பேராசிரியர் கா. அப்துல் கபூர் குறித்து சிராஜுல் மில்லத்

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள் கட்டுரைகள்

”அருளாளன் அன்புடையோன்

அல்லாஹ்வின் கருணையதால்

பெருங்கொடையாய் வந்துதித்த

பெருமானே நாயகமே:”

இப்பாடலைப் பாடிய

 

பேராசிரியர் கா. அப்துல் கபூர்

“சிராஜுல் மில்லத்” அல்ஹாஜ்

A.K.A. அப்துஸ்ஸமது M.A.,M.P. அவர்கள்

ஆசிரியராக இருந்து வெளியிட்ட “மணிவிளக்கு ஜனவரி 1972 இதழில் வெளிவந்த அட்டைப்பட விளக்கக் கட்டுரை

 

“அனைத்துலக அருட்கொடையாய் அருளாளன் அனுப்பியதோர்

திணைத்துணையும் தீமையிலா தீங்ககற்றும் தீஞ்சுடரை

 

மண்ணகமும் விண்ணகமும் மகிழ்ந்தேத்தும் பெருநிதியை

அண்ணலென அனைத்துலகும் அணைத்தெடுக்கும் ஆரமுதை

 

ஊனேறி உயிரேறி உள்ளத்தில் ஊற்றெடுத்து

வானேறி நிற்குமுரை வழங்கியருள் வல்லவரை

பெண்ணுரிமை தன்னுரிமை பேச்சுரிமை மூச்சுரிமை

மண்ணுரிமை அனைத்தினையும் மதித்திட்ட நல்லவரை

அருளியலில் பொருளியலில் அரசியலில் அறிவியலில்

பெருமனத்தைப் புகுத்திவிட்ட பெருமகரைத் தருமகரை

மொழிவெறியை இனவெறியை நிறவெறியை நிணவெறியை

அழித்தொதுக்கி இறைவெறியை அவிழ்த்துவிட்ட அருமகரை”

 

2-12-68 அன்று சென்னை புதுக் கல்லூரியிலே நடந்த கவியரங்கிலே தேன் தமிழிலே நாயகத் திருமேனி (ஸல்) அவர்களின் திருப்புகழ் இப்படியெல்லாம் இனிமையாகப் பாடப்படுவதைக் கேட்ட அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்திலே மூழ்கியிருந்தனர். ஏனெனில் இந்த அழகிய அடிகளைக் கொண்ட உயரிய கவிதையை இயற்றிப் பாடியவர் நாடறிந்த முஸ்லிம் தமிழறிஞர் – இலக்கிய நயத்துடன் பேசி மனத்தைக் கவரும் தலைசிறந்த சொற்பொழிவாளர் – திறன்மிக்க எழுத்தாளர் – கவர்ச்சி நடையுடைய எழுச்சிக் கவிஞர் – பேராசிரியர் கா. அப்துல் கபூர் எம்.ஏ., அவர்கள். அதுவும் தூய இஸ்லாமிய நெஞ்சங்கள் அனைத்தும் பாசத்துடனே மதித்துப் புகழும் நாயகத் திருமேனி (ஸல்) அவர்களின் திருப்புகழ் என்றால், எவர் மனம் தான் நெகிழாமல் இருக்க முடியும் !

 

இன்று மிகப் பரவலாக நாடு முழுவதிலும் காணப்படும் தமிழ்க் கவியரங்கம் நடத்தும் பழக்கத்தை – அது இன்று அமைந்துள்ள வடிவிலே – உருவாக்கிய பெருமை, பேராசிரியர் கவிஞர் கா. அப்துல் கபூர் எம்.ஏ அவர்களைச் சாரும். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றிய போதுதான், உருதூ முஷாயிராக்கள் போன்று தமிழிலும் நடத்தினால், மக்கள் மனத்தை அது பெரிதும் கவருமே என்று பேராசிரியர் எண்ணினார். அதன் பயனாக, இத்தகைய கவியரங்கம் முதன் முதலாக வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியிலே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிகரமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமது சேவையைப் பெறும் வாய்ப்பினைப்பெற்ற அத்தனைக் கல்லூரிகளிலும் இத்தகைய கவியரங்கங்கள் முக்கிய இடம் பெறும்படி பேராசிரியர் ஆவனச் செய்து வெற்றி பெற்றார்.

