பேரா. திருமலர் மீரான் கவிதைகள்
இதுவும் ஒரு சங்க காலம்
சாதிக்கு ஒரு சங்கம் – காரியம்
சாதிக்க ஒரு சங்கம்
வீதிக்கு ஒரு சங்கம் – வெறும்
வீணருக்கு ஒரு சங்கம்
வாதிக்க ஒரு சங்கம் – வாய்
வம்புக்கு ஒரு சங்கம்
பாதிக்கு மேலிருக்கும்
தமிழர்களை பாதிக்கும்
சங்கங்கள் எல்லாமே
ஆதிக்க சங்கங்கள் !
இரண்டாவது இருண்ட காலம்
தெலுங்கர், மராட்டியர்
கன்னடியர், உருது, ஆங்கிலேயர்
சமஸ்கிருத ஆட்சியர் காலத்தில்
இருட்டறையில் கிடந்த தமிழ்
இன்று மீண்டும்
இருட்டறைக்கே !
நிமிர்ந்து நில் தமிழா?
குட்டக் குட்டக் குனிந்து
கிடந்தது போதாதா
இனியாவது தமிழா
சொந்தக் கால்களில்
நிமிர்ந்து நின்றிடு !
டமிள் வாள்க
கல்வி அமைச்சர்
உலகத் தமிழ் மாநாட்டில்
பங்கெடுக்க பாரீஸ் போகிறார்
விமான நிலையத்தில்
மகன் வழியனுப்பினான்
“டாடி! டாட்டா”
சாட்சி
அக்னி சாட்சியாக
கை பிடித்தவன் அவளை
அடுத்த சில
மாதங்களில்
கொண்டுவா சீர்வரிசை என்றதால்
வெறுத்துப் போன அந்த
ஆரணங்கை அக்னியே
ஆரத்தழவியது
நன்றி :
தமிழ் நலக் கழகம் மாத இதழ்
மார்ச் 2013