பெருந்தமிழியல் புதிய பார்வைகள்
ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் திருமலர் மீரான் பிள்ளை
விலை : ரூ 90. பக்கங்கள் : 153
பேராசிரியர் முனைவர் திருமலர் மீரான் பிள்ளை அவர்களின் பெருந்தமிழியல் புதிய பார்வைகள் என்னும் ஆய்வு நூல் தமிழுக்கு புது வரவாகும். 19 ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்டதாக விளங்குகிறது. இந்நூலாசிரியரை பாரதிதாசன் பரம்பரையில் அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியிருக்கும் ‘குயில்’ இதழின் நிறுவனர் பாவலர் மணி டாக்டர். வகாப் அவர்களைப் பற்றிய செய்தியும் இடம்பெற்றிருப்பது மகிழ்வுக்குரிய ஒன்றாகும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து ஆய்வுக்கட்டுரைகளுமே சிறந்த ஆய்வாக விளங்குவதை படித்து உணரலாம். கட்டுரையில் பல கோணங்களில் ஆய்வு அலசப்பட்டாலும் தீர்வாக கூறியிருக்கும் முடிவு ஏற்புடைய ஒன்றாக அமைகிறது. உதாரணமாக புதிய தமிழ்க்கவிதை புதுப்பார்வை ஒன்ற கட்டுரையில் புதுக்கவிதைகளில் சந்தம் குறைவு பெற்றிருக்குமாயின் சொற்களின் ஏற்ற, இறக்கமும், ஒலிநயமும் மரபுக்கவிதை இயற்றுபவராக இருந்தாலும் கட்டுரையின் தீர்வாக குறிப்பிடும் இடத்தில் பத்திரிகையொன்று கைக்கு வாய்ப்பாகக் கிடைத்து விட்டால் எதையும் எழுதி வெளியிட்டு விடலாம் என்ற நப்பாசையும் தப்பானது. யாப்பினின்றும் முழுவதும் விலகாமல் மரபுச்சுவடுகளைச் சிதைக்காமல் புதுக்கவிதைத் தனக்குரிய இலக்கணத்தினின்று வழுவாமல் உணர்ச்சி நயமும் கருத்து வளமும் கொண்டு வளர்ச்சி பெறுதல் இனிமையாததாகும் எனக் குறிப்பிடும் ஆசிரியரின் தீர்வு நடுநிலைமையானதாக விளங்கி வலு சேர்க்கிறது.
பாரதி, பாரதிதாசன், கவிமணி, பட்டுக்கோட்டை படைப்புகளை ஆய்வு நெறியில் அலசியிருக்கிறார். தொல்காப்பிய காலம், மகளிர் நிலை, புறநானூற்றில் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் என்ற பார்வை இவரது ஆழ்ந்த அகன்ற பார்வைக்கு ஒரு சான்றாகும். இப்படி பல்வேறு புதிய கோணங்களில் கட்டுரைகளாக அமைந்துள்ளது. குவலய மூல முதல் கண்டம் குமரி பன்முகப் பார்வை என்பது அவரது ஆய்வுக்கு சிகரமாக நின்று அழகு சேர்க்கிறது.
திருமலர் மீரான் பிள்ளையின் புதிய பார்வைகள், மேலும் ஒளித்தடம் சேர்க்கட்டும்.
கிடைக்குமிடம் :
பாரதம் பதிப்பகம்
49/1 நவ்சம் வலிய பள்ளி ஜங்சன்
மணக்காடு திருவனந்தபுரம் – 695009.
நன்றி :
குயில் மாத இதழ்
ஜுன் 2010