 

பேராசிரியர் அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியிலே தமிழ்த் துறையில் பணியாற்றச் சென்றதற்குக் காரணமாய் அமைந்தது சென்னை மவுண்ட் ரோடிலுள்ள அன்றைய ‘முஹம்மடன்’ கல்லூரியாகும். இன்று அரசினர் கலைக் கல்லூரி என விளங்கும் அதில், அப்போது (1946 – 47) தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றி வந்த பேராசிரியர் அவர்கள், கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் விழா ஒன்றுக்கு அறிஞர் அண்ணா அவர்களை அழைத்தார். அந்த நாட்களிலே ஓர் அரசாங்கக் கல்லூரியிலே, அறிஞர் அண்ணாவை அழைத்துப் பேச வைப்பதென்பது, மிகவும் ‘துணிச்சலான’ செயலாகவே கணிக்கப்பட்டது. அண்ணாவின் பேச்சைக் கேட்க அலையலையாகக் கல்லூரிக் கட்டடத்துக்குள்ளே நுழைந்த மக்கள் வெள்ளத்தைக் கண்ட கல்லூரி முதல்வர் “Who is this Annadurai?” – ”யார் இந்த அண்ணாதுரை?”- என்று வியந்து கேட்டாராம். காரணம், முதல்வரையும் கலக்காமலேயே அண்ணாவை அழைத்திருந்தார் பேராசிரியர் !

 

‘முஹம்மடன்’ காலேஜில் பேராசிரியர் அப்துல் கபூருடைய மாணவர்களாக இருந்தவர்களில் இன்று அமைச்சராக இருக்கும் ஜனாப் சாதிக் பாட்சாவும், உத்தமபாளைய உத்தமர் ஹாஜி கருத்த ராவுத்தரின் அருமைப் புதல்வர் வழக்கறிஞர் காஜா முஹ்யித்தீன் அவர்களும் ஆவார்கள், பெரும்பாலான மாணவர்கள், பேராசிரியருக்கு மூத்தவர்களாகவே இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அறிஞர் அண்ணாவைப் பேராசிரியர் அழைத்து ‘முஹம்மடன்’ காலேஜில் பேச வைத்ததையொட்டி, ஒரு விசாரணை நடந்தது. திருவாங்கூர் சமஸ்தானம், ஸர்.சி.பியின் ஆதிக்கத்தின் கீழ்ப் பூரண சுயாட்சியைப் பிரகடனப்படுத்தியிருந்த நாட்கள் அவை. திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட திருவிதாங்கோடுதான் பேராசிரியர் அவர்களின் சொந்த ஊர். அதைக் காரணமாகக் காட்டி, ஒரு பிரிட்டிஷ் இந்தியப் பிரஜைதான் அரசாங்கக் கல்லூரியிலே பணியாற்றலாம் என்ற முடிவு அரசாங்கக் கல்வி இயக்குநர் அனுப்பிய ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஆணையின் காரணமாக, பேராசிரியரைப் பெறும் பெருமையை வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி பெற்றது.

 

ஆனால் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியிலே தமிழ்த்துறையில் பொறுப்பேற்றதும் (1947 -52) பேராசிரியர் அப்துல் கபூர் செய்த முதல் வேலைகளில் ஒன்று, அங்கும் அறிஞர் அண்ணாவை அழைத்துப் பேச வைத்ததாகும். அந்தக் கல்லூரிக் கூட்டத்திலே அப்போது பேசிய அறிஞர் அண்ணா, “தம்மைப் பேச அழைத்ததன் காரணமாகப் பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள் கல்லூரி விட்டுக் கல்லூரி மாறக்கூடும்; அதனால் பேராசிரியர் அவர்கள் எங்கெல்லாம் பணியாற்றச் செல்கின்றாரோ, அங்கெல்லாம் தாமும் செல்ல வேண்டி வரும்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

இவ்வாறு, கல்லூரிகளிலே தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, புரட்சி மிக்க முறையிலே நடந்து கொண்ட பேராசிரியர் தற்செயலாக நிகழ்ந்த ஒரு நல்ல நிகழ்ச்சியின் விளைவாகத்தான் தமிழில் பட்டப் படிப்பு படிக்க அண்ணாமலைப் பல்கழைக் கழகத்தில் பி.ஏ (ஆனர்ஸ்) வகுப்பில் சேர்ந்தார். பள்ளிக் கூடத்திலே மற்ற வழக்கமான பாடங்களுடன் தமிழுக்கு பதிலாக அரபியை எடுத்துப் பயின்று உயர்நிலைக் கல்வித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அப்துல் கபூர், கல்லூரியில் சேர்ந்து ‘இண்டர்மீடியட்’ படிக்கத் திருவனந்தபுரம் சென்றார். மலையாளத்தை இரண்டாம் மொழியாகப் படிக்க முடிவு செய்த அவர் விண்ணப்ப பாரத்தில் அவ்வாறே எழுதியும் விட்டார்.

 

அவருக்கு வேண்டிய ஒருவர் மலையாளியல்லாதவர்கள் மலையாளம் எடுத்துப் படித்தால், தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பிருப்பினும் அதைத் தாய்மொழியாகக் கொண்ட மலையாள மாணவர்களுடன் போட்டி போட்டு நல்ல மார்க்குகள் பெறுவது முடியாத காரியம் என்ற உண்மையை மாணவர் அப்துல் கபூருக்கு எடுத்துக் கூறினார். தமிழைப் பள்ளிக்கூடத்திலே அறவே பயிலாத நிலையிலும் ‘இண்டர்மீடியட்’டில் தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துப் படிக்க மாணவர் அப்துல் கபூர் தைரியமுடன் முடிவு செய்தார்.

 

மாகாணத்திலேயே மிக அதிகமான மார்க்குகளைத் தமிழில் பெற்று சிறப்பான முறையில் பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்றார். பட்டப்படிப்புக்குத் தமிழையே மூல பாடமாக எடுத்துப் படிக்க ஊக்கமூட்டியதும் இந்த வெற்றியேயாகும்.

 

இப்போது குமரி மாவட்டத்துலுள்ள திருவிதாங்கோடு என்னும் தமது சொந்த ஊரைவிட்டு மேல் படிப்புக்காக – அதுவும் தமிழிக்கல்விக்காக – மாணவர் அப்துல் கபூர் அண்ணாமைலைப் பல்கலைக்கழகம் செல்வதையொட்டி திருவிதாங்கோடு அன்பர்கள், பெரிய வாழ்த்துப் பத்திரம் ஒன்றை வாசித்தளித்தார்கள். அதிலே, “சீரிய குணமும் நேரிய ஒழுக்கமும் வாழ்க்கையின் நெறியெனக் கொண்டொழுகுகிறீர்” என்று குறிப்பிட்டிருப்பதற்குப் பேராசிரியர் அவர்கள் இன்றும் வாழ்ந்து வரும் நேர்மையான வாழ்க்கை நற்சாட்சி பகரும்.

 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தமிழ் பி.ஏ (ஆனர்ஸ்) படிக்கும் போது இன்று அமைச்சர்களாக இருக்கும் நாவலர் நெடுஞ்செழியன் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரும் சட்டப் பேரவைத் தலைவராக ( Speake) இருக்கும் மாண்புமிகு மதியழகனும் அங்கே படித்து வந்தார்கள். குறிப்பாக, மதியழகன் மிகவும் நெருங்கிப் பழகும் நண்பராக இருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர் அரங்கம் (தெ. ஆற்காடு மாவட்டம்) ( Muslim Students’ Federation), மாணவர் அப்துல் கபூரைத் துணைத் தலைவராகக் கொண்டு சீரிய முறையில் இயங்கியது. பட்டப் படிப்பைச் சிறப்பாக முடித்துக் கொண்டு, ‘முஹம்மடன்’ காலேஜில் பேராசிரியர் அப்துல் கபூர் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். ஆனால், ஓராண்டுக்கு மேல் அங்கே அவர் பணியாற்ற இயலவில்லை. வாணியம்பாடி இஸ்லாமியா காலேஜில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் சேர்ந்த பின், திருச்சியில் திரு R.K. ஷண்முகம் செட்டியார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் கவியரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர் அப்துல் கபூர் ‘பொங்கல்’ என்னும் சொல்லுக்கே ‘புதிய திருப்பம்’ தரும் பொருள் கூறிக் கவிதை பாடி, அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதன் இறுதிப் பகுதி அடிகள் இவை :

