பாலைப் பூக்கள்‏

இலக்கியம் நூல்கள்

palai-pookkalபாலைப் பூக்கள் என்கிற கவிதை நூலை அன்பர்.. நண்பர். கவிஞர்.. தமிழ் சுவைஞர் மு. பஷீர் இயற்றியிருப்பதும் அதனைத் தான் பிறந்த குமரி மாவட்டத்தில் வெளியிட்டதும் அதிலே கவிப்பெரும் சான்றோர்கள் பங்கேற்றதும் மனதிற்கு மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்!

தேன்மதுரத் தமிழோசையை சேதங்கள் எங்கும் பரப்பும் பணியில் தான் வாழ்ந்த துபாய் மற்றும் கத்தாரிலும் தற்போது ஒமன் நாட்டில் மஸ்கட்டிலும் ஓயாமல் தமிழ்ப்பணி ஆற்றிவரும் இதயம் கொண்ட மனிதர் எமது நண்பர் என்பதில் பெருமையுறுகிறோம்!

நாடு, மொழி, இனம், மக்கள் அவர்தம் பண்பாடு கலாச்சாரம் இவைகளில் ஆழ்ந்த பற்று கொண்டு தான் வாழ்கின்ற இடமெல்லாம் தமிழுக்காய் பணியாற்ற களம் அமைத்துக்கொள்வதும்.. அவ்வாறு அமைகின்ற களங்களில் எல்லாம் களைப்பின்றி சேவை புரிவதும் தன் இயல்பாக கொண்டிருக்கும் இவர்தம் தமிழ் ஆர்வம், தமிழ் தாகம் இவைகளின் வெளிப்பாடுதான் பாலைப்பூக்கள் என்னும் முதல் கவிதை நூலாக மலர்ந்திருக்கிறது.  தனக்குள் தோன்றிடும் கருத்துக்களை தரத்துடன் தருவதும்.. தமிழின்பால் உள்ள பற்றால் அதையே அமிழ்தென நினைப்பதும்.. தமிழர்களை ஒன்றிணைக்க ஒப்பற்ற நம் மொழியே போதும் என்கிற இவரின் கணிப்பு – மஸ்கட்டில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கத்தில் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் உயரிய இடம்தர வழிவகுத்திருக்கிறது.  கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம், நாட்டுப்புற இசை, திரையிசை மேடைகள் என வகைவகையாக விருந்துவைத்து அங்கு வாழும் தமிழர்கள் தாங்கள் அயல்நாட்டில் வாழ்கிறோமா அல்லது தமிழ்நாட்டில் வாழ்கிறோமா என்கிற ஐயப்பாட்டை இவரும் இவருடன் தலைவர் ஜானகிராமன் என நண்பர்கள் புடைசூழ நல்ல இதயங்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஆக்கங்களைத் தன் அகக்கண்திறந்து எழுதும் ஆசிரியர் இவர் என்பது இவரின் முதல் கவிதை நூல் கண்டதும் உணர்ந்த உண்மையாகும்!  வானலை வளர்தமிழ் என்னும் இலக்கிய அமைப்பு அமீரகத்தில் இயங்கி வருவதும் அதன் சார்பில் மாதந்தோறும் தமிழ்த்தேர் என்கிற இலக்கிய மாத இதழ் வெளியாவதும் – இவர் அறிந்த நாள் முதல் தவறாமல் மாதந்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் கவிதைகள் இயற்றி அனுப்பி வைக்கும் முன்னணி நபர்களுள் இவரும் ஒருவர் என்பதில் நாங்கள் மகிழ்கிறோம். அப்படி உருவான கவிதைகளில் கணிசமான கவிதைகளைத் தனது முதற்கவிதைத் தொகுப்பான பாலைப் பூக்கள் நூலில் இடம்பெறச் செய்திருப்பதில் எங்களுக்கும் பெருமை உண்டு!

