வாழ்க்கையெனும் கப்பலில்
பயணம்நாம் செய்திட
துடுப்பாக வேண்டும் உறவுகள் !
வசந்தமான நம்வாழ்க்கை
வளமாக அமைந்திட
தென்றலாக வேண்டும் உறவுகள் !
முகத்திற்கு முன்சிரித்து
முதுகில் நம்மைக் கொல்லும்
மூடத்தனமான உறவுகள்
வேண்டாம் நமக்கு !
கலங்கிய பொழுது
கைகொடுத்து வாழ்க்கைச்
சக்கரம் இனிதாய்ச் சுழல
அச்சாணியாக வேண்டும் உறவுகள் !
தொடக்கத்தில் வந்த உறவுகள்
தொலைந்து போகலாம்,
பாதியில் வந்த உறவுகள்
மனதில் என்றென்றும்
பதிந்து நிற்கலாம் !
காலதேவன் எழுதிய கணக்கு
இறக்கும்வரை வரும் உறவுகள்
எவர் எவரோ? அதில்
இருக்கும்வரை தொடரும் உறவுகள்
எவர் எவரோ?
சூதும் வாதுமின்றி
கள்ளங் கபடமின்றி
போட்டி பொறாமையின்றி
தூய்மை உள்ளம்கொண்டு
ஆதிமுதல் அந்தம்வரை
அனைவரிடமும் நல்உறவுகளால்
வாழ்ந்து மேம்படுவோம் !
என்றும் நல் உறவுடன்
காரைக்குடி பாத்திமா ஹமீத்
ஷார்ஜா
நன்றி :
தமிழ்த்தேர்
கார்த்திகை மாத இதழ்
நவம்பர் 2008