உடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை ஆய்ந்துப் பார்க்கவும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான வழியை தேடவும் தேவையான பாடம் உடம்பிற்குள் உண்டு. நீர் நிலம் காற்று வானம் பூமியின் தத்துவத்தை உடம்பிற்குள் தேடினால் பெற்றுக் கொள்ள முடியும்!
——————————
2
உடல் சுடும் நெருப்பு உணவைச் செரிக்கவும், உடம்பெங்கும் பாயும் நீர் உயிரை நிலைப்பிக்கவும், சுவாசமாகச் சுழலும் காற்று உடம்பிற்குத் தேவையானவரை வாழ்வதற்கு மரணத்தை தடுத்துவைத்திருக்கவும், பூமி உடலாக உயிரைத் தாங்கியும், பரந்தவெளி வானம் இவைகள் அனைத்தையும் ஆளும் சூழ்சுமத்தைப் போதித்தும் நமக்குள் ஒன்றியே கிடக்கிறது இயற்கை. இயற்கையோடு ஒன்றி இருக்கவே ஏங்கி ஏங்கிக் கிடக்கிறது உடலும்..
——————————
3
உடம்பு இல்லையேல் பிறப்பின் ஞானமில்லை. உடம்பு புரியவில்லை எனில் பிறப்பும் புரிவதில்லை இறப்பும் எப்படி வந்ததென்றுத் தெரிவதில்லை. எப்போது சாவோமோ என்று பயந்து பயந்து திடீரென தனக்கேத் தெரியாமல் ஒருநாள் செத்துப் போகும் உடலை நாம் தான் அத்தகைய ஆபத்தை நோக்கி வளர்கிறோம். உடலை வளர்ப்பது கலைகளில் ஒன்று. உடலைப் பேணுவது கடமையில் ஒன்று. உடலை நேசிப்பது ஒரு சுகம். உடலைக் காதலுடன் காத்துக்கொள்வதென்பது ஞானத்தின் முக்தியை அடையும் வழிக்கு நம்மை இலகுவாகக் கொண்டுசெல்லும். உடல் தான் அறிவை தோண்டத் தோண்டத் தரும் சுரங்கம். உடலுக்கான அறிவு மகத்தானது. உடம்பின் அருமையை உணர்ந்தவராலேயே உயிரின் சிறப்பையும் அறியமுடியும்..
——————————
4
உயிர் ஒரு வரம். மனிதப் பிறப்பு பாக்கியம். அந்த பாக்யத்தைப் புரிவதற்கும் உயிரை வரமாக்கிக் கொள்ளவும் உடம்பை பாதுகாத்தல் வேண்டும். ஒரு மனிதனால் பறப்பதற்கான ஆய்வைப் பற்றிச் சிந்திக்கவைக்க அறிவினால் முடியுமெனில் பறக்கவைக்க உடலால் மட்டுமே முடிகிறது. அதுபோல் தான் வாழ்வின் சூழ்ச்சும முடிச்சிகளை அவிழ்த்து பிறப்பை வென்றுகொள்ள ஆன்மா அறிந்திருப்பினும் அதை நிகழ்த்திக் கொள்வதற்கு உடலொன்றே ஆயுதமாகிறது..
——————————
5
ஒரு ஆன்ம பலம் நிறைந்த யோகாசன ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் பெயர் ஜினன். அவரும் அவர் மனைவி ஸ்ரீதேவியும் வாழும் கலையை தியானம் வழியும் வெவ்வேறு பல உடற்பயிற்சிகளின் வழியும் தெரிந்தோருக்கெல்லாம் போதித்து இயன்றவரை எல்லோரையும் நல்வழிபடுத்தி வருகின்றனர்.
உடல் தீங்கை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி நோய்களை மருந்தின்றி உடல்கொண்டே சரியாக்கும் யோகாசனங்களை அனைவருக்கும் பயிற்சிப்பதை அவர்கள் தனது சேவையாக செய்துவருகின்றனர். அவ்வாறு அவர்கள் நடத்தும் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பெனக்குக் கிடைக்கையில் அவர் மிக நாசுக்காகப் புரியத்தக்க வகையில் பல நல்ல விசயங்களை எல்லோருக்கும் போதிப்பதை அறிந்தேன். அங்ஙனம் பேசுகையில் அவர் சொல்கிறார், பிறக்கும் போதே ஒரு செல்வழியே உலகிற்குவரும் ஆன்மாவானது அந்த ஒரு செல்லின் வழியே தனக்குத் தேவையான அத்தனையையும் கொண்டுவருவதாகவேச் சொல்கிறார்.
