முனைவர் எம்.எம்.மீரான் பிள்ளை

இலக்கியம் கட்டுரைகள் திருமலர் மீரான் பிள்ளை

 

எம்.ஏ., (தமிழ்) எம்.ஏ., (வரலாறு) எம்.ஏ., (அரசியல்) பி.எச்.டி.,

 

தலைவர், தமிழ்த்துறை & ஆய்வுமையம்,

பல்கலைக் கழகக் கல்லூரி

அரசு உயர்கல்வி சிறப்பு மையம்,

திருவனந்தபுரம்.

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஐம்பத்திரண்டாம் ஆண்டு சனவரி பதினெட்டாம் நாள் பிறந்தார் மீரான் பிள்ளை. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் ஜவுளிக்கடை வீட்டில் மீரா உம்மாள் முகம்மது பீவி தாய். திருவனந்தபுரம் மாவட்டம் பூஆறு புத்தன் வீட்டில் அப்துல்லா மீரான் பிள்ளை முகம்மது நூகு தந்தை.

கல்வித் தகுதிகள்

விலங்கியலில் இளங்களை பட்டம் பெற்றார். தமிழ், வரலாறு, அரசியல் மூன்று பாடங்களிலும் மூன்று முதுநிலை பட்டங்கள் பெற்றார் இவர் மேலும் மொழியியல் காந்தீயச் சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழும் பெற்றுள்ளார்.

முனைவர் பட்ட ஆய்வு

முஸ்லீம் தமிழ் வீரப்பாடல்கள் (படைப்போர் காப்பியங்களும் கதைப்பாடல்களும்)

கற்ற கல்வியகங்கள்

தேங்காய்ப்பட்டினம் அரசு தொடக்கப்பள்ளி, சுதந்திரப் போராட்டத் தியாகி அம்சி நாராயணப்பிள்ளை உயர்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லூரி, நாகர்கோவில் தெ.தி இந்துக் கல்லூரி, மதுரைப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம்

ஆசிரியப் பெருந்தகைகள்

குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் பெற்ற தமைமையாசிரியர் நீலகண்டப் பிள்ளை, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கோபால கிருஷ்ண பிள்ளை, இலட்சுமணப் பிள்ளை, அறிஞர்கள் சி. இலக்குவனார், சி. சுப்பிரமணியனார், செ. ஏசுதாசனார், முனைவர் காஞ்சனா பாலு ஆகியோரிடம் கல்வி கற்ற பெருமைக்குரியவர் இவர்.

இல்வாழ்க்கை

திருவனந்தபுரம் சாலை வணிகப் பிரமுகர் எஸ்.டி.ஏ அபூபக்கர் சாகிபின் மகள் ஆயிஷா றகீனா இவர்தம் மனைவியாவார். இவர்தம் நன்மக்கள்: பள்ளியிறுதி, மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் உயரிடம் பெற்ற இர்ஃபானா இளங்கலை வேளாண்மையியல் டாக்டர் மீர். சிஸ்த்தி எம்.பி.பி.எஸ்.

பணியாற்றிய கல்லூரிகள்

திருவனந்தபுரம் அரசு கலைக் கல்லூரி, பல்கலைக்கழக மாலைக் கல்லூரி, சித்தூர் அரசுக் கல்லூரி, பாலக்காடு விக்டோரியா கல்லூரி ஆகிய இடங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

அங்கம் வகிக்கும் அமைப்புகள்

தலைவர் இளங்கலைப் பாடத்திட்டக்குழு, கண்ணதாசன் இலக்கியக் கழகம், செயலர் அரபுத் தமிழ்ச் சங்கம், குஞ்ஞுமூசா கவிராஜர் இலக்கியக் கழகம், குமரி மாவட்ட எழுத்தாளர் முன்னேற்றக் கழகம் (69) இணையாசிரியர் குயில் திங்களிதழ் (70) உறுப்பினர் கீழ்த்திசை மொழிப்புலம், முதுகலைப் பாடத்திட்டக்குழு, இந்திய திராவிட மொழியியல் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், கேரள அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், பள்ளிப்பாட தேசிய ஒருமைப்பாட்டு குழு (86) செயற்குழு உறுப்பினர் உலக இஸ்லாமிய இலக்கியக் கழகம்.

பங்கு பெற்ற உலக மாநாடுகள்

உலக மலையாள மாநாடு (77) உலக இஸ்லாமியத் தமிழ் மாநாடு (78,90,99) உலகத் தமிழ் மாநாடு (94) உலகச் சைவத் தமிழ் மாநாடு (97) உலகத் திருக்குறள் மாநாடு (2000) உலகக் கல்விப் பண்பாட்டு மாநாடு (2000) ஆகியவற்றில் கலந்து கொண்ட பெருமைக்குரியவர் இவர்.

