அமெரிக்காவின் வாஷிங்டன் நூலகத்தின் நூலாசிரியர் தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றிருக்கும், பேராசிரியர், டாக்டர் திருமலர் மீரான் பிள்ளையின் பட்டங்கள் : பி.எஸ்சி., எம்.ஏ. தமிழ், பி.ஹெச்டி., மொழியியல் சான்றிதழ், காந்தியம் சான்றிதழ், எம்.ஏ. வரலாறு.
எழுதிய நூல்கள் : காப்பிய உளவியல் பார்வை, நாட்டுப்புறத் தமிழியல், முஸ்லிம்கள் முனைந்த முத்தமிழ் முதன்மைப் பார்வை, உள்ள வரை, பெருந்தமிழியல் புதிய பார்வைகள்.
பதிப்பித்த நூல்கள் : இலக்கியப் பூங்கா, தமிழ் இலக்கியத்தில் மனிதம், தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம், தமிழ் இலக்கியத்தில் புதிய போக்குகள், தமிழ் இலக்கியத்திற்கு கேரளாவின் பங்களிப்பு.
“பெருந்தமிழியல் புதிய பார்வைகள்” என்ற நூலில் தமிழ் இனத்திற்குத் தேவையான எண்ணற்ற தகவல்களை தந்துள்ளார்.
கன்னியாகுமரிக்குத் தெற்கே கடல் கொண்ட தமிழர் வாழ்ந்த பெரும் நிலபரப்பு – லெமூரியா கண்டம் – கடல் பேரழிவால் முற்றிலும் அழிந்து கடலுக்குள் கரைந்து போன வரலாறு ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முத்தமிழோடு நான்காவது தமிழைப் பற்றியும் ஆசிரியர் மீரான் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
பக்தியின் பெயராலும், முக்தியின் பெயராலும் மூடச் சகதியில் சிக்குண்டு தவிக்கும் தமிழர்களுக்கு விஞ்ஞானம் – அறிவியல் – இன்றைய முக்கிய தேவை என்று சமூக சிந்தனையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதற்கு உரமூட்டும் வகையில் நான்காவது தமிழே விஞ்ஞானத் தமிழ் என்கிறார் ஆசிரியர். சொல்வதோடு இல்லாமல் தமிழர்களின் விஞ்ஞான அறிவு சங்க காலத்திலிருந்தே வெளிப்படுவதை உணர்த்தி இருக்கிறார்.
பரிபாடலில் (24:25) காற்று, நெருப்பு, நீர், கடல், நிலம் பற்றி கூறி உலகம் தோன்றியதை குறிப்பிடுவது இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கு நெருக்கமாக இருக்கிறது என்கிறார்.
வான மண்டலத்தின் இயல்பு பற்றி புறநானூற்றிலும், எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப என்று திருக்குறளிலும், உயிரினங்களின் அடிப்படையிலான ஐந்தினைப் பாகுபாடுகளும் – விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகள் என்று விளக்கி இருக்கிறார் மீரான் பிள்ளை.
அடுத்து தொல்காப்பியத்தை கூர்ந்து பார்க்கும் போது பெண்களுக்கு அக்காலத்தில் பெரிய அளவில் உரிமைகள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை என்பதையும் விவரித்திருக்கிறார். இதுவும் ஆராய்ச்சிக்குரியது என்கிறார். தன் கருத்தாக இதற்கெல்லாம் அன்றும் சரி; இன்றும் சரி; ஆணாதிக்க சமூகமே காரணமாக இருக்கக்கூடும் என்று விடையும் சொல்கிறார்.
புறநானூற்றைப் பற்றி கூறும் போது ஆசிரியரின் ஆழ்ந்த புலமையை காண முடிகிறது. அன்றைய தமிழர்களின் உயர்பண்பை (171 வது பாடல்) பற்றிக் குறிப்பிடும் போது “நாள் தோறும் சென்றாலும் முன்னர் தந்தேன் எனாது உண்கலம் நிறைக்கும்” என்கிறார். அடடா ! மனம் சிலிர்க்கிறது.
தமிழர்கள் தமிழ் இலக்கியங்களைப் படிக்காமல், தமிழர்களை அடிமைகளாகவும், மூடர்களாகவும் ஆக்கின்ற அந்நிய மொழி இதிகாசங்களையும், அறிவு பூர்வமற்ற புராணங்களையும் படித்து வாழ்நாளை வீணாக்கும் கொடுமைதான் நம் நினைவுக்கு வருகிறது. மீரான் பிள்ளை போல், நூறு மீரான் பிள்ளைகள் தோன்றினால் தமிழ் இனம் உருப்படும்.
நூல் கிடைக்குமிடம் :
திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை
T.C. 18/1383 ( 3 )
மீராஸ், குன்னப்புழா ஜங்ஷன்
ஆராமடை
திருவனந்தபுரம் 695 032
கேரள மாநிலம்
விலை ரூ. 90
நன்றி :
தமிழ் நலக் கழகம் மாத இதழ்
ஜனவரி 2012