– க.து.மு. இக்பால் –
வாக்களிப்பு எனும்
வார்த்தையைக் கண்டு பிடித்தவரை
வணங்காமல்
இருக்க முடியவில்லை
தேர்தலில்
எது இல்லாவிட்டாலும்
வாக்களிப்பு
கட்டாயம் இருக்கும்
தேர்தலில்
ஒருமுறை நாம்
வாக்களிப்பதற்காக
ஆயிரம் வாக்களிப்புகளை
அள்ளி விடுகிறார்
அபேட்சகர்
பெரும்பாலும்
வாக்களிப்புகளைப் பார்த்து
வாக்களிப்பதே
நம் வழக்கமாகி விட்டது
தன் வாக்குகள்
சிதறிவிடாமல்
பார்த்துக் கொள்ளும் அக்கறை
அபேட்சகருக்கு
தேர்தல் வரைதான்
தேர்தலுக்குப் பின்
வாக்களிப்புகள்
பெரும்பாலும்
சிதறிப் போகின்றன –
அபேட்சகர் வாக்களிப்புகள்
மட்டுமல்ல
நம் வாக்களிப்பும்தான்
கட்டாய வாக்களிப்பு
இல்லாவிட்டாலும்
எல்லா இடங்களிலும்
வாக்களிப்பு
கட்டாயமாகி விட்டது.