 

“இறையுணர்வாம் நுகத்தடியில்

அறிவெருதைப் பூட்டி

முறைதெரிந்த உழவர்களாய்

முயன்றுழுது காட்டி

ஒழுக்கமெனும் உயர்கவிதையை

ஊக்கமுடன் ஊன்றி

அழுக்காறு முதலாய

தீக்களைகள் நீக்கிப்

பல்வகையாம் கலையுணர்வைப்

பண்புரமாய்ப் போட்டு

பல்லாசைப் பகைவிலங்கு

நண்ணாமல் காத்து

துன்பநிலை அடித்தோட்டும்

தீம்பொங்கல் வந்தால்

பசிவீழும் பிணிவீழும்

பஞ்சமெலாம் வீழும்

நசியாமல் உயிர்வாழும்

நாடெல்லாம் வாழும்

குளம்பொங்கும் நிலம்பொங்கும்

குலம்பொங்கும் நல்ல

வளம்பொங்கும் மனம்பொங்கும்

வாழ்வெல்லாம் பொங்கும்.”

அன்று நிலவி வந்த பஞ்ச நிலையின் பின்னணியை நெஞ்சில் கொண்டு பார்க்கும்போது இந்தப் பாடலின் அருமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பேராசிரியர் கவிஞராகப் பாடிய இரண்டாவது கவிதை இது. அவர் பாடிய முதல் கவிதை ஜனாப் உமர்க்கண் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘நண்பன்’ என்ற வார இதழில் வெளிவந்தது. முஸ்லிம் தமிழ் வார இதழ்களுக்கு முன்னோடியாக அமைந்திருந்த ‘நண்பன்’ அச்சில் வெளியாவதற்கு முன், பேராசிரியரால் ‘கையெழுத்துப் பத்திரிகை’ யாய நடத்தப்பட்டு வந்தது. பிறகு அவரைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு அது அச்சில் வெளிவரத் துவங்கியது.

அந்த முதல் கவிதையிலே:

 

“தமிழகத்தின் மக்கட் கின்று

தங்கமான நாளடா

தமிழகத்தின் தக்க சுடர்

தோன்று தின்று பாரடா

 

வாயிழந்து வாழ்விழந்து

வாடுகின்ற வறிஞரின்

நோய்தடுக்கும் போர்தொடுக்க

வாய்த்ததின்று வாளடா.”

என்று புரட்சிப் போக்கிலே ‘நண்பன்’ இதழ் அச்சுருவில் வெளிவருவதைப் பாராட்டிப் பேராசிரியர் பாடியுள்ளார்.

பேராசிரியர் ஒரு சிறந்த கவிஞராகத் திகழ்வதற்கு வித்திட்டவர்கள் அவருடைய பாட்டனார் ( தந்தை வழிப் பாட்டானாரின் சகோதரர்) ஜனாப் ஷாஹுல் ஹமித் காதிர் அவர்களாவார்கள். காதிரீய்யா தரீகாவின் கலீஃபாவான அந்தப் பெரியார், அந்த வட்டார ஒலீமார்கள் – ஆத்மீகப் பெரியார்கள் – பற்றிய கவிதைகள் பாடியுள்ளார். பேராசிரியர் மீது அவர் தனிப்பிரியம் வைத்திருந்தார். கவிதைகளை அவர் இயற்றுவதைக் காணும் வாய்ப்பினைப் பெற்ற பேராசிரியரும் கவிதை இயற்றுவதிலேயே மோகங் கொண்டார். சுமார் 103 வயதில் அந்தப் பெரியார் மறையும்போது பேராசிரியர் அருகில் இருந்தார்.

 

மேலும், ஞானமேதை பீர் முஹமம்து ஒலீயுல்லாஹ் (ரஹ்) அவர்களுடைய ‘ஞானப் புகழ்ச்சி’ப் பாக்களைக் கேட்கும் போதெல்லாம் பேராசிரியரின் உள்ளத்திலே கவிதை ஆர்வம் பொங்கி வந்தது.