தேசிய மாநாடுகள், கருத்தரங்குகள்

இந்திய பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற கருத்தரங்கு (83,89,93,00,01) இந்திய மொழியியல் மாநாடு (86,87,99,02) ஞாலத்தமிழ் பண்பாட்டு மன்றக் கருத்தரங்கு (95,96,98) பாரதிதாசன் நூற்றாண்டு விழா கருத்தரங்கு (90) இஸ்லாமியச் சிற்றிலக்கிய மாநாடு (92) இந்தியத் தமிழ் இலக்கியக் கழக கருத்தரங்கு (88,89) தேசிய இடப்பெயராய்வுக் கருத்தரங்கு (85) குமர குருபரர் இலக்கிய மாநாடு (99) பாரதியார் இலக்கியக் கருத்தரங்கு (01) மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆய்வு மாநாடு (01) பெருங்கதை ஆய்வு மாநாடு (03) திருநாவுக்கரசர் இலக்கிய மாநாடு (03) பெரிய புராணம் ஆய்வு மாநாடு (01) கண்ணதாசன் இலக்கிய தேசியக் கருத்தரங்கு (90,91,94,02,03) போன்றவைகளில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

பங்கெடுத்த பணிப் பட்டறைகள்

கல்லூரி ஆசிரியர் பயிற்சி முகாம் (89,93,98) அறிவொளித் திட்ட எழுத்தாளர் பட்டறை (94) பள்ளிப் பாடநூல் தயாரிப்பு முகாம் (96,99,02,03) பள்ளி ஆசிரியர் கையேடு தயாரிப்பு முகாம் (03) பள்ளி ஆசிரியர் கையேடு மொழிபெயர்ப்புப் பட்டறை (98) பள்ளி அறிவியல் பாடநூல் மொழிபெயர்ப்பு பட்டறை (01,02,03) ஆகிய பணிப் பட்டறைகளில் கலந்து கொண்டனர்.

நூல் வெளியீடுகள்

காப்பிய உளவியல் பார்வை (77) பாரதியின் குயில்பாட்டு, பாரதிதாசனின் குடும்ப விளக்கு, கவிமணியின் மருமக்கள் வழி மான்மியம் ஆகிய குறுங்காப்பியங்கள் பற்றிய நவீன உளவியல் ஆய்வு. நாட்டுப்புறத் தமிழியல் (85) அறிமுகமாகாத வீரக் கதைப்பாடல்கள் பற்றிய ஆய்வு ஆகியவை இவர் எழுதிய நூல்களாகும்.

பதிப்பித்த நூற்கள்

இலக்கிய பூங்கா தொகுதி நான்கு (74) இலக்கியப் பூங்கா தொகுதி ஐந்து (75) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுப்பு) ஆகியவற்றை இவர் பதிப்பித்துள்ளார்.

ஆய்வுக் கட்டுரைகள்

சைவ இலக்கியம், முஸ்லீம் தமிழ், நாட்டுப்புறவியல், மொழியியல், தற்காலக் கவிதை பற்றி பல்வேறு ஆய்வுக் கோவைகள், மலர்கள், இதழ்கள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

வாழ்வுக் குறிப்பு இடம் பெற்ற நூற்கள்

அமெரிக்கா வாஷிங்டனிலுள்ள காங்கிரஸ் நூலகத்தின் ஆசிரியர் நூற்தொகை, சாகித்ய அக்காடமியின் இந்திய எழுத்தாளர் யாவர் எவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உலகத் தமிழ் எழுத்தாளர் யார் எவர், மத்திய மொழிகள் நிறுவனத்தின் இந்திய மொழியியலாளர் களஞ்சியம், புதுதில்லி எழுத்தாளர் இயக்கத்தின் உலக எழுத்தாளர் வாழ்வுக் குறிப்பு ஏடு, ஆசிய எழுத்தாளர் களஞ்சியம், இந்தோ அமெரிக்க எழுத்தாளர்கள், இந்திய அறிவாளர் தகவல், கேரளவரலாற்றுக் கழகத்தின் முஸ்லீம் அறிஞர் தகவல் களஞ்சியம், உலக இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் முஸ்லீம் எழுத்தாளர் யார் எவர், தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் எழுத்தாளர்கள், இலக்கிய உலகம், சிங்க்ஜியின் குமரி மாவட்ட எழுத்தாளர் யார் எவர்? போன்ற நூல்களில் இவர் தம் வாழ்வுக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

பாடத்திட்ட அங்கீகாரம்

காப்பிய உளவியல் பார்வை, நாட்டுப்புறத் தமிழியல் ஆகிய நூற்களும் இஸ்லாமியத் தமிழ் வீரப்பாடல்கள், முஸ்லிம் புலவர்கள் அறிமுகப்படுத்திய இலக்கிய வகைகள், பறவையியல் அறிஞர் சாலிம் அலி, கண்ணதாசனின் செப்பு மொழிகளில் அரசியல் விமர்சனம் ஆகிய கட்டுரைகளும் பள்ளி, கல்லூரி, இளங்கலை, முதுகலைப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

சிறப்புச் சொற்பொழிவுகள்

பல்கலைக் கழக மானியக் குழுவின் கல்லூரி சிறப்புச் சொற்பொழிவுகள் (94,96,98) மதுரைப் பல்கலைக்கழக இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளைச் சொற்பொழிவு (95) ஆகியன இவர் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவுகள்.

