நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.
ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது.
மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.
அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.
அவன் உரக்கச் சிரித்தான்.
முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார்.
கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.
கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.
இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன்.
முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின.
சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.
முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார்.
ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்
கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும். உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.
வழிப்போக்கன் யோசித்தான்.
நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர்.
இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா.
ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.
கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.