இவர்தம் கவிதைகளில் எந்தப் பொருள்பற்றியும் நுனிப்புல் மேயாமல்.. அதன் ஆழத்தை அறியும் முயற்சியில் அன்பர் பஷீர் அமோக வெற்றி பெற்றுவிடுகிறார். தன்னைப் பற்றி தானே உணர்ந்தவர் மட்டுமே இத்தரணிக்கு எதையும் தந்துவிட முடியும் என்பதற்கு தக்கதோர் சான்றாய் திகழ்கிறார்!  இவரின் இனம், மொழி, நாட்டுப்பற்று இவரை இயங்கவைப்பதை இவரால் உணர முடிகிறது.. அதைத் தனது கவிதைகளில் உணர்த்த முடிகிறது!  உண்மைகளை உரத்த குரலில் முழங்க முடிகிறது!  கற்பனைகளுடன் கைகுலுக்கிக் கொண்டு எதார்த்தங்களை எடுத்துவைக்கத் தெரிந்திருக்கும் நண்பரின் இதயத்தில் கவிதைகள் தாமாக மலர்ந்து இதழ்விரிக்கின்றன..

“வீட்டுக்கு ஒரு  மரம் வை!  முடியாவிட்டால் வெட்டும் கோடாரியை சிறை வை!” மரங்கள் தலைப்பில் இவரின் பொன்வரிகள்!

கணிணி – “தகவல்களின் தடாகம்!  பிம்பங்களின் பிரவாகம்!!  புகைப்படங்களின் குகைக்கோயில்!!”  என கணிணி பற்றி விஞ்ஞானப் பார்வையில் விழா எடுக்கிறார்.

காகம் என்னும் தலைப்பில் – துஷேங்களைத் துகிலுரிக்கிறார்.. “நான் மனிதர்களால் விரட்டப்படுகிறேன் எப்போதும்!  என் மேனியின் வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்!  வர்ணங்களைப் பார்ப்பது வாடிக்கைதானே!”

காற்று – பற்றிய சிந்தனையின் பதிவு இதோ.. “அளவுகோள்கள் எனை அளக்க அவனியில் ஏதுமில்லை!  நான் அடைபடும் அளவுதான் என் அளவு!”  துல்லியமான பார்வையல்லவா?

“நாம் ஏன் மனித இனத்திற்கு தினமும் சாமரம் வீசவேண்டும் என ஒரு பிரிவு வேகமாய் பேசினாலும்,  பெரும்பான்மை உனக்கு ஒத்துழைப்பு தருகிறது!  வாழ்க ஜனநாயகம்!!”

ஆற்றல் – “அசையும்போது பிறக்கும் என்பது விஞ்ஞானம்!  அமைதியின் பிறந்தால் அது மெய்ஞானம்!

மனசே  “உண்மையைச் சொல்! நீ இரண்டாமே! உன்னிடமும் உண்டாமே ‘உள்ளே’ ‘வெளியே’ விளையாட்டு!”

கூவாத குயில்கள் – “கூட்டலும் இன்றி கழித்தலும் இன்றி.. நடுநிலைக் குறியீடு”

எனக்கு மட்டும் சிறகிருந்தால் – “அறிவைப் படி! தொழிலைக் கல்! ஒழுக்கம் ஓங்கு!  உதவிடு ஒரு பங்கு! உயர்ந்தது பாசம்! தேவை ஒருபடி மேலே உன் நேசம்!

சிவகாசிப் பட்டாசுகள் – எங்கள் சிறுவர்களின் எதிர்காலம்! வெடிக்கும்போது சிதறுவது மத்தாப்புகள் மட்டுமா?”

“விட்டில் பூச்சிகளாய் வீணாய் வாழ்வதைவிட வெளிச்சத்திற்கு விறகாகி வெந்துமடிந்திடலாம்!”

கண்ணாடி – என்பது உள்ளதைக் காட்டும் என்றுதான் நாம் அறிவோம்!  ஆனால் அது உள்ளத்தைக் காட்டவில்லை என்று சொல்விளையாட்டு நடத்தியிருக்கிறார்!  “நீ எதையும் மேலோட்டமாகவே உள்வாங்குகிறாய்!  வெளிக்காட்டுகிறாய்!  நம் வாக்காளர்களும் அரசியல்வாதிகளும்போல!”

