மத நல்லிணக்கம்

கவிதைகள் (All)

மனுஷனாக
வாழ்வதற்கே சமயங்கள்
மனிதனின்
விருப்பத்திற்கும்
அறிவுக்கும் தக்கவாறு
கொள்கைகளில் நேசங்கள்
நேசக்கரங்களில்
நேர்த்தியாய் செய்யப்பட்ட
அரிவாள் எதற்க்கு…?
அறுக்கப்படுவது பயிர்களா
மனித உயிர்களா…!
அறிவாள் தீர்கப்படவேண்டிய
பிரச்சனைகளை
அரிவாளால்
தீர்த்துக்கட்டப்படுதேன்…!
கருவறையின்
இரகசியத்தை
நம் காதுகள் கேட்பது
எப்போது…?
மழைப் பொழிந்து
அணையில் தேங்கி
நதிகளில் கலந்து
ஆறுகளில் பாய்ந்து
சங்கமிக்கின்றன சமுத்திரத்தில்
அதில்
அணை எங்கே
ஆறு எங்கே
நதி எங்கே…?
இவைகள்
நீரை சமுத்திரத்தில்
சேர்க்கும் வழிகள்
எந்த அணையிலிருந்து
வந்தோம்
எந்த நதியில் இணைந்தோம்
எந்த ஆற்றில் பிரிந்தோம்
என்பதெல்லாம்
சமுத்திரத்தில் கலந்த
நீருக்கு தெரியுமா…?
மமதையர்களின் ஆசைக்கு
மனிதர்கள் பலிஆடா…?
கோவிலும்
பள்ளிவாசலும்
மாதாகோவிலும்
புனிதமாக வழிபாடு செய்யும் போது
ஆறுமுகமும்
அப்துல்லாஹ்வும்
ஆல்பர்ட்டும்
மனிதத்தை மறந்தவர்களா…?
ஆறுமுகம் அறுவடைசெய்வது
அப்துல்லாஹ்வின் வயல்
ஆல்பர்ட் நிறுவனத்தில்
அப்துல்லாஹ் மேலாளர்
மதங்களை மறந்த
இவர்களுக்குள் வளர்வது
மதநல்லிணக்கமல்ல
மனிதநல்லினம்
தூய்மையான
இவர்களுக்கு மத்தியில்
துவைதத்தை தூவியது
யார்…?
அரசியல் என்ற
வியாபாரச் சந்தையில்
மதங்களும் மார்க்கங்களும்
விற்;பனைப் பொருள்கள்
சந்தை பரபரக்க விந்தைசெய்து
பரபக்கத்தை (பிறர்மதத்தை)
சூடுபடுத்தி குளிர்காயும்
சூத்திரக்காரர்கள்
அரசியல்வாதிகள்
பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டுவதுப் போல்
கட்டும் மேம்பாலங்களிலும்
கடக்கும் சாலைகளிலும்
நடக்கும் பாதைகளிலும்
மதநல்லிணக்கம் என்றபெயரில்
பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள்
மறைந்த பல சமுதாய மனிதர்கள்

சாலைகளில்
மதநல்லிணக்கத்தை
காண்பதை விட்டு
அரசியலில்
மதமற்ற மனிதர்களை
தேடுவோம்….
மனிதநேய உணர்வில்
அரசியல் வாழ்ந்தால்
ஆறுமுகத்தின் மகள்
அப்துல்லாஹ்வின்
மருமகள்
ஆல்பர்ட்டின் மகன்
ஆறுமுகத்திற்கு
மருமகன்…!

-கிளியனூர் இஸ்மத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *