முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்
‘’ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை வழங்கிக் கொள்ளுங்கள். அன்பளிப்பு கொடுப்பது உள்ளத்தின் கறைகளை நீக்கி விடும். எந்த அடுத்த வீட்டுப் பெண்ணும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பை கேவலமாக நினைக்க வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே ! அதே போல் அன்பளிப்பு கொடுக்கும் பெண்ணும் இந்த அன்பளிப்பை சாதாரணமாக நினைக்க வேண்டாம்’’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருள் மொழி பகர்ந்துள்ளார்கள்.
நெஞ்சங்களில் அன்பு விதைகளைத் தூவி நிற்கும் இந்த அறிவு மொழி ‘’திர்மிதீ’’ நபி மொழிக் கோவையில் இடம் பெற்றுள்ளது.
தனது அன்பை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் தூய்மையான செயலுக்குத் தான். ‘’அன்பளிப்பு’’ எனப் பெயர். அது ஒரு சின்னப் பொருளாக இருந்தாலும் சரியே !
ஒரு துண்டு ரொட்டி ஒரு குவளை பால் ஒரு கையளவு பேரீத்தம் பழம், கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர், ஒரு வாசனைத் திரவம் இப்படி வழங்கிடும் அன்பளிப்புப் பொருட்களில் கூட மகத்துவமான சரித்திரங்கள் வழிந்து கிடக்கின்றன. வாழ்க்கைப் பாடம் படித்துக் கொடுக்கப்படுகின்றது.
பெண்ணின் பரிசுகள்
அன்பளிப்புகளை பகிர்ந்து கொள்ளச் செய்யும் இந்த நபி மணி மொழியில் பெண் இனத்தை சுட்டிக் காட்டப்படுகிறது. பெண்களுக்கு மத்தியில் அன்பளிப்புகள் அவசியம் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. அதிலும் அடுத்த வீட்டுப் பெண்களின் அன்பளிப்பையும் சுட்டிக் காட்டப்படுகிறது.
அடுத்த வீட்டாருடன் இணக்கமாக வாழ வேண்டும் என்பதையும் ஏதேனும் மறை பொருளான கசப்பு உள்ளத்திலே இருந்தாலும் இந்த அன்பளிப்பு அதைக் கழுவி சுத்தம் செய்து விடும் என்பதையும் இந்த நபி மொழி நன்கு உணர்த்துகிறது.
பெரும்பாலும் அண்டை வீட்டிலே தான் பகையின் புகை சீக்கிரமாகப் பிடித்துக்கொள்கிறது. அதிலும் பெண்களுக்கு மத்தியிலே தான் இந்தப் பகைமை உணர்வு மேலோங்கி விடுகிறது. பகை உணர்வின் எண்ணம் ஊசி முனை அளவுக்கு இதயத்தில் நுழைந்து விட்டாலும் அது பெரும் பூகம்பத்தையே உருவாக்கி விடுகிறது.
இந்தப் பகை உணர்வு பெண்களுக்கு மத்தியிலே புகுந்து விட்டால் அது ஆண்களையும் ஆட்டிப் படைத்து பிரித்து விடும் என்பது உண்மை.
ஓர் ஆணின் பகையால் ஒரு பெண் கூடப் பிரிவது எளிதல்ல. ஆனால் ஒரு பெண்ணின் பகையால் ஓர் உறவே கெட்டு விடும். ஒரு குடும்பமே பிரிந்து விடும். ஒரு குலமே பகையாகி விடும். ஒரு சாம்ராஜ்யமே கவிழ்ந்து விடும். பெண்ணின் பகைக்கு அப்படிப்பட்ட கொடூரமான விஷத் தன்மை இருக்கிறது.
அன்பளிப்பு அருமருந்து
இந்த விஷத் தன்மையைக்கூட ‘’அன்பளிப்பு’’ முறித்து விடும். ஒரு பானை நிறைய பாலை ஊற்றி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைக்கிறோம். நெருப்பின் வேகத்தால் பால் கொதித்து பானையை விட்டு வெளிக்கிளம்புகிறது. அப்போது ஒரு சிட்டிகைத் தண்ணீரை எடுத்து அந்த ஒரு பானைப் பாலின் மேலே இலேசாகத் தெளித்து விட்டால் எப்படி பொங்கி வந்த அந்தப் பால் அப்படியே பானைக்குள் அடங்கிப் போகிறதோ அதே போலத்தான் மனம் முழுவதும் ஒருவரைப் பற்றிய காழ்ப்பும், கசப்பும், பொறாமையும், சந்தேக நெருப்பும் பொங்கி நிற்கும் போது அவருக்கு ஓர் அன்பளிப்பைக் கொடுத்தால் அதன் மூலம் அந்த பொறாமை நெருப்பு அணைந்து விடும் ! காழ்ப்புணர்வு மாறி விடும் ! பகை உணர்வு அகன்று விடும் ! பாச உணர்வு பிறந்து விடும் !
அதிலும் பெண்களுக்கு நடுவே இந்த அன்பளிப்புச் செயல் அதிகமாக இருக்க வேண்டும். அது குடும்பங்களை இணைக்கும்.
பக்கத்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பல ஆண்டு காலமாக பகைமை உணர்விலே இருந்தார்கள். பக்கத்து விட்டுத்தம்பதிகள் புனித ஹஜ் யாத்திரை போகும் நாளில் கூட வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்கள். ஹஜ்ஜுக்கு போன தம்பதிகள் சிறப்பாக தாயகம் வந்து சேர்ந்தார்கள்.
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொஞ்சம் பேரிச்சம்பழம், ஜம்ஜம் தண்ணீர், ஒரு தஸ்பீஹ்மணி, ஒரு தொழுகை விரிப்பு கொடுத்து விட்டார்கள். இதை பக்கத்து வீட்டார் மறுக்க முடியவில்லை பெற்றுக் கொண்டு ஓடோடி வந்து தனது செயல்களுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு பாசக் குடும்பங்களாக வாழத் துவங்கினார்கள். ஒரு சின்ன அன்பளிப்பு அவர்களின் பல்லாண்டு காலப் பகையை முடித்து வைத்தது.
பகையை விரட்டும்
அன்பளிப்பு வரும் பொருட்களின் அளவு, தரம், விலைகளை எடை போட்டு பார்க்கக்கூடாது. கொடுத்தவர்களின் மனதைத் தான் எடை போட்டுப் பார்க்க வேண்டும். அது நமது மனங்களை ஒட்ட வைக்கும். அன்பளிப்புக்கு அத்தனை சக்தி இருக்கிறது.
அன்பளிப்பு கொடுப்பவர்கள் கூட இந்த சின்னப்பொருளையா கொடுத்து விடுவது? என்று மலைக்கக்கூடாது. இப்படியே மலைத்து மலைத்து பின் தங்கி எதையுமே பிறருக்கு அன்பளிக்காத ஷைத்தானின் இழி நிலை ஏற்பட்டு விடும்.
சிறு பொருளோ பெரும் பொருளோ கொடுப்பதை கொடுத்துக் கொண்டே இருந்தால் அது புனிதமான பாசத்தை உருவாக்கும். பகையை விரட்டும். குடும்பங்களைக் குளறுபடி இல்லாமல் வாழ வைக்கும்.
பகையை விரட்டும் போர் வாள் அன்பளிப்பு தான் ! பாசத்தைப் பொங்க வைக்கும் பரிசும் அன்பளிப்பு தான் !
நன்றி :
குர்ஆனின் குரல்
அக்டோபர் 2012