 

பேராசிரியரின் திருமணத்திற்குப்பின் இத்துறையில் அவரைப் பெரிதும் ஊக்குவித்த பெருமை, அவர்தம் மாமானாரான ஜனாப் அஹ்மது கண்ணு அவர்களைச் சாரும். சிறந்த மலையாள எழுத்தாளராக விளங்கிய அவர், முஸ்லிம் லீக் பிரமுகர் சீதி சாஹிப் அவர்களின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென்மேற்குப் பகுதியிலே, தேன் தமிழும் மதுர மலையாளமும் ஒரே குடும்பச் செல்வங்களாக வளர்ந்து வந்துள்ளன. இன்பத் திராவிடத்தின் கலைப்பெருமை எனலாம். பேராசிரியரின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணை நின்ற பெருமக்களில் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த H.M. முஹ்யித்தீன் சாஹிப் என்பாரும் குறிப்பிடத்தக்கவராவார்.

 

மனங்கவர் கவிஞராகவும் சொற்பொழிவாளராகவும் திகழும் பேராசிரியர் சிறந்த எழுத்தாளராகவும் விளங்குகின்றார். இதற்கு அத்தாட்சியாக அவருடைய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலைக் குறிப்பிடலாம்.

 

சென்னை, அண்ணாமலை, கேரளப் பல்கலைக் கழகங்கள் மூன்றிலும் சிறப்புத் தமிழ் (Advanced Tamil) பயிலும் புதுமுக வகுப்பு (PUC) மாணவர்களுக்கு இந்த நூல் ‘பாட நூலாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பேராசிரியரின் எழுத்தாற்றலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் எந்தத் தமிழ் முஸ்லிம் நூலாசிரியருக்கும் கிடைக்காத ஒரு பெருமையை இதன் மூலம் பேராசிரியர் பெற்றுள்ளார்.

 

தனிப்பெரும் சிறப்புப் பெற்ற முஸ்லிம் தமிழ்க் கவிஞராகத் திகழும் பேராசிரியரிடம் ‘மணி விளக்கு’ இதழுக்கான விசேஷப் பேட்டியிலே கேட்கப்பட்ட சில கேள்விகளையும் அவைகளுக்குப் பேராசிரியர் அளித்த பதில்களையும் கீழே தருகிறோம் :

கேள்வி : கவிதை எழுதுவதற்கென்று ஒரு தனிச் சூழ்நிலை அவசியம் எனக் கருதுகிறீர்களா ?

பதில் : “புறச் சூழ்நிலையின் – external factors – அவசியத்தை அளவுக்கு அதிகமாக வலியுறுத்துவது, வெறும் பகட்டாகும். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ‘ஆர்வம்’ தான் முக்கியம். ‘கவிதை வெறி’ தான் ஒருவரைக் கவிதை எழுத உதவும். எவ்வளவு தான் நல்ல ‘புறச் சூழ்நிலை’ இருந்த போதிலும் மனமின்றியோ அல்லது அரை மனத்துடனோ எழுதத் துவங்கினால், ஒன்றுமே ஓடாது அதே நேரத்தில் முழு ஆர்வத்துடன் எழுதப்படும் கவிதை, தடையின்றி ஓடும். உதாரணமாக ‘நாயகமே !’ பாடல்களை எப்படி எழுதி முடித்தேன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”

 

தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலே எல்லாம் – ஏன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேயா போன்ற அயல்நாடுகளிலேயே – முஸ்லிம்களின் புனித வாயிலே, வாத்திய இசையற்ற தூய கீதமாக ‘நாயகமே !” என்ற மனங்கவர் கவிதை தவழ்வதற்குப் பேராசிரியரின் உள்ளுணர்ச்சிதான் காரணம் என்பதை நம்மால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அந்த ‘நாயகமே !” என்ற பாடலை இசை முரசு நாகூர் ஹனீபா தன் வெண்கலக் குரலில் பாடியதையும் அதற்கு விளக்கமாக ‘பிறை’ ஆசிரியர் எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் ரசூலுல்லாஹ்வின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கூறியிருந்ததையும் எண்ணிப் பார்த்துப் பாராட்டினேன். அடுத்து கேட்கப்பட்ட கேள்விகளையும் அவைகளுக்கான பதில்களையும் காண்போம்.

