“நான் செய்தேன்” என்பதை
’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும்.
( டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் )
ஒரு வியாபார நிறுவனத்தில் வேலையாட்கள் – சிப்பந்திகளைப் பல பகுதிகளாகப் பிரித்து மேலாண்மை நடக்கும். அதாவது, பல அங்கங்களாக நிறுவன நிர்வாகம் நடைபெறும். உதாரணத்திற்கு, விற்பனை, உற்பத்தி, வினியோகம், மனிதவளம், போக்குவரத்து, நிதி நிர்வாகம் என்ற பகுதிகள் இயக்கப்படும்.
சில அங்கங்கள் குறிப்பாக சந்தைப்படுத்துதல், விற்பனை போன்றவை வியாபாரத்தின் உயிர்நாடி அவை ஒழுங்காக இயங்காவிட்டால், அல்லது முறையாக இயக்கப்படாவிட்டால், வியாபாரம் பெரும் பாதிப்பிற்கு உட்படும். விற்பனை சிறந்து உயர்ந்து நின்றாலும், நிதி – கணக்குப் பகுதிகள் தகுந்த விவரங்களை தக்க நேரத்தில் தயாரித்து தராவிட்டால் வியாபார நிலவரம் பாதிப்பிற்கு உள்ளாகும்; வசூல் குறைந்து நிதிச் சிக்கல் நிச்சயம் ஏற்படும்.
எனவே, நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லா தொழிலாளர்களையும் அவர்கள் பங்காற்றும் ஒவ்வொரு பகுதியையும் மற்றொரு பகுதிக்குச் சமமாக ஒரே அளவுகோல் கொண்டு அளப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி அளப்பதால் அக்கறையற்ற – அலட்சியப் போக்கு நிறுவனத்தில் ஊடுருவும். நல்ல உழைப்பாளிகள், உற்பத்தி திறனை வளர்ப்பவர்களிடம்கூட ‘மாதம் முப்பது, சட்டி அறுபது’ என்ற மனப்பான்மை உண்டாகிவிடும். இப்படிப்பட்ட எதிர்மறை தாக்கத்தை தவிர்க்க வேண்டும்.
ஒன்று, நிறுவனத்தின் மூலப் பகுதிகள் – விற்பனை, வசூல் போன்றவைகளுக்கு தகுந்த அங்கீகாரமும் ஊக்குவிப்பும் கொடுக்க வேண்டும். ஒருவரின் தனித் திறமைக்கும், அவரோடு சேர்ந்த குழுவினரின் பங்காற்றலுக்கும் சன்மானம் தரப்பட வேண்டும். கூட்டாக வருவாயை உயர்த்தியவர்களுக்கு ஊக்குவிப்பு – உற்சாக சம்பள உயர்வு, போனஸ் வழங்கப்பட வேண்டும்.
இரண்டு, வருவாயை நேரடியாகக் கொண்டுவரும் பகுதிகள் இயங்குவதற்கு ஏதுவாக நேரடி வருவாய் சம்பந்தப்படாத பகுதிகளின் பங்காற்றலும் முக்கியம் என்ற உணர்வு பரவலாக அறியப்பட்டு, அத்துறைகளுக்கும், அதன் காரணகர்த்தாக்களுக்கும் தகுந்த உயர்வுகள், சன்மானம் தரப்பட வேண்டும்.
“எங்ஙனம் விற்பனை உயர்ந்தது! எங்கள் குழுவின் சாதனை இது! நாங்கள் செலவுகளைக் குறைத்தோம்! எங்கள் பகுதி நிறுவனத்தின் அந்தஸ்தை அதன் சந்தை ஆளுமையை உயர்த்தியது!” – என்ற முழக்கங்கள் நிறுவன முன்னேற்றத்திற்கு – வளர்ச்சிக்குக் கட்டியம் கூறும் சொற்கள். அவை அந்நிறுவனத்திற்கு பொதுவான உந்துதலைத் தரும்.
அதே சமயத்தில், தனி மனித ஆற்றலையும் அடையாளம் கண்டு ஆவன செய்ய வேண்டும். தன்னால்தான் எல்லாமே நடக்கிறது என்ற ஆளுமை ஆங்காரத்தை மட்டுப்படுத்தி அந்நபரை கூட்டு – குழும அணியினராக மாற்ற வேண்டும்.
( செப்டம்பர் 2010 மலேஷியாவின் நம்பிக்கை மாத இதழிலிருந்து )