சாத்திரம் – “அறுபத்தைந்து ஆண்டுகள் – இன்னும் அறுவடை செய்யப்படாத சுதந்திர கனவுகள்”

“ஐந்தாண்டுக்கொருமுறை புதியவர்கள் வருகிறார்கள்!  முளைப்பதோ நாம் முன்பே களையெடுத்த அதே களைகள்!”

ஏழை – “பார்வையை வீசுகின்றான் எப்போது விடியுமென்று!”

அழிபவை எல்லாம் பிறக்க வேண்டும்! அதனால் அவை இருபாலர்க்கும் இருக்க வேண்டும்! அது மூளைக்கெட்டாத புதுமை!

தனிமை பற்றி இவர் தனிமையில் யோசித்தபோது..

“தனிமை அமைதியின் மகசூல்!  அங்கே ஆசைக்கடலில் அகங்கார அலைகள் நிதர்சனமாக நித்திரை கொள்ளும்!  ஆன்மாவின் அனைத்து ஸ்வரங்களும் மெளனகீதம் பாடும்!”

“கருவினில் தனிமை களங்கமற்ற இருட்டாய்!  கற்பின் தன்மை காலமெல்லாம் உயிராய்!”

ஆசை – “அவள் கால்வரையும் ஓவியத்தை அள்ளி என் கண்களில் பதித்துவிட ஆசை”: 

எல்லா கவிஞர்களும் எழுதிவிட முடியாத வரியொன்று கண்டேன்..  பாரம்பரியம் மறவாத – தமிழ்ப் பண்பாடு வேண்டும்!  பத்தினி முகம் தேய்த்த பாசத்தின் தழும்பு வேண்டும்!” இவ்வரியைக் கண்டபோது..

“சத்தியம் சம்சாரம் அவள் சாமி அவதாரம்..அந்தப் பத்தினி பெண்ணுடன் பள்ளி கொண்டாள் சக்திப் பிரவாகம்!” என்று கவியரசு கண்ணதாசன் தம் தனிக்கவிதையில் தந்த வரிகள் நினைவில் தவழ்ந்தன!!

நமக்கான பாரம்பரியம்.. அதன் தொன்மைகள், புகழ் இவற்றை வருகின்ற தலைமுறைகள் அறிய வேண்டும் என்கிற வேட்கை கொண்ட மனிதராய் இவரை நான் அறிந்தபோது வியப்புற்றேன்!  அதற்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இவர் அவ்வப்போது வெளியிட்டு வந்தாலும் அவைகளைத் தொகுத்து உரிய நூல் வடிவம் தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற பெரும்பாலோனோர் மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்கிற இலட்சியம் கொண்ட மனிதர்.. இவர் எழுத்துக்கள் மட்டுமல்ல.. இவரின் இயக்கமும் இனி வரும் தலைமுறைக்கு வழிகாட்டி!!  அன்பும் பண்பும் பாசமும் நேசமும் இவருள் பொங்கிப் பெருகி வழிவதை இவருடன் பழகிய எவரும் அறியலாம்!  எனக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது என்பதை என்றைக்கும் மறக்க முடியாது!

அன்பிற் சிறந்தது அவனியில் இல்லை என்னும் தத்துவத்தை தன்பால் பழகும் ஒவ்வொருவரிடமும் இவர் பரிமாறிவிடுவது இயல்பான ஒன்றாக வாழும் இவருடன் தொடர்புகிட்டிய நாள் முதல் அறிகிறேன்.

இவர்போல நாமும் இந்த உலகில் சாதிக்க வேண்டும் என்பதை மட்டும் இந்த நூலுக்கு பின்னூட்டம் தருகின்ற தருணத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அன்புடன்,
காவிரிமைந்தன்
ஆசிரியர் – தமிழ்த்தேர் – அமீரகம் (துபாய்)
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் – பம்மல், சென்னை 600 075
00971 50 2519693
kaviri2012@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *