(முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)
ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி
அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி
தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத்
தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !
தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல்
தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து
எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் !
இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் !
மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து
மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு
முக்காலம் விளைகின்ற வாழையடி வாழையென
முப்போகம் விளைவிக்கச் சென்றதுதான் ஹிஜ்ரத்தாம் !
பக்கத்துத் தாயிபிலே போட்டவிதை முளைக்கவில்லை !
பாவிகளின் நெஞ்சுக்குப் பாய்ச்சிய நீர் சேரவில்லை !
விக்கித்துப் போகாமல் வேதனையில் வாடாமல்
வேகமுள்ள ஹிஜ்ரத்தால் விவசாயம் செய்தனரே !
மரம் வெட்டிப் போட்டாலும் சமையலுக்கு விறகாகும் !
மெழுகுதனை எரித்தாலும் மேலுருகி வெளிச்சந்தரும் !
தரைபோட்டுத் தேய்த்தாலும் சந்தனமோ வாசந்தரும் !
திருநபிக்குத் தரும்துன்பம் திரும்பினாலும் இன்பந்தரும் !
விரல் பறித்த மலர் கூட வஞ்சமின்றி வாசந்தரும் !
வெட்டியமண் விழிதிறந்து ஊற்றெடுத்து நீரைத்தரும் !
தரங்கெட்டு ஊர் துறக்க வைத்தவரின் வாழ்வுக்கோ
தாஹா ரசூல் ஹிஜ்ரத்தோ தண்டனையாய் அன்பைத்தரும் !!
தாய்மைக்குத் தத்துவமே தன்சேயைச் சுமப்பதுதான் !
தங்கத்தின் இலக்கணமோ தான்வெந்து ஒளிர்வதுதான் !
தூயநபி வரலாறோ துயர்வென்று நிலைப்பதுதான் !
தூய ஹிஜ்ரத் தீனைத்துளிர் விடச் செய்வதுதான் !
சேய்செய்யும் பிழைக்காகப் பெற்றமனம் அழுவதுபோல்
சிந்திக்க வழிதெரியா சிறுமனத்தார் பாவங்களை
தான் மனதால் மன்னித்து, தன் மனதால் நேசித்து
தீன்மனதால் ஒன்றிணைந்த தியாகமதே ஹிஜ்ரத்தாம்.