ஒரு செல் வழியே பிறக்கும் ஒரு உயிர்க்கு நீடித்து உயிரோடு இருக்க காற்றும் நீரும் போதுமானது என்கிறார். அதற்குப் பின் நாம் மாற்றிக்கொண்ட நமது வாழ்க்கை முறைக்கிணங்க கூடுதல் பலமும் உடல்கட்டும் அவசியப் பட்டதற்கிணங்க நாம் உண்ணும் முறையும்’ பின் சுவைக்கேற்ப உணவு வகைகளும் மாறி மாறி இன்று ஆடு மாடு கடந்து மனிதனையே மனிதன் கொன்றுத் தின்னும் அளவிற்குக் கேவலமாக வந்துவிட்டோம் என்பதே சோகம்..
——————————
6
வாழ்வதற்கு நீரைவிட சிறந்த உணவு வேறில்லை என்கிறார் திரு. ஜினன். இன்னும் வேண்டுமெனில் மண்ணில் விளைந்த மரக்கறியும் பழங்களும் காய்களும் விதைகளையும்விட உடலை சரியாக வைத்துக்கொள்ளும் உணவு வேறில்லை என்கிறார். அங்ஙனம் உடம்பை காப்பது பழவகை மற்றும் காய்கனி வகைகளெனில், கொல்வது ‘நாம் துடிக்கத் துடிக்க அடித்து தின்னும் பிற உயிர்களின் மாமிசங்கள் தானென்கிறார். கைவிரல்கள் ஐந்தும் ஐம்பெரும் பூதங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கும்’ பரவெளியாக அகன்றிருக்கும் இயற்கைக்குமான இணைப்பினை மிகத் துல்லியமாய் அறியத்தரக் கூடிய அறிவினைக் கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூறினார்..
——————————
7
உலகையே நான் நினைத்தால் என்னிரண்டு கைகளுக்குள் அடக்கிவிடுவேன் என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தையின் கர்ஜனை மட்டுமல்ல, ஒரு மனிதன் நினைத்தால் எதையும் தான் நினைத்ததை நினைத்தவாறு செய்ய முடியுமென்பதைத் தான் ஆன்மிக பலமானது பல உதாரணக் கதைகளுடன் கடவுள் வழிபாட்டு சம்பிரதாயங்களுடன் பின்னிப் பிணையப்பட்டு பல கோணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி திரித்து வேறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய ஜாதிக்குள்ளும் மதங்களுக்குள்ளும் திணித்து நம்மையே இன்று கொண்டு குவித்துக் கொண்டிருப்பது தான் கூடுதல் வேதனை.. .
8
எதையும் நாம் நினைத்தவாறு அடைந்துக் கொள்ளத் தான் இயற்கை நமக்கு அறிவாகவும் உடலாகவும் இங்ஙனம் கிடைக்கப் பட்டுள்ளது. நாம் தான் அதை வெறும் வாய்க்குள் விழுங்கி வயிற்றிற்குள் அடைக்கக் கிடைத்த உணவாக மட்டுமே எண்ணி உண்டு உடலையும் அறிவையும் இப்பிறப்பையும் வெறும் சுயநலத்திற்காக மட்டுமே செறித்துவிடுகிறோம்..
அதன்றி நாம் மனிதராக வாழ்ந்து அன்பையும் பண்பையும் உடனிருப்போருக்கும் போதித்து உதவி செய்து உடலின் வாசனையை அறிவினால் பெருக்கி உயர்வாக வாழவேண்டும், அங்ஙனம் வாழவேண்டும் எனில் உடலை இயற்கையின் அரவணைப்பிற்கு ஏற்றாற்போல் இணங்கி வளர்த்தல் வேண்டும், அதற்கு யோகாசனம் வழிவகுக்கும் என்றார் திரு.ஜினன். அவரின் வாய்ப்பாடத்தை விட அவரின் முகவொளி வாழ்வின் கற்பிதத்தை புன்னகை மாறாது போதித்தது..
——————————
9
எனக்குத் தெரிந்து, உடம்பைப் பேணுதல் என்பது வாயை மூடுதலில் ஆரம்பிப்பதாகவே எண்ணுகிறேன். தேவையற்றதைப் பேசாமை எனும் பக்குவமும், தேவையுள்ளதை தக்க இடத்தில் பேசும் அறிவுக் கூர்மையும், உடலுக்கு ஏற்றதைமட்டும் உண்பதிலும், ஏற்காததை தவிர்த்தலிலுமே உடம்பைப் பேணுதலுக்கான நன்மை வாயினால் ஏற்படுகிறது.
ஒரு மாட்டுப் பாலினை முழுமையாகச் செரிக்கும் சக்தி கூட மனிதனுக்கு இல்லையாம். இரண்டு மணிநேரம் கடந்துபோனாலே சமைத்த உணவு கூட பாக்டீரியா பிடித்துப் போகிறதாம், பின் அவைகளைச் செரிக்கும் சக்தி சூரிய ஒளி நிறைந்துள்ள பகல்பொழுதில் மட்டுமே இருக்குமாம். மண்ணில் விளையும் பழங்களையும் காய்களையும் உண்பதற்கு உரிய நேரமென்று வேண்டாமாம். எப்பொழுதும் பாதி தின்று, கால்பாகம் காற்று நிறைத்து, கால்பாகம் நீர்மம் அடக்கி நெடுங்காலம் வாழமுடியுமென்கிறார்கள் நெடுங்காலம் வாழ்ந்தோர்..
——————————
10
அதிகம் உண்பவர் உறங்கிப் போகிறார் சரியாக உண்ணத் தெரிந்தவர்தான் மேலும் திடமாக நடக்கும் சக்தியை அடைகிறார். ஒரு மனிதருக்கு போதுமான தூக்கமும் அரை வயிற்று உணவும் இயன்றவரை நீரும் எப்படியேனும் நேரம் ஒதுக்கிச் செய்யும் உடற்பயிற்சியும் உடலைக் காத்து உயிரை நெடுங்காலத்திற்கு நிலைக்கச் செய்வதோடு அறிவைப் பெருக்கி எதையும் ஆளும் பலத்தையும் தொடர்ந்து தருகிறது.
அதுபோல்’ உடம்பை சீர் செய்யும் அறிவு உணவுவழி கிடைப்பது போல, வாழ்வை நேராக்கும் அறிவு நேர்த்தியான சுவாசத்தால் அமைகிறது. சுவாசத்தை உடற்புயிற்சி சீர் செய்கிறது எனில், உடற்பயிற்சிக்கு உடல் பயன்படும் வித்தையை யோகாசனங்களால் புரியவைக்கமுடிகிறது. யோகாசனம் சரிவரக் கைவரப்பட மீண்டும்; உணவு, தூக்கம், வாழ்வுக் கலை பற்றிய சரியானப் பயிற்சி போன்றவை தேவைப்படுகிறது..
——————————
11
பொதுவாகப் பார்த்தால் தொப்பைக் குறைத்தலும், நோய்களை அகற்றலும், வாழ்தலை முறைசெய்தலும் தானே இன்றைய நம் தேவையாக உள்ளது? அங்ஙனம் நமது தேவையை பூர்த்தி செய்ய; மனதை அமைதிபடுத்தும் தியானமும், தியானத்திற்கு மனதை ஆட்படுத்தும் ஆசனங்களுமென வாழ்வுக் கலையை நம் முன்னோர் முறையாக வகுத்து வைத்துள்ளனர். உழைப்பில்லாதோருக்குத் தான் உடற்பயிற்சி உழைப்பவருக்கு எதற்கு என்கின்றனர் நிறைய பேர். இருந்தும் கேள்விகளுக்குப் பின்னும் முன்னும் தொப்பை சாய்த்து நடப்பவரும் சோர்ந்து கிடப்பவருமே ஏராளமாக உள்ளோம் என்பது நாணக்கேடு.
நடப்பது உழைப்பது எல்லாம் உயிர் பிழைக்கும் வழி. காட்டில் விளையும் பொருட்களை நாடெனும் கோடு கிழித்து காசுக்கு ஆக்கியதால் படும் நமது வெற்று வயிற்றின் துன்பமது. அதைக் கடந்தும் உடம்பிற்கான ஒரு அறிவியல் உண்டு. அந்த அறிவியலின் ஆழத்தை வாழும் கலையெனும் யோகாசனங்களும் தியானமும் கற்றுத் தருவது மனதுள் நெல்லெண்ணங்களின் சாரத்தை ஏற்படுத்தி மனதை நேர்வழியில் செலுத்த மிகையாய் உதவுவதை கடந்த பதினைந்து வருடங்களாகச் செய்யும் தியானத்தின் வழியே அறிந்து வருகிறேன்..