கேள்வி : ஒரு நல்ல முஸ்லிம் கவிஞனுக்கான இலட்சியங்களைப்

பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : “அவன் ஒரு கவிஞனான இருந்தாலும் தான் ஒரு முஸ்லிம்

என்பதை உணர வேண்டும். எனவே, முதலாவதாக ஒரு

முஸ்லிமாக அவன் இருக்க வேண்டும்.”

கேள்வி : ஒரு நல்ல முஸ்லிம் எத்தகைய கவிதைகளைப் பாடலாம் –

எத்தகையவற்றைப் பாடக் கூடாது?

பதில்   : “இஸ்லாமிய நெறிக்கும் அடிப்படைக்கும் முரண்பாடில்லாத

கவிதைகளை மட்டும்தான் பாட வேண்டும்.”

கேள்வி  : கவிதைத் தொகுப்பு வெளியிடும் எண்ணம் ஏதும் உண்டா?

பதில்    : “தொகுப்பாக வெளியிடும் அளவுக்கு மிகுதியாக ஒன்றும்

எழுதிடவில்லை.”

பேராசிரியர் அடக்கம் இந்தப் பதிலில் தொனிக்கிறது. ஆனால், குழந்தைகளுக்காக அவர் எழுதி வைத்துள்ள கவிதைகள், அழகான தொகுப்பாக வெளியிட வேண்டிய அளவுக்கு அமைந்துள்ளன என்பதை அவருடன் தொடர்புள்ளவர்கள் நன்கறிவார்கள்.

தமிழகக் கல்லூரிகளின் வரலாறுகளிலே ஒரு புரட்சியை ஏற்படுத்திய பெருமை, பேராசிரியர் கவிஞர் அப்துல் கபூர் அவர்களைச் சாரும். ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஒரு கல்லூரியின் முதல்வராக (Principal) இருப்பதென்பது தமிழகத்தில் காணாத காட்சியாக இருந்தது. அந்த நிலையைப் போக்கிய பெருமை உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரிக்கு உண்டு.

ஆம், தமிழ்ப் பேராசிரியர் கா. அப்துல் கபூர் எம்.ஏ., அந்தக் கல்லூரியின் முதல்வராக 1957 –ல் பதவி ஏற்ற போது பல புருவங்கள் வியப்பால் மேலேறின ! அத்துடன், தமிழ்ப் பேராசிரியர்களின் நிலையும் ‘முதல்வர்’ (Principal) என்ற தகுதிக்கு உயர்ந்து நின்று விட்டது! பள்ளிக் கூடங்களிலிருந்து கல்லூரிகளில் பணியாற்றச் செல்வதுதான் பொதுவாக பதவி உயர்வு என்று கருதப்படுகிறது. ஆனால், கல்லூரி மாணவர்களுக்குப் போதித்து வந்த நம் பேராசிரியர் அவர்களோ, இப்போது குழந்தைகளின் பள்ளிக்கூடத்திற்கு முதல்வராக மாறியுள்ளார். – ‘மாறியுள்ளார்’ என்பதை விட ‘உயர்ந்துள்ளார்’ என்றே கூற வேண்டும். ஏனெனில் சீதக்காதி நடத்தும் கிரஸெண்ட் ரெஸிடென்ஷியல் ஸ்கூல் (Crescent Residential school) இந்தியாவிலேயே தனிச் சிறப்புடைய ஒரு பள்ளியாக அமைந்துள்ளது. பேராசிரியருக்கு ஒரேயொரு பையன் உண்டு. பெயர் ஜமால் முகம்மது.

இலக்கிய ஆர்வமும் இஸ்லாமிய உணர்வும் ஒருங்கே இணைந்து விளங்கும் பேராசிரியர், பல்லாண்டு வாழ வல்லவனை வேண்டுகிறோம்.

( இறையருட் கவிமணி தமிழ்ச் செம்மல் பேராசிரியர் கா. அப்துல் கபூர் என்ற நூலிலிருந்து )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *