(கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்)
எனது அன்பிற்குரிய சொந்தங்களே,நாம் ஒருவருக்கொருவர் முகமன் கூறி சந்திக்கும் போதும்,பிரியும் போதும் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளில் ஒன்றுதான் துஆ செய்யுங்கள் என்பதாகும்.
அதற்கு இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்.நீங்களும் எனக்காக துஆ செய்யுங்கள் என சொல்வதையும் வழக்கமான வார்த்தைகளில் ஒன்றாகி விட்டது.
இப்படி துஆ செய்யுங்கள் என சொல்லலாமா?அவரவருக்கு அவரவர் தானே துஆ கேட்க வேண்டும்?
ஒருவர் மற்றவருக்காக துஆ கேட்பது ஷிர்க் இல்லையா?என்றெல்லாம் துஆவின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ளாத ஒருசில அறிவீனர்கள் விதண்டாவாதம் பேசுவதையும் காணமுடிகிறது.
இதனுடைய வெளிப்பாடாகத்தான் கூட்டு துஆ கூடும்,கூடாது என்ற விவாதங்கள் மேடைதோறும் நடைபெற்று வருகிறது.
ஒருவர் மற்றவருக்காக துஆ கேட்பது கூடும் என நாம் சொல்லவில்லை,கேட்பது கடமை என்றே சொல்கிறோம்.
காரணம் படைத்தவனும் அவனது திருத்தூதரும் சொல்லித் தந்த துஆ என்னும் விஷயம் கடமையல்லாது வேறென்னவாம்?
“ஆகவே(நபியே!)நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு)நாயன் இல்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக!உம் பாவத்தையும்(ஏனைய)முஃமினான ஆண்,பெண்களின் பாவத்தையும் மன்னிக்கும்படி (உம் ரப்பிடம்)பிழை பொறுப்பு தேடுவீராக”!(அல்குர்ஆன் – 47;19)
ஒருவர் மற்றவருக்காக துஆ கேட்கும் அழகிய நடைமுறையை வல்ல அல்லாஹ் தனது திருத்தூதரின் மூலமாகவே ஆரம்பித்து வைத்ததை மேலே சொல்லப்பட்டுள்ள இறைவசனம் நமக்கு உணர்த்துகிறது.
அண்ணலாரின் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்ந்த சகாபாக்களின் துஆக்கள் எப்படி இருந்தது? என்பதையும் அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறான்,
மேலும் அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இரட்சகனே!
எங்களையும்,(உன்னை)விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!
விசுவாசங்கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில்வெறுப்பை ஆக்காதிருப்பாயாக!(அல்குர்ஆன் – 59;10).
முஹாஜிரீன்கள் ஹிஜ்ரத் செய்தபோது மதீனாவாசிகள் அடைக்கலம் கொடுத்ததை நினைவு கூர்ந்து அன்சாரிகளுக்காக முஹாஜிரீன்கள் துஆ செய்த நிலைபாட்டைத் தான் மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம் நமக்கு உணர்த்துகிறது.
ஹழ்ரத் நுஃமான் பின் பஷீர்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;துஆ என்பது அதுவே ஒரு இபாதத்(இறை வணக்கம்)ஆகும்.என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்;அபூதாவுது)
நபி(ஸல்)அவர்கள் கூறி தாம் கேட்டதாக ஹழ்ரத் அபு தர்தா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;எந்தவொரு முஸ்லிமான அடியார்,தம் சகோதரருக்காக மறைவில்(அவர் முன்னிலையில் இல்லாத போது)துஆ செய்கிறாரோ,அப்பொழுது அவருக்கு ஒரு வானவர்,நீர் உம் சகோதரனுக்காக கேட்ட நலவான விஷயங்கள் போன்றவை உமக்கும் உண்டு என்று கூறுவாரே தவிர வேறில்லை.(நூல்;முஸ்லிம்)
ஹழ்ரத் அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;நபி(ஸல்)அவர் கள் செய்த துஆக்களில் இறைவா!எங்களுக்கு உலகிலும் அழகிய வாழ்க்கையை அருள்வாயாக!மறுமையிலும் அழகிய வாழ்க்கையை அருள்வாயாக!நரக வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக!என்ற துஆ வே அதிகமானதாக இருந்தது.(நூல்;புகாரி,முஸ்லிம் )
ஹழ்ரத் அபூ உமாமா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;எந்த நேரத்தில் கேட்கும் துஆ அல்லாஹ்விடம் மிக ஒப்புக்கொள்ளப்படும்?என நபி(ஸல்)அவர்களிடம் கேட்கப்பட்டது?
அதற்கு கடைசி இரவின் நடுப்பகுதியில் கேட்கப்படும் துஆவும்,பர்லான தொழுகைகளுக்குப் பிறகு கேட்கப்படும் துஆக்களும் தான் அல்லாஹ்விடம் மிகவும் ஒப்புக்கொள்ளப்படும் துஆக்களாகும் என்று நபி(ஸல்)அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்.(நூல்;திர்மிதீ)
எனதருமை சொந்தங்களே!
துஆக்களின் சிறப்பை பார்த்தீர்களா?
ஒருவர் மற்றவருக்காக கேட்கும் துஆக்களுக்கு வானவர்களின் பதில் துஆ நமக்கு கிடைக்கிறது.
துஆ எப்படி கேட்க வேண்டும்?எந்த நேரங்களில் கேட்க வேண்டும்?என்றெல்லாம் நமது உயிரினும் மேலான கண்மணி(ஸல்)அவர்களும் அவர்களின் தூய்மையான வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்த சத்திய சஹாபாக்களும் வழி காட்டி தந்த பிறகும் நமக்காகவும்,நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும் துஆ கேட்க நாம் ஏன் தயங்க வேண்டும்?
வாருங்கள் துஆ செய்வோம்!
(குறிப்பு)உங்கள் கருத்துக்களை jahangeerh328@gmail.com என்றமின்னஞ்சலுக்கு அனுப்பித்தாருங்கள்.