பேராசிரியர் திருமலர் மீரான் எம்.ஏ., எம்.ஏ.
வானவர் சூடி
மண்ணுலகிற்குப்
புனிதப் பயணம் செய்த
புண்ணிய ரமலானே !
நரம்பறுந்து கிடந்த
மனித வீணைகள்
உனது வருகையா லல்லவோ
ஆன்மீக ராகம் !
மீட்கத் தொடங்கின !
இலையுதிர் காலத்து
இல்லா மரங்களாக
வளர் பச்சையுமின்றி
வாடிக் கிடந்த
இதயங்க ளெல்லாம்
இறை வணக்கங்களால்
எழுச்சி பெற்றதும்
உனைக் கண்ட பிறகுதான் !
உந்தன்
வேள்வித் தீயில்
புடம் போட்டதால்தான்
எங்கள்
பாவாத்மாக்கள்
மாசு நீங்கி
பவிசு பெற்றன !
வெற்றிப் பயணம்
விரைவாய் முடித்து
விடைப்பூக்கள்
பெற்றுச் செல்லும்
பாசக் காரனே !
வெயிலுடை தரித்து
வெள்ளை பர்தா போர்த்தி
நோன்பினைப் பேணிப்
பகலெல்லாம் பவ்யமாய்
இபாதத் திருந்து
இரவில் முகம் காட்டும்
நிலவுப் பெண்ணும்
உந்தன்
பிரிவினை எண்ணியோ
இளைத்துப் போகிறாள்?
ஈதுல் பிதர்
இனிய நாளில்
ஏகனைத் தொழுது
இன்ப லயத்தில்
மூழ்கும் போதும்
உந்தன்
ஈரநினைவுகளல்லவா
நெஞ்சில்
குமிழிடுகின்றன !
பன்னிரண்டு
மாதங்களுக் கொருதடவை
தெளஹீதின்
வாசம் கமழத்
தரிசனம் நல்கும்
தெய்வீகக் குறிஞ்சியே !
ஈத் பெருநாளின்
இளம்பிறைக் கன்னிபோல்
இறை நம்பிக்கை
நாளும் வளர
நாங்களும்
காத்திருக்கிறோம்
மீண்டும்
உன் வருகைக்காக !
அஸ்ஸலாமு அலைக்கும்
யா
ரமலானுல் முபாரக் !!
நன்றி :
மதிநா மாத இதழ்
ஜுலை 1983