நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம் கண்ணுக்கு இனிய அட்டைப்படத்துடன் கைகளில் கிடைத்தது! வார்த்தைமழைபொழியும் வற்றாத தமிழருவி அத்தாவுல்லா அவர்களின் கைவண்ணத்தில் தோன்றிய நூல் என்பதைவிட வேறெதுவும் அணிசேர்க்க வேண்டியிராத இந்நூலிற்கு ஆய்ந்தறிந்த தமிழறிஞர் பெருமக்கள் கவிஞர் அத்தாவுல்லாவின் அன்பிற்கினியவர்களாய் அமைந்திருந்த காரணத்தால் அணிந்துரைகள் வழங்கியிருப்பதும் அவை தமிழ்கூறும் நல்லுலகில் அடையாளம் காணப்பட வேண்டியவர் அத்தாவுல்லா என்பதற்கான முழக்கம் போலிருந்தது!
நினைவுகளில் எப்போதும் தமிழ் நீந்திக்கிடக்கும் கடல்போல் விரிந்திருக்க.. தோன்றிய எண்ணங்களை சுவைபட இவர் எடுத்துவைக்கும் அழகு தனித்துவம் கொண்டது! ஆன்மீகக் களத்திலும் இவர் ஆழங்கால்பட்டவர் என்பதால் ஆண்டவனின் அருளும் இவருக்கு அளவிலாது கொடுக்கப்பட்டிருக்கிறது! ஒரு பொருள் பற்றி மிகுதியாய் சொல்லவும் அதே பொருள்பற்றி அளந்து ஓரிருவரிகளில் சொல்லவும் கற்றவர் இவர் என்பதால் புதுக்கவிதையிலும் சரி.. மரபுக்கவிதையிலும் இவர் முன்னணியில் இருக்கிறார்!
கற்றவர்கள் மட்டிலுமே உணரக்கூடிய தரத்தில் படைப்புகளை ஆக்கம் தரக்கூடிய இவர்.. முற்றிலுமாய் மாறுபட்டு தற்கால இளைஞர்களும் இன்புறும்வண்ணம் இயற்றியிருக்கும் எளிய சிறிய கவிதைகள் நாம் அறிந்த அத்தாவுல்லாவிற்கு மற்றுமொரு முகமிருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது.
அறிவுக்கண் திறக்கும் ஆனந்தம் இருக்கிறதே அது அலாதியாகும்! அதைக் கவிதை வாயிலாக தரிசிக்கும்போது இன்பமழைபொழியும்! இதயம் முற்றிலுமாய் நனைந்துவிடும் அதிசயம் அங்கே நடக்கிறது! இதுபோன்ற அனுபவங்களைத் தன் கவிதைகளால் அடுக்கிக்கொண்டே போகும் அத்தாவுல்லா எழுத்துலகில் எத்தனையோ ஆண்டுகளாய் இருந்துவந்தபோதிலும் அச்சில் அவற்றைப் பதித்திடும் பணியில் இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்னும்போது இனி.. அவர்தம் படைப்புகள் அதிகம் வரவிருக்கிறது என்கிற இனிய செய்தியும் நமக்குத் தருகிறார்.
இந்நூல் முழுவதும் தன் கவிதைத் தேன்துளிகளைச் சிந்தியிருக்க.. அவற்றுள் சில துளிகளை இங்கே சுட்டிக்காட்டிட விழைகிறேன்!
அறிமுக வாசம் – தேனை உள்வாங்கி எரியும் இந்த தீபங்களுக்கு இனநிற வேற்றுமைகள் இல்லை!
உலக தவம் – அன்பு! இதன் முன் – வல்லரசுகளுக்கு வேலையில்லை! இதனைத் தடுக்கும் ஒரு வேலியில்லை!
முயற்சி – நம்பிக்கைகளுக்கான வேர்களில் நமது நாளைய வாழ்க்கை!
புதிய வாழ்க்கை மலரட்டும் – நீளக்கடலின் நீல அலைகளோடு சமரசம் செய் – இனி கரைதாண்டி வருவதில்லை என சத்தியம் செய்!
நினைவுகளால் பூப்பவள் – என்னென்பது உன்னை என்ன செய்ய நினைக்கிறாய் என்னை!
அதற்காகவேனும் – உன் மெளனங்கள் இனிமையானவைதான்.. அதற்காக உன் இசை மொழியை இழந்துவிட முடியாது
நிழல் கோபம் – பார்த்தும் பாராமல் நீ நடக்கும்போதெல்லாம் உன் நிழல் கேட்கிறது என்னிடம் – என்ன கோபம்?
நீ நெய்ய ஆரம்பிக்கும் வரை தெரியவில்லை உன் பால் மனது நினைவுகளால் என்னைப் போர்த்த ஆரம்பித்தபிறகுதான் தெரிகிறது உன் நூல் மனது!
வசந்தத்திருநாள் – பார்க்காமலும் சிரிக்காமலும் மறைத்துக்கொண்டவை பொய்.. கண்ட நாள் முதல் காதல் கொண்டு தலை முதல் கால்வரை உருகினேன் என்பது மெய்!
கண்கண்ட சொர்க்கம் – ஆண்டவன் சொன்னான் இப்படி.. ”தந்த சொர்க்கத்தை முதியோர் இல்லத்தில் தலைமுழுகிவிட்டு எங்கே தேடுகிறாய் மூடனே!”
சிலுவைக்காயம் – சொல்லும் மொழியில் ஒன்று என்றாலும் – உன் தேன் சிந்தும் குரலை ஒரு முறைக் கேட்பதற்காகவேனும் என் செவிகளில் வந்து ஒருமுறை சொல்லிவிடக்கூடாதா?
தாய்ப்பிரிவு – இரவு முடிந்து பகல் வந்த பிறகும் இருட்டாயிருந்தது வீடு .. விளக்காயிருந்த அம்மா அணைந்து போயிருந்தாள்!
இருட்டுத்தவம் – இருட்டு வானம் – உடுத்துக்களையும் கறுப்புப் பட்டு!
இவை மனக்கவலைகளைக் கழற்றிவிடுகின்றன. வாழ்வில் வெளிச்சங்களை விதைக்கின்றன.
இவை நிம்மதியை நெய்துவிடுகின்ற நேசத்தறிகள்!
செம்மொழியான தமிழ்மொழியாம் – எம்மொழியிலும் இல்லாமல் தம்மொழிக்குள்ளேயே மும்மொழி கண்ட செம்மொழி நீ!
மொழிகளில்கூட குலங்களைக் குறிக்கிறார்கள் – நீ மட்டும்தான் நிலங்களைக் குறிக்கிறாய்!
எல்லா மொழிகளும் ‘புறம்’ பேசுகையில்.. நீ மட்டும்தான் அகம் பேசுகிறாய்!
மறதி – வாழ்க்கைக் கடற்கரை முழுவதும் காலடித்தடங்களைக் கலைத்துவிடுகின்றன புதிதாகப் பிறக்கும் நினைவலைகள் (இந்தக்கவிதைக்குத் தகுந்த நிழற்படம் – ஏகோபித்த பாராட்டுக்களைப் பெறுகிறது).
பொய்யும் மெய்யும் – ஆடை மறைத்து அழகு காட்டின பொம்மைகள் கடைகளில்! அரையுடையணிந்து அனைத்தையும் காட்டின உண்மைகள் – சாலைகளில்!
இவரின் கவிதைகள் காற்றில் கைகுலுக்கிவிட்டுச் செல்லும் ரகமல்ல! கனமழைபோல் பெய்து பசுமையான புல்வெளிபோல் மனதில் பதிந்துகிடப்பவை!
அரைநிமிட நேரம் போதும் போல் இவருக்கு.. சடுதியில் கவிதை பிறக்கும் காட்சியை நான் கண்டிருக்கிறேன்! அகலமாய் விரிந்துகிடக்கும் இவர்மனதில் நடந்த ஆனந்தக்கும்மிகளை முதன் முறையாக நீலநதிப்பூக்கள் வாயிலாக நாம் அறியத்தந்திருக்கிறார். சுகமான ராகம் மனித மனதிற்கு காதல் நீலாம்பரிதான் என்பதை எந்த ஒரு கவிஞரும் மறுப்பதில்லை! இன்னும் சொல்லப்போனால் மறைப்பதில்லை! பட்டுத்தெறிக்கும் முத்துக்களைப்போல் ஒற்றை வரியிலும்கூட நுட்பமாய் கருத்துக்களை நுழைத்துவிடுகிற வல்லமை ஆண்டவன் அருளியது! அகத்துறை விஷயங்கள் எப்படி இப்படி ஆலாபனைபோல் வண்ணக்கோலமிடுகின்றன என்றுகேட்டால் .. அகமல்லவா.. அதிலிருந்து இன்பம் வருமல்லவா என்றுதான் விடைதர நேரும்! கையடக்கப்பிரதியில் தன் கவித்துவப் புலமையின் அடையாளங்கள் காட்டியிருக்கும் அத்தாவுல்லா அடுத்துவரும் படைப்புகளில் அவரின் ஆழ்மனப் பதிவுகளை அரங்கேற்றுவார் என்பது மட்டும் நிச்சயம்!! எதிர்பார்ப்புகளுடன்..
காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
பம்மல் – சென்னை 600 075