ஈரம்

இலக்கியம் கவிதைகள் (All) காரைக்குடி பாத்திமா ஹமீது

 

என் மழலையின் ஈரம்,

மணல்வீடு கட்டியதை

மழைவந்து கரைத்தபோது

அமாவாசையிலும் நிலவுகாண

அம்மாவிடம் அடம்பிடித்தபோது !

 

என் நினைவுகளின் ஈரம்,

உடன்படித்த என்தோழி

ஊருணியில் உயிர்விட்டபோது

பாசமுள்ள என் பெரியம்மா

மாரடைப்பில் மரணித்தபோது !

 

என் உணர்வுகளின் ஈரம்,

சுனாமிகள் மக்களைச்

சுருட்டிச் சென்றபோது,

பூகம்பங்கள் மனிதர்களைப்

புதைத்துக் கொண்டபோது !

என் கனவுகளின் ஈரம்,

கிராமத்துப் பள்ளிகளில்

ஆசிரியையாக இல்லாதது

களையெடுக்கும் அழகைக்

கண்டுரசிக்க முடியாமலானது !

 

என் ஆனந்தத்தின் ஈரம்,

முதன் முதலில் மகன் முகம் கண்டு

முழுமையான பெண்மையடைந்தபோது

முல்லைப்பூச் சிரிப்புமகளை

முதல்பெண் வாரிசாக பெற்றபோது

 

என் நன்றிகளின் ஈரம்

வானலை வளர்தமிழில்

வந்தமுதல் அனுபவம்,

வடித்தஎன் கவிதையை

வாசித்ததுஎன் தந்தையானபோது !

 

ஈரமனதுடன்

காரைக்குடி. பாத்திமா ஹமீத்

ஷார்ஜா

 

நன்றி :

தமிழ்த்தேர்

புரட்டாசி மாத இதழ்

செப்டம்பர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *