புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் இறைவனும் இறைத்தூதர் (ஸல்)அவர்களும் நமக்கு தெளிவு படுத்தியுள்ளார்கள். இஸ்லாமியக் கடமைகளில் மூன்றாவது கடமையாகிய இந்த புனிதமிக்க நோன்பு ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது.இறைவனால் கடமையாக்கப்பட்ட ரமழான் மாதநோன்பு முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள,ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும.
மார்க்கத்தில் நோன்பு என்பது உண்ணாமல், பருகாமல், மனைவியுடன் சேராமல் விலகி இருத்தல், தவிர்த்து இருத்தல், மனோ இச்சைகளை கட்டுப்படுத்துதல், இறையச்சத்தை ஏற்படுத்துதல் என்றும், கிழக்கு வெளுத்தது முதல் பொழுது அடைகின்றவரையிலும் ஞாபகமாய் அல்லது மறந்து தவறுதலாய் ஏதாவது ஒரு வஸ்து வாயுனுள் புகுந்து விடுவதை விட்டும், இன்னும் இன உறுப்பின் ஆசையை நிறைவேற்றுவதை விட்டும் தடுத்துக்கொண்டு நிய்யத்துடன் இருப்பதற்கு (ஸவ்மு) நோன்பு என்பதாக ஷரீஅத்தில் கூறப்படும் என்று ஃபிகுஹு களை இமாம்கள் நமக்கு அழகிய முறையில் விளக்கம் தந்திருக்கிறார்கள்.
எனவே ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ, பிறை தென்படாத பொழுது ஷஃபான் மாதத்தை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். காரணம் நபியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்
பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183)
ரமழான் மாதம் அருள் நிறைந்த மாதம்.
புனித ரமழான் மாதம் முஸ்லிம்களுக்காக அல்லாஹு தஆலாவினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும். இந்த வெகுமதியை விளங்கியவர்களுக்கு இந்த மாதம் அருள் நிறைந்த மாதம்.
எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
நோன்பாளியின் தூக்கம் வணக்கமாகும், அவரது மவ்னம் தஸ்பீஹாகும், அவரது (துஆ) பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும் என மாநபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். (நஸாஈ)
எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி, முஸ்லிம்)
குர்ஆனை நமக்கு தந்த மாதம்.
ரமழான் மாதம் எத்தகையது என்றால்அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக்கொண்டதும், , சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான அல் குர்ஆன் இறக்கியருளப்பட்டது., உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185)
ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை)அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).
இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம்,வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
பொதுவாக வேதங்கள் அனைத்தும் இம்மாதத்திலேயே இறங்கியிருக்கின்றன.இதனால்தான் இம்மாதத்திற்கு, அல்லாஹு தஆலாவுடைய வேதத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.எனவே இம்மாதத்தில் அதிகமாக குர்ஆன் ஷரிஃப் ஓத வேண்டும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு அதற்க்கு முக்கியத்துவம் அளித்து அதனை ஓத வேண்டும் அப்படி ஓதினால் நாளை மறுமையில் குர்ஆன் நமக்காக சுவர்க்கம் செல்ல சிபாரிசு செய்யும்.
நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும், நோன்பு கூறும், நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக! அல் குர்ஆன் கூறும் நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
நன்மைகளை அதிகம் செய்யும் மாதம்.
ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழுநூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)
நோன்பாளியின் நோக்கம் அல்லாஹு தஆலாவை பூரணமாக நெருங்குவதாகும் மேலும் நோன்பாகிறது அல்லாஹு தஆலாவிற்கு மிகப் பிரியமான வணக்கமாகும் இதனால்தான் நற்செயல்கள் அனைத்திற்கும் மலக்குகளின் மூலம் பிரதிபலனை வழங்குகிறேன்,ஆனால் நோன்பு எனக்காக மட்டுமே நோற்கப்படுவதனால் நோன்பின் பிரதிபலனை நானே வழங்குகின்றேன் என்று இறைவன் கூறியுள்ளான்.
நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ)
சுவர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் மாதம்.
நோன்பாளிக்கு சிறந்த பரிசாக சொர்க்கத்தில் ஓர் உயரிய இடம் உள்ளது.அது தான் ரய்யான் எனும் சிறப்பு வாசல் வழியாகச் செல்லும் மிகப்பெரும் பேறு வழங்கப்படுகிறது.என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்.
நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் . உடனே அவர்கள் எழு(ந்து வரு)வார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள் அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும் அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்
(அறிவிப்பவர் :சஹ்ல் ரலி நூல் :புஹாரி)
நரகத்தின் வாசல் மூடப்படும் மாதம். நரகவாதிகள் விடுதலை பெரும் மாதம்.
ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும்,நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி-முஸ்லீம் )
நோன்பு நரகத்திற்கு மனிதர்களை செல்லவிடாது தடுக்கக்கூடிய கேடயம் என்பதாகவும் நபிகளார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம்.
ரமழான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.(அறிவிப்
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே நாம் அருள் நிறைந்த மாதத்தை பெற்றிருக்கிறோம், இது பொறுமையின் மாதம் அகிலத்தின் அருட்க்கொடையாகிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்காக ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு சிறப்புகள் இருக்கின்றன என்பதைக் கூறி அவற்றைச் செய்யவேண்டுமென ஆர்வமூட்டியுள்ளார்கள். எனினும் நம்முடைய அலட்சியப்போக்கும், மார்க்கப் பற்றின்மையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டேசெல்கிறது. நாம் பெற்றிருக்கும் இந்த புனித ரமழான் இறைவனால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதியாகும். அந்த வெகுமதியின் மதிப்பை உணர்ந்து நமது கவனம் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அமல்களின் பக்கம் திருப்பி அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது,அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது,பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, இஷாவுக்குப்பின் தராவீஹ் தொழுகை இருபது ரகஅத்திலும் முழுமையாக கலந்து கொள்வது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது,ஸதகாக்கள் கொடுப்பது,
நபி (ஸல் )அவர்கள் ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை) அவர்களை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி) இது போன்று நமது அமல்கள் நல்ல அமல்களாக அமையவேண்டு.
நபிகளார் (ஸல்) அவர்கள் தடுத்த தீய செயல்களின் பக்கம் நோன்பாளிகளின் கவனம் சென்றுவிடக்கூடாது.அதில் கவனமாக இருக்கவேண்டும். பொய் பேசுவது , புறம் பேசுவது, கோள் சொல்வது,அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக் கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக் கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்,என்றாலு
எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லைஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக. அல்லாஹு தஆலா தன் கண்ணியத்தின் பொருட்டாலும், தன் நேசர் முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டாலும் நமது குறைகள் அனைத்தையும் மன்னித்து, நம் அனைவர்களின் நோன்பையும் ஏற்றுக்கொண்டு நல்லருள் பாலிப்பானாக! ஆமீன்….
மவ்லவி
J.S.S. அலி பாதுஷா மன்பயீ ஃபாஜில் ரஷாதி
தேரிருவேலி (ஷார்ஜா)