ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை 13 வயதுக்குக் குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று அதன் நிர்வாகத்திடம் தில்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, முன்னாள் பாஜக மூத்த தலைவர் கே.என். கோவிந்தாச்சார்யா தாக்கல் செய்த பொது நல மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி விபு பக்ரு அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வீராக் குப்தா, “ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை இளைய தலைமுறையினர் விரும்பிப் பார்க்கின்றனர். ஆனால், அந்த வலைதளத்தில் ஆபாசக் காட்சிகள் கொண்ட விடியோக்கள், புகைப்படங்கள் உள்ளன.
அண்மையில் குர்கானில் இணையதள மையத்தில் அத்தகைய காட்சிகளைப் பார்த்ததாகச் சிறுவர்கள் பிடிபட்டனர்.
சமூக வலைதளங்களைச் சிறுவர்கள் பார்வையிடவும், சமூக வலைதளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம் பெறுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றம் அனுப்பியிருந்த நோட்டீஸின்படி, ஃபேஸ்புக் சார்பில் அதன் வழக்குரைஞர் பராக் திரிபாதி ஆஜரானார்.
அவரிடம் “உங்கள் சமூக வலைதளத்தை சிறுவர்கள் பார்வையிட கட்டுப்பாடு விதிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பராக் திரிபாதி “எங்கள் வலைதளத்தில் 13 வயதுக்கு குறைந்தவர்கள் கணக்கு வைத்துக் கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
“13 வயதுக்கு குறைந்தவர்கள் சமூக வலைதளத்தைப் பார்வையிட அனுமதி இல்லை’ என்ற வாசகத்தை பெரிய அளவில் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளீர்களா?
அதை ஏற்றுக் கொண்ட வழக்குரைஞர் பராக் திரிபாதி, “நீதிமன்றத்தின் யோசனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.
“விரைந்து முடிவெடுக்க வேண்டும்’
சமூக வலைதளங்களை 13 வயதுக்கு குறைவானவர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மத்திய அரசு வழக்குரைஞரிடம் “சமூக வலைதளங்களை 13 வயதுக்கு உள்பட்டவர்கள் பார்வையிட தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு மத்திய அரசு வழக்குரைஞர் “அமெரிக்கா போன்ற நாடுகளில் 13 வயதுக்கு குறைவானவர்கள் சமூக வலைதளங்களைப் பார்வையிட அனுமதிப்பதில்லை. அதே நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்றுவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது’ என்றார்.
அதையடுத்து, “வேறு நாட்டில் அமலில் உள்ள நடைமுறையை விளக்கும் நீங்கள், முன்பே நம் நாட்டில் அதைப் பின்பற்றுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போதே காலம் கடந்து கொண்டிருக்கிறது.
சிறுவர்கள் தொடர்புடைய இந்த விவகாரம் ஒரு தலைமுறையின் பிரச்னை மட்டுமன்றி, சமுதாயம் தொடர்புடையதும்கூட. எனவே, விரைவாக இந்த விஷயத்தில் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர்.