நடைமுறை இதழியல்

இலக்கியம் நூல் அறிமுகங்கள்
Ithaliyal
இதழியல் குறித்த மிகவும் அருமையான நூல்
முல்லையகம் வெளியீடு
A6 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு
208 அண்ணா முதன்மை சாலை
கலைஞர் கருணாநிதி நகர்
சென்னை 600 078
அலைபேசி : 98 409 07373
விலை : ரூ 200
* சிறந்த பத்திரிகையாளனாக வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி* பத்திரிகைத்துறையில் ஏற்கனவே உள்ளவர்களுக்குச் சிறந்த கையேடு* பத்திரிகைத்துறையின் இயக்கத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு ஒரு களஞ்சியம். அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு நல்ல ஆசான்.

 

 

 

இதழியல்

  தகவல்களைத் திரட்டுவதும் அவற்றைப் பரப்புவதுமே பத்திரிகைகளின் பணி. இந்தப் பணியைச் செய்பவர்கள் பத்திரிகையாளர்கள். இந்த வகையில் புராணங்களில் சொல்லப்படும் நாரதர் தான் உலகில் முதல் பத்திரிகையாளர். பூவுலகில் பயணம் செய்து தகவல்களைத் திரட்டிக் கடவுளர்களுக்கு நாரதர் தெரிவித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

தொடக்க காலத்தில் மனிதன் சைகைகள் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டான். பின்னர் சில ஓசைகள் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டான். பிறகுதான் மொழி தோன்றியது. அதிலும் முதலில் தோன்றியது பேச்சு மொழியே. எழுத்துகளுக்கான வரி வடிவத்தை உருவாக்கும் முன், அதாவது எழுத்து மொழி தோன்றும் முன்பு, படங்களை வரைந்து தகவல்களைப் பரப்பினான்.

மன்னர்கள் காலத்தில் தண்டோரா போட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதுதான், இன்றுள்ள மக்கள் தொடர்பின் தொடக்கம். வெள்ளையர்கள் வரவால் அச்சுக்கலை அறிமுகமாகி வளர்ச்சி பெற்றது. பின்னர் இந்தியாவிலும் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

உலகின் முதல் மக்கள் தொடர்பு சாதனம் பத்திரிகைதான். அறிவியல் வளர்ச்சியால் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவை தோன்றின. இவையனைத்தும் மக்கள் தொடர்பு சாதனங்கள்தான் (Media of Mass Communication) எனினும், இவற்றுக்கு அடிப்படை இதழ்களே. எனவே, மக்கள் தொடர்பு பற்றி அறிய உதவும் துறை இதழியல் துறை (Journalism) என்று அழைக்கப்படுகிறது. வானொலி தொலைக்காட்சி ஆகியவற்றில் பணிபுரியும் செய்திப் பிரிவினரும்கூட இதழாளர்கள் (Journalist) என்றே அழைக்கப்படுகின்றனர்.

இதழ்கள் அவற்றின் உள்ளடக்கத்தைக் (Content) கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1.கற்பனையற்றவை (Non – Fiction)

2.கற்பனை கலந்தவை  (Fiction)

நாட்டு நடப்புகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் செய்தித்தாள்கள் முதல் வகையைச் சாரும். உதாரணம் : தினகரன், தினமலர், தினத்தந்தி, தினமணி, நக்கீரன், இந்தியா டுடே…

கற்பனையில் எழுதப்படும் கதை, கவிதை, நாடகம் ஆகியவற்றைக் கொண்டவை இரண்டாம் வகையைச் சாரும். உதாரணம்: குங்குமம், ஆனந்தவிகடன், குமுதம்.

கற்பனையற்ற இதழ்களிலும் இரண்டு வகை உண்டு. அவை:

1.செய்தி இதழ்கள் (News papers)

2.கருத்து இதழ்கள் (Views papers)

நாட்டு நடப்புகளைச் செய்தியாகத் தரும் தினகரன், தினமலர், தினத்தந்தி, தினமணி போன்றவை செய்தி இதழ்கள் பிரிவில் அடங்கும். எனினும் இது பெரும்பான்மை பற்றியதே. நாட்டு நடப்பு பற்றிய விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் நக்கீரன், இந்தியா டுடே, ஜூனியர் விகடன் போன்றவை கருத்து இதழ்கள் எனப்படுகின்றன.

இவையன்றிச் சில சிறப்பு இதழ்களும் உண்டு. விளையாட்டு, பொருளாதாரம், வணிகம், சினிமா, இலக்கியம் போன்ற துறைகளின் செய்திகளை மட்டுமே கொண்ட சில இதழ்கள் வருகின்றன. இவை ‘சிறப்பு இதழ்கள்’ எனப்படுகின்றன. உதாரணம் : சாம்பியன், வண்ணத்திரை, முதலீடு, காலச்சுவடு…

உள்ளடக்கத்தின் அடிப்படையில் பத்திரிகைகள் பாகுபடுத்தப்படுவதைப் பற்றி இதுவரை பார்த்தோம். இவை மட்டுமன்றி, பத்திரிகைகள் அவை வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றன. அவை :

1. நாளிதழ்

2. வார இதழ்

3. மாதம் இருமுறை

4. மாத இதழ்

5. காலாண்டு இதழ்

6. ஆண்டு மலர்.

இவற்றுள் மக்களைப் பெரிதும் ஈர்ப்பவை நாளிதழ்களே. காரணம் நாட்டு நடப்புகளை அன்றாடம் அறிய உதவுபவை நாளிதழ்களே. நாளிதழ்களில் பலதுறை தொடர்பான செய்திகளும் இடம் பெறுகின்றன. எனவே, இதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களும் பலதுறை அறிவு பெற்றவர்களாக விளங்குகின்றனர்.

 

 

 

 

 

Ref : Muduvai Hidayath

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *