேரம் பேசி
பெரும்பிழைகள் பலசெய்து அவர்தம் வாழ்வில்
மண்வாரி யிறைத்துவிட்டு மங்கை தன்னை
மரணத்தின் கொடும் வலையில் சிக்கவைத்துக்
கண்போன போக்கினிலே நாளும் சென்று
கரையேற வழியின்றிக் கதறி நித்தம்
அன்பாக உனையெண்ணி துணையே வேண்டி
அழுகிற தென்னுள்ளம் ; அணைத்துக் கொள்ளேன் !
வட்டியென்ற பெயராலே எளியோர் தம்மை
வதைசெய்து அவர்வாழ்வைத் துயரால் வாட்டி
பெட்டியிலே நிறைகின்ற பணத்தை யெல்லாம்
பெரும்பாவச் சுமையென்று அறியா வண்ணம்
கொட்டுகின்ற தேளாகிக் குருதிக் கண்ணீர்
குடும்பத்தில் ஓடவிட்டுக் கொடுமை செய்தே
தட்டுகிற தின்றன்பாய் அபயம் தேடி
தாழ்திறவாய் ரஹ்மானே ! பிழைத்துக் கொள்ளும் !
மெய்பேசி மேதினியில் மேன்மை கண்டு
மேலோங்க மாட்டாமல் கால மெல்லாம்
பொய்பேசி பொல்லாங்கே செய்து நித்தம்
புலம்புகிற தின்றேனோ? என்றன் உள்ளம்
உய்யவொரு வழியின்றி உலகில் அஞ்சி
ஒருதுணையும் காணாமல் வாடிச் சோர்ந்து
செய்வதொன்றும் அறியாமல் கண்ணீ ராலே
சிறை மீட்கக் கேட்கிறது ; சிந்தை கொள்ளேன் !
இவ்வுலகம் இருப்பதில்லை விரைவில் தேயும் !
இதற்குள்ளே இறைவாநின் கருணை பெற்று
அவ்வுலகில் சுவனத்தை அடையா வண்ணம்
அநீதி பலசெய்தால் ஆன்ம ஞானம்
எவ்வகையில் எமைச்சேரும்? இதனைக் கொஞ்சம்
இதமாகச் சொன்னாலே ஏனோ நெஞ்சம்
ஒவ்வாமல் மறுக்கிறது ; வீணாய் இந்த
உலகத்தில் அவைமீட்சி காண்ப தென்றோ?
வருவதெலாம் அறியாமல் பிழைகள் செய்து
வஞ்சினத்தால் கொதிக்கிறது ; வையந் தன்னில்
புரிவதெல்லாம் பொல்லாங்கு ; திருந்தச் சொன்னால்
பொய்வேஷம் போடுகிற தெல்லாம் மாயம் !
மறுமையெனும் கியாமத்தின்போது உன்றன்
மன்னிப்பைப் பெற்றாலே அன்றி இந்தச்
சிறுவனுளம் கடைத்தேற வழியே இல்லை !
திருவருளே செய்திடுவாய் சிந்தை பூத்தே !
இனியேனும் புவிவாழ்வில் இனிமை காண
ஈடேற்று ; உள்ளத்தில் இன்பம் தேக்கு !
கனிவாக முன்வந்து ஏழை நெஞ்சைக்
கருணையெனும் தொட்டிலில் தாலாட் டன்பாய் !
தினமினிமேல் உனையென்றும் தொழுது போற்றும் !
தீன்வளரப் பணியெல்லாம் செய்து காட்டும் !
இணையில்லாப் பெரியவனே ! இறையே உந்தன்
இன்னருளால் என்மனதை ஈர்த்துக் கொள்வாய் !
நன்றி : பிறை
விடையைத் தேடும் வினாக்கள்
கரையை தொடாத அலைகள்
மணமகள் மடித வழ்ந்த
மானிடன் அறிவின் நோன்பால்
விண்மகள் மடியின் மீதும்
விளையாடச் சென்று விட்டான்
பெண்மணங் கொள்ளப் பேரம்
பேசிடும் பித்த ரெல்லாம்
இன்னமும் திருந்தா திங்கே
இருந்திடர் தருகின் றாரே …!
தன்னரும் உழைப்பில் நின்று
தரணியில் உயர்ந்தி டாமல்
பெண்மணத் திரையின் பின்னால்
பேடியாய் இளிக்கின் றாரே …!
பொன்நகை பவுனில் நூறு
போய்வர சொகுசுக் காரு !
இன்னுஞ்சீர் வரிசை கேட்பார்
பெண்மணங் கொள்ள சேச் ! …சே …!
சந்தனச் சிலையை யன்பாய்
தழுவிடக் கூலி கேட்கும்
விந்தையைப் பாரீர்; இங்கே
வேதனை நெஞ்சில் முட்டும் !
சிந்தனை செய்வீர்; உங்கள்
செயலிது நலமே தானா …?
இந்தநோய் தீர வேண்டும்
என்செயப் போகின் றீர்கள் …?
எத்தனை நாள்தான் உள்ளம்
ஏங்குவார் பெண்ணைப் பெற்றோர்
தத்தையின் இளமைக் காலச்
சரித்திரம் முடிவ தற்குள்
சித்தமே மகிழும் வண்ணம்
திருமணம் செய்து பார்க்க
எத்தனை முயற்சி செய்தும்
ஏற்பதோ பாவம் தோல்வி !
அருவியாய்க் கண்ணீர் சோர
பெண்மயில் அழுவாள்; பாவம்
உருகுவாள் மெழுகாய்; பின்னர்
உணருவாள் தன்னை நொந்து
கருகுவாள் பிறப்பை யெண்ணிக்
கலங்குவாள் துயரம் மிஞ்சி
இறக்கவும் துணிவாள் அந்தோ -?
இந்நிலை சரியா சொல்வீர் …!
சீதனக் கருமே கங்கள்
சிந்தையை மறைப்ப தால்தான்
மாதரார் வாழ்வு மண்ணில்
மலர்களாய் மலர்வ தில்லை !
தீமைகள் மாய வேண்டும் !
சிறுமதி ஒழிய வேண்டும் !
ஏதினி செய்வீர் ! பெண்ணை
இனியேனும் வாழ வைப்பீர் !
அறிவிலாச் செய்கைக் காக
அவனியில் பெண்க ளெல்லாம்
எரிதழல் மலர்க ளாக
இன்னுமா … துடித்துச் சாக …?
சிரிப்பினை அவர்கள் செவ்வாய்
சிந்தட்டும் ! கொஞ்சம் உங்கள்
கருத்தினில் புதுமை தேக்கிக்
காளையர் முன்வா ருங்கள் …!
நெஞ்சினில் நேர்மை ஏற்றி
நினைவினில் தூய்மை காட்டி
வஞ்சியை வாழ வைப்பீர்
வாட்டிடும் துயரம் போக்கி !
சஞ்சலம் பெண்கட் கென்ன
சாபமா …? சொல்வீர்; என்றும்
அஞ்சிடா தெழுந்து வாரீர் !
அபலைக்கோர் வாழ்வு தாரீர் !
நன்றி : கேரளத் தமிழ்
- திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றது
இனியொரு விதி செய்வோம் !
என்னடி தோழி பானு
ஏனடி மெலிந்து விட்டாய்?
புன்னகை அரசி யுன்றன்
பொலிவெலாம் போன தெங்கே?
என்னடி வந்த தின்று?
ஏனடி இந்த வாட்டம்?
என்னுயிர்த் தோழி உன்றன்
இதயத்தைத் திறந்து காட்டு
பெண்மயில் உன்னை யன்று
பெண்கேட்டு வருவ தாக
அண்மையில் நீ வரைந்த
அணிமடல் பார்த்தேன் தோழி !
என்னதான் சொன்னார் வந்து
இதயமே கலங்கி வாடிக்
கண்ணீரில் நனைகின் றாயே !
காரணம் அறியக் கூறு !
சரியெனச் சொல்லி யந்தச்
சாந்திக்கு நாள்வைத் தாரா…?
பிறகுதான் பார்ப்போ மென்று
பெற்றோர்கள் மறுத்திட்டாரா…?
எரிதழல் தாவிப் பாய்ந்து
இரையெனத் தின்று போட்ட
விறகினைப் போல் கருகி
விழிமூடிக் கிடக்கின்றாயே !
மஹ்ரிபா எந்தன் அன்பு
மனதெலாம் நிறைந்த தோழி
சொல்லவும் நாவும் கூசி
துயரங்கள் பெருகுதன்றோ !
இல்லை நீ அந்த நாளில்
என்னுடன் இருந்தி ருந்தால்
சொல்லினால் எம்மைச் சுட்ட
துன்பத்தை தடுத்திருப்பாய் !
பூச்சூடி அழகாய்
பூரித்து வந்தவளை
பேச்சொன்றால் எம்மைப்
பேதலிக்க வைத்து விட்டார்
பட்டென்று பவுன் நூறு
பத்தாயிரமும் கேட்டே
சிட்டென்றன் வாழ்க்கைச்
சிறகொடித்து விட்டார்கள்
பத்தா யிரமும்
பவுன் நகை நூறும்
சொத்தா யிருக்கிறது
தூக்கிக் கொடுப்பதற்கு?
எத்தனையோ விதமாய்
எந்தன் பெற்றோர்கள்
மெத்த அவரிடத்தில்
மிகவுரைத்தும் கேட்கவில்லை
மாப்பிள்ளை டாக்டராம்
மாதம் ஈராயிர மாம் !
தோப்புத்துர வோடு
தோள் தட்டும் சுமையோடு
காப்பிட்டுப் பொன்னைக்
கட்டிவரும் பாவையைத்தான்
ஏற்போம் மருமகளாய்
என்றவரே ஏசி விட்டார் !
பெண் கேட்டா வந்தார்
இல்லையடி அன்னோர்
பொன் கேட்டு வந்தார்
புரியா மடத்தனத்தார் !
கண்கலங்கிப் பெற்றோர்
காரணத்தைச் சொல்கையிலே
என்னுடைய உள்ளம்
இடிந்து நொறுங்கியது
ஏடி … நீயென்ன?
ஏதும் அறியாதவளா?
போடி பைத்தியமே
புத்தியிலை உனக்கென்பேன் !
சாடியவரைத்
தலைகுனியச் செய்யாமல்
வாடிச் சோர்ந்து
வதங்கிக் கிடக்கின்றாயே !
தன்னுழைப்பா லிங்கே
தலைநிமிரத் தகுதி யில்லா
பெண்ணினத்தை நசுக்குகின்ற
பேடியரின் வெறித்தனத்தைக்
கண் இமைக்கும் நேரத்தில்
காறி உமிழாமல்
எண்ணி மனம் நொந்து
ஏனடி நீ வாடுகிறாய்?
நமக்கும் திறனுண்டு !
நாளெல்லாம் உழைத்துச்
சிறக்கும் அறிவுண்டு
தெளிவுண்டு, பின்னேன்டி
வருத்தம் உனக்கின்னும்
வாடி, அதை விட்டெறிந்து
துணிவைத் துணைக்கழைத்துச்
சூளுரையே செய்திடுவோம் !
வரதட்சிணைக் கொடுமையால்
வாழ்விழந்த பெண்க ளெல்லாம்
திறமாக நம்வழியை
இனியேனும் பின்பற்றிச்
சுறாவாய் பாய்ந்து
துயரை வெல்லட்டும் !
குறையேது மின்றிக்
குதூகலம் காணட்டும் !
பெண்ணை மணமுடிக்கப்
பேரம் பேசுகின்ற
கண்மூடித் தனத்தின்
கயமைக் கும்பல்களே !
கல்யாணச் சந்தையிலே
காசுக்கு வாங்கிட்ட
பல்லில்லா மாடுகளே !
பயனில்லாக் கூடுகளே !
புல்லுண்டு ; உணவாய்
போடுகிறோம் சம்மதமா…?
புல்லையும் புசிப்பீர்கள்
தப்பில்லை ; உமக்கு
கல்யாணம் எதற்கு
பெண்ணைக் கசக்கிடவா?
வாழ்வினைக் கொடுக்கும் ஆண்கள்
வர்க்கத்தில் ‘பதர்கள்’ நீங்கள் !
பாழ்மனச் சீதனப் பேய்
பகட்டிலே மயக்கம் கொண்டு
ஏழ்மையாம் கன்னிப் பூவின்
இதயத்தை வதைப் பீரானால்
ஊழ்வினை மாற்றி நாங்கள்
இனியொரு விதியே செய்வோம் !
வரதட்சிணை யெல்லாம்
வராத தட்சிணையாய்
திசைமாறி உங்கள்
செருக்கழியப் போகிறது !
வரதட்சிணை வாங்காமல்
மணமுடிக்கும் வாலிபரின்
கரங்களிலே சேர்ந்திடுவோம்
காலத்தை வென்றிடுவோம் !
இதற்கு,
சாதி தடுத்தாலும்
சமுதாயம் பகைத்தாலும்
மோதி மிதித்தவரின்
முகத்திரையைக் கிழித்துவிட்டே
ஏதும் அறியாத
எம்போன்ற பெண்களுக்கு
வாழ வழிகாட்டி
வல்லமையைத் தந்து நிற்போம் !
( 1981 ஆம் ஆண்டு வெளியான கதிர்கள் என்ற நூலிலிருந்து )