இருந்தும் உடம்பைக் கோவிலென்று அறிந்திருந்தும் உடம்புப் பற்றிய கவனத்தை விட்டொழித்துவிட்டு, மேலாக என் உடம்பையே திரியாக்கி வரும் தலைமுறைக்கு வெளிச்சம் தரவே எழுத்தின்வழியே எரிந்துக் கொண்டிருக்கிறேன்.
எனினும் தூக்கம் பற்றியோ உணவு பற்றியோயான கவலையை எழுத்தின் அளவிற்கு படவில்லை என்பதால் ஏற்பட்ட நோய்கள்தான் இனி வாழும் காலங்களையும் தீர்மாணிக்கவுள்ளதென்பது வேறு. ஆயினும், வாழும் காலம் குறைந்துப் போனாலும் எழுத்தால் பேசும் காலமும் குறைந்துவிடுமே எனும் கவலையில் தற்போது வாழுங் கலையில் ஈடுபடப் பட யோகாசனங்களின் முழு அருமையையும் உணர்வின் வழியே அறியமுடிந்தது. அதோடு, மாத்திரைகளால் விழிங்கப்பட்ட உடம்பு இப்போது ஆசனங்களால் மீள்பதிவு ஆகிறதென்பதும் உண்மை..
——————————
12
வரும் சாவை எட்டியுதைக்க எல்லோருக்கும் ஆசை இருக்கலாம். இருக்குமெனில் அதை சாதாரண உடற்பயிற்சியின் மூலம் எட்டி உதைக்கலாம் வாருங்கள்; அதற்கு முதலில் அவரவர் உடலை அவரவர் தனது தாயைப் போல பாதுகாத்துக்கொள்ளுங்கள். பத்து மாதம் வயிற்றிலும் நெஞ்சிலும் தாங்கிய தாயும் நெஞ்சில் சுமந்த தந்தையும் உயர்வு எனில் காலத்திற்கும் நமைத் தாங்கிப் பிடித்திருக்கும் இவ்வுடம்பும் உயர்வு தான்.
உடம்பு மெலிந்து முகம் பொலிவோடு இருப்பது மட்டுமல்ல வாழ்வதன் தேவை. மனது எண்ணியதை உடம்பு பெறவேண்டும். உடம்பு செய்யவந்ததை மனதிற்குச் சொல்லவேண்டும். உடம்பும் மனதும் சேர்ந்து உயிர்களை ஜனிப்பது போல் உலகின் அசைவுகளை ஒன்றி அறிவதற்கு மனபலத்தைத் தரும் உடலும் உடம்பைக் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ளும் எண்ண உறுதியும் இன்றியமையாதவை..
——————————
13
ஏதோ நான் வாழ்ந்தேன் என்று வாழ்ந்து பின் கிடைத்ததை தின்று, முடிகையில் தூங்கி, சோர்ந்ததும் மறித்துப் புழுத்துப் போவதல்ல நம் பிறப்பு.
மனிதப் பிறப்பு அழகு நிறைந்தது. அறிவுப் பூர்வமானது. ஆளுமையைக் கொண்டது. அதை நாம் எங்கே வைத்திருக்கிறோம்? எண்ணியவுடன் அதைத் தேடிப்பிடித்து விட இயலுமா நாம் நம் முறையற்ற வாழ்வில் புதைத்த நமது நோயற்ற உடம்பை? முடியுமெனில் தேடுங்கள். தேடிப் பிடியுங்கள். எப்படி தேடுவது என்பதை நான் சொல்லவா? தேடிப் பிடிக்க முதலில் அமைதியில் ஆழ்ந்திருங்கள். விடும் மூச்சைக் கூட சீராக விடப் பழகுங்கள். சீரான சுவாசத்தை ஏற்படுத்தித் தரும் உடற்பயிற்சியினாலும் உண்ணும் முறையான உணவாலும் அத்தகைய நோயற்ற உடல்வாகினை அமைத்துக் கொள்ளுங்கள்.
யாரோ வந்தார் யாரோ சொன்னார் எப்படியோ வாழ்கிறோம் என்பது போதாது. எல்லைமீறிப் போய்க் கொண்டுள்ளோம். நாம் செய்யும் தவறுகளின் வழியே எட்டி எட்டி மரணத்தை நாம் தான் ஒவ்வொருவராய் பறித்துக் கொண்டுள்ளோம். வெறும் மரணம் தேடும் கூடுகளை, அதற்கென வாழும் வாழ்க்கையை கைவிட்டு மனிதம் பூத்த பிறப்புகளாக இம்மண்ணில் நமது கடைசி மூச்சை நிறுத்துவோம்..
