வண்ண வண்ண மின் விளக்குகளால்
மின்னும் மினாராக்கள்…
வித விதமான
அரேபிய பேரீச்சம் பழங்கள்,
பல ரகங்களில் பழ வகைகள் …
பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி…
தாகம் தணிக்க குளிர் பழச் சாறு…
இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும்
பள்ளி வாசல்கள்…
அசைவ உணவின்றி முழுமை பெறாத
சஹர் நேர சாப்பாடு…
இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி
எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க்
கொண்டிருக்கிறது.
அருள்மிகு மாதத்தை நாம் ஆனந்தமாய் அனுபவித்து வரும் நிலையில் உலகெங்கும் நம்
சகோதர முஸ்லிம்கள்- எகிப்து, மியான்மர், சிரியா, பாலஸ்தீனம், இராக், துனீசியா,
லிபியா, மொரொக்கோ, மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அனுபவித்து வரும்
இன்னல்களை கவனிக்கத் தவறிவிட்டோம். எனவே தான் அவர்கள் படும் துன்பங்கள் நம்
உள்ளத்தில் எந்த வித உருத்தளையும் ஏற்படுத்தவில்லை.
புனித ரமளானை இறையில்லங்களில் கழிக்க வேண்டிய முஸ்லிம்கள் இன்று நிவாரண
முகாம்களில் இருட்டறையில் தங்கள் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர்.
நாம் நோன்பு துறக்க கஞ்சி குடித்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் நோன்பு
வைக்கவே கஞ்சியின்றி பட்டிணி கிடந்து வருகின்றனர்.
பல இடங்களிலும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் பிரியாணி விருந்துடன் உணவு
திருவிழாவாக விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் சோமாலியாவில் உணவு
கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். பஞ்சமும், பட்டினியும் தலை
விரித்தாடுகிறது. பல லட்சம் பேரின் உயிர்கள் இன்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பஞ்சம் பெரிதாகியுள்ளது, நிவாரண
முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கோ சரியான உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து
வருகின்றனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு கால் வயிறு உணவு அளிக்கக் கூட
வழியில்லாமல் பெற்றோர்கள் சாப்பாட்டுத் தட்டுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.
புனித ரமழானுடைய நாட்களில் நோன்பை நோற்ற நிலையில் அல்லாஹ்வின்
மார்க்கத்துக்காக போராடும் எகிப்திய சகோதரர்கள்- என உலகில் பல பகுதிகளிலும்
சொந்த நிலத்தையும், சொந்த பந்தங்களையும் கலவரங்களில் இழந்து விட்டு வயதான
பெற்றோரையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஒதுங்க இடமில்லாமல் நாடோடிகளாக
அலைந்து கொண்டிருக்கும் மக்களுக்காக புண்ணிய மிகு மாதத்தில் உடனடியாக நாம்
செய்ய வேண்டியது
ஒரு நிமிடம் மனதார சிந்தும் ஒரு துளி கண்ணீரும் அவர்களில் பாதுகாப்பிற்காக
இறைவனின் முன்பு உளமாற கேட்கும் ஒரு வேளை பிரார்த்தனையும் தான்.
இஸ்லாத்தின் எழுச்சிக்காகவும் சூழ்ச்சிகளுக்கு எதிராகவும் அதிகம் அதிகம்
துஆ கேட்போம். அல்லாஹ் அவனது மார்க்கத்தை மேலோங்கச் செய்யப் போதுமானவன்.
– www.facebook.com/idealvision