என்ன இந்த வாழ்க்கையென்று
அலுத்துக் கொள்ளும் வேளைகளில்
நிழலான சில காட்சிகள்
என்கண் முன்னால் !
அடுத்தவீட்டு வாசலில்
அணைத்தகைக் குழந்தையோடு
அழுக்கடைந்த உடையோடு
அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி !
வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினாள் !
கல்லூரியில் படிக்கும்மகனை
காலையில் எழுப்பும்போது
கனமான அவன் எதிர்காலம்
கண்முன்னே நிழலாக !
தெருவிளக்கின் கீழே
திறந்தபுத்தகம் கையோடு
தேர்விற்காக படிக்கும்
திண்ணைவீட்டுப் பையன் !
வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினான் !
கையில் பெட்டியுடன்
காரில்சென்ற கணவருக்கு
கைகாட்டித் திரும்பினேன்
கவலைகள்சில நிழலாக மனதில் !
கைவண்டி இழுத்துக்கொண்டு
கூன்விழுந்த முதுகுடன்
களைப்பில்லா முகத்துடன்
கவலையின்றி ஒருபெரியவர் !
வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினார் !
நெய்சோறு கையிலெடுத்து
நெருங்கிநின்ற மகளின்வாயில்
நீட்டிநான் கொடுத்தபோது
நிழலான ஞாபகங்கள்சில !
பாத்திரங்களைக் கழுவிமுடித்த
பழையசோறு வேண்டுமென்ற
பக்கத்துவீட்டு வேலைக்காரப்பெண்
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள் !
வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினாள் !
நிஜத்தின் அர்த்தம் தன்னம்பிக்கைகளோ?
முதன்முதலில் வாழ்க்கையின்நிஜம்
நம்பிக்கை என்றறிந்தேன் !
காரைக்குடி பாத்திமா ஹமீத்
நன்றி
வானலை வளர்தமிழ்
தமிழ்த்தேர்
5 ஆம் ஆண்டு மலர்