——————————
14
பிறப்பை கேட்டுப் பெறவில்லை. அதுபோல் இறப்பையும் கேட்காமலே நடப்போம். வாழ்க்கை என்பது என்ன? சிரிப்பது, ரசிப்பது, ருசிப்பது, களைப்பது, கவலையை அறுப்பது, கண்மூடுவது; அவ்வளவுதான். ஆனால் அதற்கு அத்தனையையும் ஏற்கும் புரியும் அனுசரிக்கும் அடங்கிப் போகும் மனசு வேண்டும். அந்த மனசெங்கும் அன்பு நிறைய எவ்ண்டும். அன்பை பண்போடு வெளிப்படுத்த வேண்டும். ஆசையை தேவையை பார்வையைக் கூட பிறருக்கு வலிக்காமல் பார்க்க மனதையும் வாழ்தலையும் தெளிவாக அமைத்துக்கொள்ளல் வேண்டும்.
என் நண்பன் சொல்வான் எல்லாம் கடந்துப் போகும் என்பான். வாழ்வில் எல்லாம் கடந்துப் போனாலும் நாம் கடந்த பாதை காலத்திற்கும் நிலைப்பதும், நம்மோடு அது புதைந்துப் போவதும் நம் வாழ்தலில் தானே இருக்கிறது?
அந்த வாழ்க்கையை எப்படி நாம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறோமோ அப்படி அமைத்துக்கொண்டு வாழ நல்ல உடம்பும், குன்றா அறிவும், அதை வெளிப்படுத்தும் முகப்பொலிவும், தான் வந்த பாதையை தன்பின்னே வருவோருக்குக் காட்டும் மனதும், அசையும் ஒரு மரத்தின் இலையைக்கூட அது நமக்குத் தேவையில்லாதபட்சத்தில் பறித்திடாத மனிதமும் எல்லோருக்குள்ளும் இருப்பது தேவையாகவுள்ளது..
அது எல்லோருக்கும் வாய்க்க; வாழும் உயிர்கள் தேவையை உணர, அடைய, பூக்கும் மலர்களும், புலரும் காலையும், கொட்டும் மழையும், வீசும் காற்றும், ஒளிரும் கதிரும், குளிரும் நிலவும், குழந்தையின் சிரிப்பும் அண்டப் பெருவெளியெங்கும் அதுவாக நிறைய நாமெல்லோரும் நல்ல மனிதர்களாய் வாழ முற்படுவோம். இயற்கையை அழிக்காத வாழ்வே வாழ்வென்று அறிவோம். மனிதர் மட்டுமல்ல மனிதன் போகும் நடைப் பாதையில் மலர்ந்திருக்கும் ஒரு மலரைக் கூட பறிக்க அஞ்சுவோம்..
கண்ணில் விழும் தூசியும், நாசியில் நுழையும் அடுப்புப் புகையும், வேறு வழியின்றி தின்னக் கிடைக்கும் பாழுஞ்சோறும் உடம்பிற்கு பகையென்று எண்ணும் அதே மனங்கொண்டு புகையிலையையும் வெண்சுருட்டையும் போதைப் பொருட்களையும் குடிகெடுக்கும் குடியையும்கூட கேடென்று எண்ணி கைவிடுவோம். நஞ்சென்று அறிந்து காரி உமிழ்வோம்..
விடும் மூச்சு இசைபோலப் பரவி மனிதச் சுகந்தம் நிரம்பிவழிய பரந்தவெளியெங்கும் நன்மையைப் பரப்பி நன்னிலத்தை மீண்டும் வரும் தலைமுறைக்காய் மீட்டெடுக்கட்டும்..
இயற்கையை அதன் எழில் மாறாது நாம் காக்க, இயற்கையும் நம்மை நலம் குன்றாது காத்துக் கொள்ளுமென்று நம்புவோம்..
நம்பிக்கைதானே வாழ்க்கை வேறென்ன’ உடம்புமொரு ஆயுதமென்று நம்பி ஏந்துங்கள், உலக சமரசத்தை எதிர்பார்ப்பின்றி பெய்யும் மழைபோல எந்தப் பிரதிபலனும் பாராது வாழும் நன்னடத்தைமிக்க வாழ்வினால் ஏற்படுத்துவோம்..
எங்கும் நோயற்ற வாழ்வு நிலைக்கட்டும்; உயிர்கள் அனைத்தும் அதுவாக அதன் மகிழ்வோடு வாழட்டும்.. இயற்கையன்னை எல்லோரையும் காப்பாளாக..
——————————
வித்யாசாகர்
vidhyasagar1976@gmail.com