கல்வி என்பது
கடைச் சரக்கன்று !
கற்க கற்க
வளரும் அறிவின்
பதிவேடு !
பொய்மை போக்கி
வாய்மை உணரும்
காலச் சுவடு !
இது தான்
உண்மையான –
நிலையான –
அழிவில்லாத செல்வம் !
பிற பொன், பொருள்
செல்வங்கள்
கானல் நீரே !
உலகில் கருவூலம்
கல்வியறிவே !
அறிவு ஜீவிகளின்
கலங்கரை விளக்கு !
மனித ஒழுக்கத்தைக்
கட்டிக் காத்து
கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கும்
அற்புத விந்தை
கல்வியே !
ஏன்? எப்படி?
எது? என்ன?
எவ்வாறு?
என்னும் வினாக்களை
எழுப்பும் பகுத்தறிவை
வகுத்துக் கொடுப்பது !
மனித குலத்தின்
முகவரி ! அதுவும்
நிரந்தர முகவரி !
ஒரு நாணயத்தின்
இரு பக்கங்கள்
ஒழுக்கமும் கல்வியும் !
மனித மாண்பின்
சிகரம் கல்வியே !
அடக்கமும்
அமைதியும்
பணிவும் தருவதே
உண்மைக் கல்வி !
உயிர்க் கல்வி !
செருக்கையும்
சுய நலத்தையும்
தருவது
ஊமைக் கல்வி !
மரணம் வரை
கற்றல் தொடர
ஊக்கமளிப்பது
கல்வியே !
மணம் வீசிக் கொண்டே
இருக்கும் வண்ணமலர்
கல்வி தானே !
அறிதல்
புரிதல்
உணர்தல்
தெளிதல்
எல்லாமே
கல்விக்குள் !
கசடறக்
கற்றால்
பிற கற வாழலாம்
இப்பூலகில் !