பரிசுகள்

அகில இந்திய மீலாது கட்டுரைப் போட்டி விருதுகள் (70,71) முதுகலை கற்கும் காலத்தில் ஆய்வுத் தொகுப்புகள் பதிப்பித்து வெளியிட்டமைக்காக இலக்கிய வட்ட விருது (76) சிறந்த ஆய்வுக் கட்டுரைக்காக இந்தியப்பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்ற அறக்கட்டளை விருது (2001) போன்றவற்றையும் இவர் பெற்றுள்ளார்.

பட்டங்கள்

சிலேடைச் சித்தர், மதி நாவலர், எழுச்சிக் கவிஞர்

அறிஞர் பாராட்டுகள்

முதுகலை பயிலும் காலத்தில் ஆய்வுத் தொகுப்பு பதிப்பித்து வெளியிட்டமைக்காக அறிஞர்கள் மு. வரதராசனார், வ. அய். சுப்ரமணியனார், அ.மு.பரமசிவானந்தனார், சாலை இளந்திரையனார், சாலினி இளந்திரையனார், மா. இளையபெருமாள், வல்லிக் கண்ணன், பா. வளனரசு ஆகியவர்களால் பாராட்டப் பெற்றவர். உளவியல் நோக்கு ஆய்வு நூலுக்காகவும், அறியப்படாத வீர கதைப் பாடல்கள் பற்றிய ஆய்வு நூலுக்காகவும், அறிஞர்கள் வ.சுப. மாணிக்கனார், சி. பாலசுப்ரமணியனார், ச.வே. சுப்பிரமணியனார், தமிழண்ணல், ஏ.என். பெருமாள், எழில் முதல்வன், சி. நயினார் முகம்மது கா.அப்துல் கழர் அப்துற்றகீம் எம்.எம். உவைஸ், கேரள முன்னாள் ஆளுநர் பா. ராமச்சந்திரன் ஆகியவர்கள் பாராட்டியுள்ளனர்.

கதை, கவிதைப் படைப்புகள்

பல்வேறு பத்திரிகைகள், இதழ்கள், மலர்கள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகள் இவர் எழுதியுள்ளார். இது மட்டுமல்லாமல் பல்வேறு இதழ்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளும் இவர் எழுதியுள்ளார்.

சிறப்பு செய்திகள்

பதினைந்து வயதிலிருந்தே மெரீனா (சென்னை) குயில் (திண்டிவனம்) மலர்மதி (திருவை) கன்னி (நெய்யூர்) கல்லூரிக்கனி (சரல்) பாமா (நாகை) போன்ற இதழ்களில் கதை, கட்டுரை, துணுக்குகள் ஆகியவற்றை இவர் எழுதி வருகின்றார். தமிழில் இருகாப்பியங்கள் பதினான்கு சிற்றிலக்கியக்கங்கள் படைத்தளித்த குஞ்ஞுமூசா கவிராஜர், இசைத்தமிழ் கீர்த்தனங்கள் பாடிய மலையாளம் பாலகவி பக்கீர் மீறான்பிள்ளை ஆகியவர்களின் பரம்பரையில் இவர் பிறந்தவர். இனிக்கச் சிரிக்க சிந்தனை சிறக்க ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சிலேடைச் சொல்லாற்றல் பெற்றவர்; வசீகரக் கவியாற்றல் வாய்க்கப் பெற்றவர் ஒழுங்கும் கட்டுப்பாடும் மிக்க நிர்வாக ஆட்சித்திறன் கொண்டவர்.

நிறைவாக

திருமலர், திருவேந்தன், இப்னு முகம்மது அபூஇர்ஃபானா, அபூமீர் சிஸ்த்தி, எனும் புனைப்பெயர்களில் தமது படைப்புகளை வெளியிட்டு வருகின்றார். சொற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர், கவியரங்கக் கவிஞர், ஆய்வுக் கட்டுரையாளர் எனும் நிலைகளில் தமிழ்ப்பணி ஆற்றி வரும் தகமையாளர் இவர்.

 

 

( தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழியல் ஆய்வு பதிவு மையம்

திசம்பர் 2003

பக்கங்கள் 464

விலை ரூ. 350

( தமிழியல் ஆராய்ச்சி அறிஞர்கள்

எனும் நூலிலிருந்து

பதிப்பாசிரியர் முனைவர் சி இலட்சுமணன் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *