எம்.எம்.மீரான். பி.எஸ்.சி
ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து இரண்டில்
ஆயகலை பலவுணர்ந்து ஆள்வதற் கென்றே
வந்துதித்த “மீரான்” வளர்ந்திடும் வேளை
தந்தையும் தாயும் தரணியில் மாண்டார்.
சின்னவன் என்பினும் சிதைவிலா வண்ணம்
சென்றனன் நல்வழி. சேர்ந்தனன் மேன்மை;
கற்றவர் போற்றிடும் கல்வியும் கேள்வியும்
கற்பனை ஆற்றலும் கவிபுனைந் தாளலும்
மற்றுநற் கதைகளும் மன்றிடை முதன்மையும்
பெற்றுநற் பெருமையும் உற்றனன் உயர்வையும்;
“மின்னல் மீரான்” எனும் புனை பெயருடன்
கன்னித் தமிழுடன் கலந்திணைந் தோங்கினன்
“திருமலர் மீரான்” எனும்புனை பெயரினில்
பெருந்திறல் மிக்கவன் படைத்தவை பலவாம்;
நாடக மாக்கலும் நடித்தலும் திறமுடன்
நாடிக் கலை பல வளர்த்தலும் வென்றவன்;
இந்து முஸ்லீம் இணையநற் பாலமாய்
முந்து புகழுடை மூத்த தமிழினை
இன்ப வாழ்க்கையின் இனிய மூச்செனும்
பண்பு காத்திடும் பாங்கினை வளர்ப்பவன்;
அன்னவன் நல்வளம் நற்புகழ் பெற்றிட
அன்னை தமிழ்த்திரு நாட்டையும் போற்றிட
திண்டி வனக்குயில் திறமுறளார் தம்மினைக்
கண்டுமே வாழ்த்திடக் காண்குவீர் “மீரான் !”
நன்றி :
குயில் மாத இதழ்
மார்ச் 1973